ADDED : ஜன 16, 2025 02:35 PM

ஞானமலை
''அமுதனுக்கு பள்ளிக்கூடம் இல்லையா? அவன் இன்னமும் எழுந்திருக்க இல்லையே” எனக் கேட்டார் பாட்டி.
“நடந்து முடிஞ்ச பரீட்சையில அமுதன் சரியா மார்க் எடுக்கலைன்னு நேத்து தேவந்தி அவனை போட்டு அடிச்சிட்டா. இப்ப, அமுதனுக்கு லேசா காய்ச்சல் அடிக்குது பாட்டி. அதனால இன்னைக்கு ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன்”
“ஓ அப்படியா! மார்க் வாங்குறதும் பள்ளிக்கூடம் போறதும் இருக்கட்டும், ஒரு நாள் அவனை ஞானமலை கூட்டிட்டு போகலாம் யுகா. அந்த ஞான பண்டிதன் முருகனை வழிபட்டா அஞ்ஞானம் நீங்கி வாழ்க்கையில ஞானம் கிடைக்கும். மலையின் அடிவாரத்தில் ஞான சித்தி விநாயகர் இருக்கார். அவரை வணங்கி வழிபட்டு படிக்கட்டு வழியா ஏறிப்போனா ஞான தட்சிணாமூர்த்தி ஞானசரஸ்வதி காட்சியளிக்குறாங்க. மலை உச்சியில் முருகன் வள்ளி தெய்வானையோடு காட்சியளிப்பார்.
இன்னும் கொஞ்சம் மேல ஏறிப் போனா தேவசுனை ஞானகிரீஸ்வரர் சன்னதி வரும். பக்கத்துலயே ஞானப்பூங்கோதை அம்மன், ஞானவெளி சித்தரின் ஜீவசமாதின்னு எல்லாமே ஞானமயம் தான்''
“ஆமாம் முருகன் கோயில்களில் எல்லாம் பெரும்பாலும் ஏதாவது ஒரு சித்தரோட ஜீவசமாதி இருக்கே… அவசியம் சித்தர்களை கும்பிடணுமா பாட்டி?”
“நிச்சயமா! சித்தர் வழிபாட்டை தொடர்ந்து செஞ்சா கர்ம வினையோட தாக்கம் குறையும். இப்ப புரியுதா யுகா''
“நல்லா புரிஞ்சது. நாம ரொம்ப அதிகமா வழிபட்டா பாதயாத்திரையக் கடவுள் கேன்சல் பண்ணிட்டு நம்மை பிளைட்ல ஏறி ஜம்முன்னு சீக்கிரமா போயிட்டு வாப்பான்னு சொல்லலாம் இல்லையா பாட்டி?”
யுகனின் சாமர்த்தியமான பேச்சைக் கேட்டு பாட்டிக்கு சிரிப்பு வந்தது. “ம்... போகலாம் போகலாம், அந்தளவுக்கு வழிபாடு மூலமா வாழ்க்கையை வளப்படுத்தலாம். காசு பணம் இருக்கிறவங்க தான் பாக்கியம் செஞ்சவங்கன்னு இல்லை. கடவுள் அருளால் திருப்தியான வாழ்க்கை வாழ்பவர்கள் எல்லாமே பாக்கியம் செஞ்சவங்க தான். அதனால சித்தர் வழிபாடு, ஜீவசமாதி வழிபாட்டை தவற விடக் கூடாது. கலியுகத்தில் ஜீவசமாதிகளுக்கு சக்தி அதிகம். அருணகிரிநாதரை குருவாகக் கொண்டு திருவண்ணாமலையில் வாழ்ந்தவர் தான் இந்த ஞானவெளி சித்தர். இவரை பாலை சித்தர் என்றும் சொல்லுவாங்க.
