ADDED : நவ 07, 2024 09:33 AM

வல்லக்கோட்டை
கொள்ளுப்பேரனான அமுதனுக்கு கந்த சஷ்டி கவசத்தை வரிவரியாக சொல்லிக் கொடுத்தார் பாட்டி. சாப்பிட்டுக் கொண்டிருந்த பேரன் யுகனும், அவனது மனைவி தேவந்தியும் மழலை மொழியில் அமுதன் கந்தசஷ்டி கவசத்தை சொல்வதைக் கண்டு ரசித்தனர். சாப்பிட்டு முடித்து பாட்டிக்கு எதிரில் அமர்ந்தான் யுகன்.
“எப்படியோ கந்தசஷ்டி கவசத்தை சொல்லிக் கொடுக்க தொடங்கிட்ட போல. எங்க ரெண்டு பேருக்கும் இது தோணவே இல்லை” என்றான் யுகன்.
“சின்ன வயசுல கண்ட பாட்டெல்லாம் சொல்லிக் கொடுக்குறீங்க. ஆனால் ஆன்மிக பாடல்களை சொல்லிக் கொடுக்கறதில்ல. அடியவர்களால எழுதப்பட்ட மந்திர வார்த்தைகள் நமக்குள்ள நிறைய நேர்மறை எண்ணங்களை விதைச்சிக்கிட்டே இருக்கும். என் பிரசவத்தப்ப எங்கம்மா கந்த சஷ்டி கவசம் பாடினாங்க. 'காக்க காக்க கனகவேல் காக்க' என அவங்க பாடும் போது பிரசவ அறைக்குள் இருந்த எனக்கு கடவுள் நம்மைக் காக்க நம்முடனே இருப்பது போல உணர்வு வந்தது. தெய்வ பலம் உடனிருந்தா மனசுல எப்படி ஒரு தன்னம்பிக்கை சுரக்கும். இதெல்லாம் அனுபவிச்சவங்களுக்குத் தான் தெரியும்”
“உண்மை தான் பாட்டி. சரி, இன்னைக்கு எந்த கோயில் பத்தி சொல்லப் போற''
“காஞ்சியில் இருந்து 32 கி.மீ., துாரத்திலும் கிழக்கு தாம்பரத்திலிருந்து முடிச்சூர் ஒரகடம் வழியா வந்தா 28 கி.மீ., துாரத்திலும், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து 10 கி.மீ., துாரத்திலும் வந்தா எந்த ஊர் வரும்னு சொல்லு”
தெரியலையே... நீயே சொல்லு பாட்டி”
“இழந்ததை மீட்டுத் தர்ற கோயில் 'வல்லக்கோட்டை கோயில்' என கம்பீரமாக ஆரம்பித்தார் பாட்டி. இதுக்கு இன்னொரு பெயர் கோடைநகர். அருணகிரிநாதர் திருப்போரூர் முருகனை தரிசித்து விட்டு அங்கு தங்கியிருந்தார். மறுநாள் திருத்தணி முருகனை தரிசிக்க நினைத்திருந்தார். கனவில் தோன்றிய முருகன், 'கோடை நகர் மறந்தனையே...' என தெரிவிச்சார். மறுநாள் திருத்தணி செல்லும் வழியில் கோடை நகர் என்னும் வல்லக்கோட்டைக்குச் சென்றார்”
”இழந்ததை மீட்டு தரக்கூடிய கோயில் சொன்னியே பாட்டி?”
