ADDED : அக் 25, 2024 08:04 AM

திருச்செங்கோட்டு வேலவன்
“உங்க வீட்டில் யாருடைய ஆட்சி... மதுரையா? சிதம்பரமா? என்ற தலைப்பில் முன்பு பட்டிமன்றம் நடக்கும். மதுரை ஆட்சியே சிறந்தது என நடுவர் தீர்ப்பு கொடுப்பார். பட்டிமன்ற நடுவராக இருந்திருந்தால் என்ன தீர்ப்பு கொடுப்ப பாட்டி” எனக் கேட்டான் யுகன்.
''நான் நடுவரா இருந்தா சிதம்பரமும் வேணாம், மதுரையும் வேணாம், திருச்செங்கோட்டு ஆட்சி தான் வேணும்னு தீர்ப்பு கொடுத்திருப்பேன்”
“அது என்ன திருச்செங்கோட்டு ஆட்சி. கேள்விப்பட்டதே இல்லையே. புதுசா இருக்கு”
“சிவனும் பார்வதியும் அர்த்தநாரீஸ்வரா இருந்து அருள்புரியும் தலம் திருச்செங்கோடு. அதனாலதான் அந்தப் பெயர். ஒவ்வொரு வீட்டிலும் கணவன், மனைவி இருவரும் கலந்து பேசி முடிவு எடுக்கணும். அப்படி எடுத்தா வீடு நலமா இருக்கும். அதான் திருச்செங்கோட்டு ஆட்சி”
“இப்படி ஒன்னு இருக்கா?” தலையை சொறிந்தபடி கேட்டான் யுகன்.
“ஆமா யுகா, நம்ம முருகனுக்கு பிடிச்ச இரண்டு கோயில்களில வயலுார் ஒன்னுன்னு சொன்னேன் இல்லையா. அடுத்தது திருச்செங்கோடு. இது சேலத்துக்கும் ஈரோட்டுக்கும் நடுவில் இருக்கு. செங்கோட்டு வேலவர் மலை மீது இருக்காரு. இங்க மலை ஏற பேருந்து வசதி இருக்கு. காரிலும் போகலாம். 1200 படிகள் இருக்கு”
“சிவன் குடும்பத்தோட உள்ள கோயிலா பாட்டி?”
“நிச்சயமா... சைவம் போற்றும் 63 அடியார்களில் ஒருவரான விறன்மிண்ட நாயனாரின் அவதாரத் தலம். ஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. 274 சிவாலய வரிசையில் 208 வது தலம். கருவறையில அர்த்தநாரீஸ்வரர், பாகம்பிரியாள், செங்கோட்டு வேலவர் தனித்தனி சன்னதியில் இருக்காங்க. இங்குள்ள மலை ஒருபுறம் பார்த்தால் ஆணாகவும், வேறொரு இடத்தில் இருந்து பார்க்கும்போது பெண் போலவும் தோற்றம் அளிக்கும். தெய்வத்தன்மை கொண்டதாகவும், செங்குத்தான மலையாகவும் இருப்பதால் திருச்செங்கோடு என அழைக்கப்படுது. அதனாலேயே மலையின் பெயர் ஊருக்கும் வந்துச்சு. திருச்செங்கோடு மலையே லிங்கமாக இருப்பதால் மலைக்கு எதிரே நந்தி இருக்கு. அதுமட்டுமில்ல, பவுர்ணமியன்று மலையைச் சுற்றினால் கைலாயம், வைகுண்டத்தை சுற்றிய பலன் கிடைக்கும்''
“கைலாயம் சரி, அது எப்படி வைகுண்டம் வரும்?”
“பரவாயில்லையே... சொல்றதை ஆழமா தான் உள்வாங்குற. இந்த கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிகேசவப் பெருமாள் சன்னதியும் இருக்கு. அதனால வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும். அப்புறம் நீயும் தேவந்தியும் அப்பப்ப எலியும் பூனையுமா மாறி சண்டை போடுறீங்களே... திருச்செங்கோட்டை தரிசனம் பண்ணிட்டு வாங்க. தம்பதி ஒற்றுமை ஏற்படும்.
'யாமிருக்க பயமேன்'னு நம்மை காக்க முருகன் முன் நிற்பார்”
“பாட்டி, நீ இங்கு வந்த பிறகு எவ்வளவோ பரவாயில்லை. உன் எதிரில் சண்டையிட வேணாம்னு தேவந்தி அமைதியா இருக்கா. இல்லைன்னா வீட்ல அப்பப்ப பாத்திரம் பறக்கும் தெரியுமா! அக்கம் பக்கத்துல கேட்கக் கூடாதுன்னு பறந்து பறந்து நான் பிடிப்பேன். நம்ம இந்திய அணிக்காக கிரிக்கெட்ல புடிச்சிருந்தா கப்பு கிடைச்சிருக்கும். இந்த நாடு ஒரு நல்ல பீல்டர இழந்துருச்சு தெரியுமா'' என மனைவிக்கு கேட்கட்டும் என உரத்த குரலில் சொன்னான் யுகன். ஆனால் பாட்டி இருந்ததால் அடுப்படிக்குள் அவள் பதுங்கிக் கொண்டாள்.