முருகனின் காலடித் தடம் பதிந்த இந்த புனிதமான மலையில பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார் ஞானவெளி சித்தர். உடல் குறைகளை நீக்கி நோய்களுக்கு மருந்தளித்து, ஞானத்தை போதித்து வாழ்ந்து வந்திருக்கார். ஒரு கார்த்திகை மாத மூல நட்சத்திரத்தன்று இவர் முருகனோடு கலந்தார். இந்த ஞானமலை முருகன் திருவடிப் பூங்கோயில் தியான மண்டபத்தில் பிரார்த்தனை செய்து அங்கபிரதட்சணம் செய்தால் நோய்கள் நீங்கி, நினைத்தது நடக்கும். பவுர்ணமி கிரிவலத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவது இங்கு சிறப்பு”
“ ஓஹோ! சரி, இந்த ஞானமலை பழமையான கோயிலா பாட்டி?”
“இந்த ஞானமலை பழமையான கோயில்தான். ஆனா இடையில மக்கள் நடமாட்டம் குறைஞ்சதால மக்கள் அறியாத ஊரா மாறிடுச்சு. 25 வருஷத்துக்கு முன்பு இங்கு கிடைத்த கல்வெட்டு மூலம் இந்த கோயில் தான் ஞானமலைன்னு உறுதி செய்தாங்க. வள்ளி மலையில் கல்யாணம் பண்ணி திருத்தணிக்கு போன முருகன், ஓய்வெடுக்க வழியில் வந்து தங்கிய இடம் தான் ஞானமலை”
“அடடா. குன்றைப் பார்த்தாலே நம்ம முருகனுக்கு குஷி வந்துடும் போலிருக்கே” என்றான் யுகன்.
''நீ சொன்ன மாதிரி ஞானமலை சின்ன குன்று தான். மொத்தமே 150 படிக்கட்டு தான். பெருசா சாலை வசதி இல்லன்னாலும் இரு சக்கர வாகனத்தில் மேலே ஏறி வந்துடலாம். ஆனா கார்ல போக முடியாது. ஏன்னா பாதை சரியில்ல. பத்து நிமிஷத்துல மலைக்கு நடந்தே ஏறிடலாம். இங்க மலையில் இரண்டு கோயில்கள் இருக்கும். ஒன்னு பத்து வருஷம் முன்பு புதுப்பிக்கப்பட்ட கோயில். இன்னொன்னு அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஞான பண்டித சுவாமி கோயில். மலையேறி வந்ததும் அப்படி ஒரு அமைதியை நாம் உணரலாம்.
இங்க இருக்கிற ஞான பண்டிதன கும்பிட்டு கீழே இறங்கும்போது நமக்குள்ள ஒரு பரவசம் உண்டாகும். கடவுள் அருளால எத்தனையோ நன்மை நமக்குக் கிடைச்சாலும் ஞானம் இல்லாதவர்களின் கல்வியறிவு கூட பயனின்றி போகும்.
நல்ல வழியில் சம்பாதிக்கணுங்கிற அறிவும், சேர்த்த பணத்தை பிறருக்கு பயனுள்ளதா செலவு செய்யணும்கிற தெளிவும் குருவாக இருந்து ஒருவர் வழி நடத்தினா எவ்வளவு நல்லா இருக்கும்! நம் அத்தனை பேருக்கும் இப்படி ஒரு குருநாதராக ஞான மலையில் காட்சி தருபவர்தான் ஞான பண்டிதன். இதற்காகவே ஞானிகளும் யோகிகளும் இதை ஞானமலைன்னு கொண்டாடினாங்க. வள்ளியோட வந்த முருகன் இங்கு இளைப்பாறிய இடத்தில் முருகனோட பாதம் பாறையில் இருக்கிறத நாம் பார்க்கலாம். அந்த பாறைகளுக்கு கம்பி வேலி போட்டு பூக்கள் வைத்து தீபம் ஏற்றி வழிபடுறாங்க”
“இப்ப நாம போனா முருகனுடைய பாதத்தை பார்க்கலாமா பாட்டி?”