“பகீரதன் என்ற மன்னன் சலங்கொண்டபுரம் என்ற நகரை ஆட்சி செய்தான். அவரை பார்க்க வந்த நாரத மகரிஷியை, ஆவணத்தால் மன்னன் அவமதித்தான். இதனால் கோபம் ஏற்படவே கோரன் என்ற அசுரனிடம், 'பகீரதன் தன்னை யாரும் வெல்ல முடியாது என கர்வம் கொண்டுள்ளான். நீ அவன் மீது போர் தொடு' என கலகத்தை ஏற்படுத்தினார். இதையடுத்து அசுரன் போர் தொடுக்க பகீரதன் நாட்டை இழந்து காட்டுக்குச் சென்றான். தவறை உணர்ந்து நாரதரிடம் மன்னிப்பு கேட்டான். துர்வாசரிடம் உபதேசம் பெறும்படி நாரதர் வழிகாட்டினார். குறிப்பிட்ட இடத்தில் முருகன் தன் மனைவியருடன் குடி கொண்டிருப்பதாகவும், வெள்ளி அன்று விரதம் இருந்து அவரை வழிபட்டால் விடிவு பிறக்கும் என்றும் துர்வாச முனிவர் தெரிவித்தார். அதன்படி பகீரதன் வழிபட்ட தலமே வல்லக்கோட்டை. இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகன் அருளாட்சி செய்கிறார். இங்கு வழிபட்ட பின்னர் பகீரதன் இழந்த நாட்டை அடைந்தான்''
“இந்தக் கோயிலுக்கு வேற என்ன சிறப்பு பாட்டி”
'வல்லன்' என்னும் அசுரனை முருகன் சம்ஹாரம் செய்தது இங்குதான். தேவகுருவான பிரகஸ்பதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்திரன் இங்கு வஜ்ரதீர்த்தம் அமைத்து முருகனை வழிபட்டார். பகீரதன் விரதம் இருந்து விமோசனம் பெற்ற நாள் வெள்ளி. அதனால் இங்கு வெள்ளியன்று வழிபடுவது விசேஷம். ஏழு வெள்ளிக்கிழமை தொடர்ந்து விரதம் இருந்து வழிபட்டால் இழந்தது கிடைக்கும். அதுமட்டுமல்ல. இங்கு சிற்பங்களும் விசேஷமானது தெரியுமா?”
“அது எப்படி?”
“இங்குள்ள சிற்பங்கள் அனைத்தும் பல்லவ பாணியில் அமைந்தவை. பல்லவ மன்னர்கள் பல இடங்களிலும் கோயில்களை எழுப்பினாங்க. கோடை நகரான வல்லக்கோட்டை கோயிலும் அவற்றில் ஒன்று.”
“பல்லவர்களுடைய சிற்பக்கலை எப்படி சிறந்தது?“
“பல்லவர்கள் பாறைகளை குடைந்து சிற்பம் செய்வதில் வல்லவர்கள். அவர்கள் எழுப்பிய கோயில்கள் அனைத்திலும் பாறைகள் மீது சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதை செதுக்குவதற்கு கற்களோ, உலோகத்தையோ அவர்கள் பயன்படுத்தாமல் எப்படி சிற்பங்களை செய்தார்கள் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர்”
''அப்போ... காலத்தால ரொம்ப பழமையான கோயிலா வல்லக்கோட்டை”
“ஆமா. முருகன் வழிபாடே பழமையானது தானே. புறநானுாற்றில் முருகன் கோட்டம் பற்றிய குறிப்புகள் இருக்கு. கோட்டம் என்றால் கோட்டை என அர்த்தம். காடுகள், மலைகள், நதிகள், தீவுகள், குளங்கள் என பொது இடங்களில் எல்லாம் முருக வழிபாட்டை செய்ததாக திருமுருகாற்றுப்படை சொல்கிறது. இதன் மூலம் ஆதிகாலம் தொட்டே முருகன் வழிபாடு நடைபெற்று வந்ததை நாம் உணரலாம். 'கோடையம்பதி உற்று நிற்கும் மயில்வீரா' என அருணகிரிநாதரும் இந்த வல்லக்கோட்டை முருகனைப் பற்றி பாடியுள்ளார்.
“பக்கத்திலேயே இருந்தாலும் கோயில்களின் சிறப்பு நமக்குத் தெரியறதில்லை பாட்டி. வல்லக்கோட்டையும் அப்படித்தான்.”
“அப்ப திருப்போரூர் பத்தி சொன்னா என்ன சொல்லுவியோ தெரியலையே” எனக் கேட்டுக் கொண்டே எழுந்து சென்றார் பாட்டி.
-இன்னும் இனிக்கும்
பவித்ரா நந்தகுமார்
94430 06882