“வீடுன்னா சண்டை இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் இருந்தா தான்டா சுவாரஸ்யம். ஊடலும், கூடலும் இருந்தால் தான் அன்பு பலம் பெறும்”
“சரிதான் பாட்டி. நீ திருச்செங்கோடு பத்தி சொல்லு”
''பிருங்கி முனிவர் ஒருமுறை கைலாயம் வந்தார். அங்கு சிவனும் பார்வதியும் அருகருகே இருந்தாலும் வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார் முனிவர். இதனால் பார்வதிக்கு கோபம் வரவே, 'என்னை அவமதித்ததால் சக்தி இழப்பாய்'' என சாபமிட்டார்.
இதன் பின்னரே சிவன், “சக்தியில்லாமல் சிவம் இல்லை” என பார்வதிக்கு உடம்பில் இடப்பாகத்தில் இடம் அளித்தார்.
இருவரும் இணைந்த கோலம் 'அர்த்தநாரீ' எனப்பட்டது. அவரே பூவுலகில் திருச்செங்கோட்டில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதயத்தில் இருக்க வேண்டியவர் மனைவி என்பதை உணர்த்துகிறார்”
“கடவுளே ஒத்துக்கிட்டா சரிதான் பாட்டி. சரி, நம்ம முருகன் எப்படி சிறப்பு பெற்றார்”
''சொல்றேன் கேளு. வெள்ளை பாஷாண சுயம்பு திருமேனியாக இருக்காரு செங்கோட்டு வேலவரான முருகன். இவரது பக்தர் புலவர் குணசீலர் என்பவர். இவரை பாண்டிப் புலவரேறு என்ற அறிஞர் ஆணவத்தால் போட்டிக்கு இழுத்தார். 'இது என்ன சோதனை?' என முருகனைச் சரணடைந்தார் குணசீலர். போட்டியன்று காலையில் புலவரேறு மலையின் மீது ஏறிக் கொண்டிருந்தார். அப்போது திருச்செங்கோட்டு மலை(நாகமலை, பாம்புமலை, சர்ப்பகிரி என்றும் பெயருண்டு) ஏன் படம் எடுத்து ஆடவில்லை என்னும் பொருளில் பாட்டு பாடியபடி சென்றார். அங்கு நின்ற சிறுவன் ஒருவன், 'முருகன் மயில் வாகனம் கொத்தும் என்றே' என்று
பாடி விட்டு 'பக்தர் குணசீலரின் மாணவன் நான்' என்றான். புலவரேறு மனம் திருந்தி பக்தரிடம் மன்னிப்பும் கேட்டார்.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் வைகாசி திருவிழாவில் 'யாமிருக்க பயமேன்' எனச் சொல்லி குணசீலரைக் காப்பாற்றும் வைபவம் நடக்கிறது.
“யாமிருக்க பயமேன்னு மனசுக்குள் ஒருமுறை நினைச்சாலே நிம்மதி ஏற்படும். பயம் விலகி ஓடுமே பாட்டி”
“இதுதான் கடவுள் அருள் மனதுக்குள் நிகழ்த்தும் மாயவித்தை. எதற்கும் சமாதானமாக நம் மனம் கடவுள் நம்பிக்கையில் கரைந்து உருகிப் போகும் மாயம். திருச்செங்கோடு மலையில் 60 அடி நீள ஐந்து தலை நாகம் இருக்கு. அதனருகில் சத்தியப்படிக்கட்டுகள் என்னும் 60 படிக்கட்டுகள் இருக்கு. அதன் மீது நின்று சத்தியம் செய்யும் வழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது. சத்தியப்படி முருகன் என்ற பெயரும் சுவாமிக்கும் வந்தது. இங்கு அருணகிரிநாதர் 21 பாடல்கள் பாடியிருக்கார். ராகு தோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம் உள்ளவர்கள் நாகரை வழிபடுவாங்க.
திருஞானசம்பந்தர் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களுக்கு குளிர் காய்ச்சல் வந்தது. 'அவ்வினைக் கிவ்வினை' என்ற பதிகத்தை பாடினார். அதில் 'தீவினை வந்து எம்மைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்' என சிவனை வழிபட காய்ச்சல் மறைந்தது.
சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரத்தன்று திருவிழா நடக்கும். அப்போது நேர்த்திக் கடன் செலுத்தி, அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவரை தரிசிக்கிறாங்க. தம்பதி கருத்து வேறுபாடு, நாக, ராகு, சர்ப்ப, களத்திர தோஷம் தீர வழிபாடு செய்றாங்க. வீடு அமைதியா இருக்க ஆசைப்படுறியே... நீயும் தேவந்தியும் இங்க போயிட்டு வாங்க”
“சரி பாட்டி... போயிட்டு வர்றோம். இப்ப சமையல் ஆயிடுச்சு. சாப்பிடலாம்” என தேவந்தி இருவரையும் அழைத்தாள்.
-இன்னும் இனிக்கும்
பவித்ரா நந்தகுமார்
94430 06882