“நிச்சயமா.வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளுக்கு ரொம்ப பிடிச்ச மலை இது. அது மட்டுமில்ல ஞான மலைக்கு வந்த அருணகிரிநாதருக்கு திருவண்ணாமலை முருகனுடைய நினைவு வந்தது. உடனே முருகன் குருவாக நின்று தீட்சை வழங்கினார். ஞான மலையில் முருகனின் பாத தரிசனத்தை கண்டு திருப்புகழ் பாடினார் அவர். பல்லவர் கால கோயிலான ஞானமலையில் 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த காளிங்கராயன் கால கல்வெட்டு இக்கோயிலின் திருப்பணிகளை விவரிக்குது. சிறுவாபுரி அறக்கட்டளைக் குழு தான் இக்கோயிலில் திருப்பணிகளை செய்து வர்றாங்க”
“இந்த ஊர் எங்க இருக்கு பாட்டி? அதை இன்னும் சொல்லலையே”
“ இது முன்ன வேலுார் மாவட்டத்தில் இருந்த கோயில். மாவட்டங்கள் பிரிஞ்சதுல இப்ப ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கு. காவேரிபாக்கத்துல இருந்து சோளிங்கர் போற வழியில் 16 கி.மீ., துாரத்துல மங்கலம் என்ற ஊர் இருக்கும். அங்கிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் ஞானமலை அடிவாரம் வரும்.
கோவிந்தசேரி கிராமம்னு இந்த இடத்தை சொல்வாங்க. பஸ் வசதி குறைவா இருப்பதால் சொந்த வாகனத்தில் போனால் நேரம் மிச்சமாகும். ரெண்டு வருஷம் முன்பு இங்கு போனப்ப, வழி கேட்டு கேட்டு, போய் சேர்ந்தோம். ஆனால் அருணகிரி நாதர் சரியான சாலை வசதி இல்லாத அந்த காலத்துல எப்படித்தான் போனாரோன்னு நெனச்சா ஆச்சரியமா இருக்கு. இன்னொரு முக்கியமான விஷயம் யுகா இந்த ஞானமலையில 'குறமகள் தழுவிய குமரன்' உற்ஸவ சிலையை பார்க்கலாம். இந்த கோலத்தை தரிசித்தால் தம்பதியர் ஒற்றுமை சிறக்கும்''
“ஓ! ரொம்ப நல்லது தான். நம்ம பக்கத்து அப்பார்ட்மெண்ட்ல எந்நேரமும் எலியும் பூனையுமா சண்டை போடுற சத்தம் இங்க வரைக்கும் கேட்குது. பேசாம அவங்கள அங்க போக சொல்லலாமா? குறமகள் தழுவிய குமரனை பார்த்துட்டு அப்படியே ஞானத்தையும் வாங்கிட்டு வரட்டும்”
“முதல்ல நாம போயிட்டு வந்து ரிசல்ட் என்னன்னு பார்ப்போம். அப்புறம் அவங்களுக்கும் சொல்லலாம்?” என்றாள் தேவந்தி முஷ்டியை மடக்கியபடி.
“ ஓகே. அப்ப வா இந்த ஞாயிறன்று ஞானமலைக்கு போகலாம். பாட்டி நீயும் வா, சேர்ந்து போகலாம்”
“தாராளமா போவோம். ஞானமலையில் நல்ல அனுபவம் கிடைக்கும். காலையில எட்டரை மணிக்கு வரும் அர்ச்சகர் மாலை ஆறு மணி வரைக்கும் நடை திறந்து வைத்திருப்பார். அதனால இருட்டுறதுக்கு முன்னாடியே போய் வரணும்” என்றார் பாட்டி தன் கண்ணாடியை கழற்றிய படி.
-இன்னும் இனிக்கும்
பவித்ரா நந்தகுமார்
94430 06882