ADDED : ஜன 30, 2025 12:58 PM

தேனிமலை
பாட்டியும், பேரன் யுகனும் வீட்டுக்கு வந்திருந்த யுகனின் சித்தப்பா குருநாதனை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
“ ஒல்லியா இருந்த சித்தப்பா இப்போ ஜம்முன்னு ஆயிட்டார். நம்ப முடியலையே” என ஆச்சரியப்பட்டான்.
“நல்ல மாற்றம் தான் யுகா. ஒருத்தர் நல்லா இருக்கிறதை பார்த்தாலே மனசுக்குள்ள சந்தோஷம்தான். அது மாதிரி நாம் நேசிக்கிற கடவுளையும் பலவிதமான கோலத்தில பார்க்குற போது மனசு நமக்கு நிறைஞ்சிடும்”
“அது என்ன பலவிதமான கோலம்? வேலும் மயிலும் சேவலுடன் தானே முருகன் இருப்பார்?”
“சரிதான், ஆனா அதையும் தாண்டி முருகன் பல இடங்களில் பலவிதமாக காட்சியளிக்கிறார். எங்கன்னு சொல்றேன் கேளு. கையில் அம்பும் இன்னொரு கையில் வேலுமாக மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழியில இருக்கார். மாம்பழத்தை ஏந்தியபடி திருநள்ளாறில் இருக்கார்.
கர்நாடகாவுல நஞ்சங்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் முருகன் தலை மீது அஞ்சு தலை நாகம் குடை பிடிச்சிருக்கும். கர்நாடகாவுலயே இன்னொரு முக்கிய கோயில் குக்கே சுப்பிரமணியா கோயில். முருகன் பாம்பு வடிவில் காட்சி தரும் தலம் இது. நாமக்கல் மாவட்டம் வேளுக்குறிச்சியில் வேடனாக காட்சி தர்றார். ஆண்டாள், மீனாட்சி கைகளில் கிளி இருப்பது தெரியும். கிளியை வச்சிருக்கும் முருகனை சேலம் மாவட்டம் கனககிரியில் பார்க்கலாம். இப்படி இன்னும் சில அபூர்வ கோலங்கள் இருக்கு”
“ சரி பாட்டி இத்தனை கோலங்களையும் சொல்லிட்ட, நீ வழக்கமா சொல்லப் போற கோயில் பத்தி வாயை திறக்கலையே”
“தேனை கையில ஊத்தி சுவைச்சு சாப்பிட்டுக் கூட உனக்கு இன்னும் அது எட்டவில்லையே! நானே சொல்றேன் கேளு. புதுக்கோட்டை மாவட்டம் தேனிமலை தான் அது. பொன்னமராவதியில் இருந்து காரையூர் வழியாக புதுக்கோட்டை செல்லும் போது 7 கி.மீ., துாரத்தில் இருக்கு தேனிமலை. கண்ணுக்கு பசுமையாக அழகிய சுனைகள் நிறைந்த மலை கிராமம் அது”
“ ஏன் தேனி மலைனு பேர் வந்துச்சு பாட்டி?”
“ ஓ அதுவா! இந்த மலையோட உச்சியில் தேனீக்கள் கூடு கட்டுவது வழக்கம். ஆனா இந்தப் பகுதி மக்கள் தேன் கூடுகளை சேதப்படுத்துவதோ, தேனை எடுக்கிறதோ இல்ல. அது வழிபாட்டுக்காகவும், விவசாயிகளின் நம்பிக்கை சின்னமாகவும் இருக்கு”
“தேன்கூடு எப்படி விவசாயிகளின் நம்பிக்கை சின்னமாக இருக்கும்'' என சந்தேகம் கேட்டான் யுகன்.
“ஆண்டு தோறும் தேன் கூடுகள் எத்தனை இருக்கு என்பதை ஆர்வமுடன் மக்கள் எதிர்பார்ப்பாங்க. இங்குள்ள கொம்பு பாறையில் மூன்று கூடுகள் கட்டி இருந்தால் அந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக இருக்கும். இரண்டு கூடு இருந்தால் விளைச்சல் சுமார். ஒரு கூடு மட்டும் கட்டி இருந்தால் அந்த ஆண்டு விளைச்சல் இருக்காதுன்னு சொல்றாங்க. இப்படி தேன் கூடும், மலையும் இந்த ஊர் மக்களின் வாழ்வோடு இரண்டற கலந்திருக்கு. இதன் பின்னணியில் அறிவியலும் இருக்கு. மழை நன்றாகப் பெய்து பூக்கள் நிறைய பூத்து குலுங்கி அதன் மூலம் தேனீக்கள் பெரிதாக கூடு கட்டும். அப்போது விவசாயமும் செழிப்பாக இருக்கும். ஆன்மிகமும் தெய்வீகமும் ஒன்று சேரும் இடம் இது தான்.
அதுமட்டுமில்ல, போன பிறவியில் பாவம் செய்தவர்கள் இந்த பிறவியில் தேனீக்களாக பிறந்து சாப விமோசனம் பெறுவதாகவும் மக்கள் நம்புறாங்க. இந்த கொம்புப் பாறையில் கட்டிய தேன்கூடு ஓராண்டுக்கு இருக்கும். ஐப்பசி மாதத்தில் எத்தனை கூடு இருக்கோ அத வச்சு தான் விவசாயிகள் அந்த விவசாயத்திற்கு வெள்ளோட்டம் பார்ப்பாங்க”
“ஆச்சரியம் தான் பாட்டி. தேனிமலை முருகனை பார்க்க படியேறி தான் போகணுமா?”
''ஆமா யுகா, அடிவாரம் வரைக்கும் வாகனத்தில் போகலாம். கோயிலுக்கு படி ஏறித் தான் போகணும். இந்த மலையோட சிறப்பே சித்தர்கள் பலர் முருகனின் அருளைப் பெற்று முக்தி அடைஞ்சது தான். சித்தர்கள் இன்றும் முருகனை தரிசிக்க வருவதாக நம்புறாங்க. இங்கு பெருமானந்த சுவாமி என்னும் சித்தரின் ஜீவசமாதி இருக்கு. இவர் இங்கு வரும் பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தம் கொடுத்து நோய் தீர உதவி செய்தார். அழகிய சுனைகள் நிறைய இங்கிருக்கு. அதில் இருந்து தான் அபிஷேகத்துக்கு தண்ணீர் எடுக்கிறாங்க.
முன்பு புதுக்கோட்டை மன்னர் திருக்களம்பூர் வனப்பகுதிக்கு வேட்டையாட வந்த போது மன்னருக்கு வயிற்று வலி வந்தது. ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் எதிர்ப்பட்டான். ''மருந்து கொடுக்க நாட்டு வைத்தியர் யாரும் இங்கில்லை. ஆனா தேனி மலை முருகன் கோயில் சுனை நீரை கொடுத்தால் வயிற்று வலி தீரும்'' எனத் தெரிவித்தான். அதன்படி மன்னருக்கு வயிற்று வலி தீர்ந்தது.
அவரின் ஆதரவால் தேனிமலை முருகன் கோயில் பெரிதாக கட்டப்பட்டது. மலை அடிவாரத்தில் தேனி பிள்ளையார் கோயில் இருக்கு. அங்கிருந்து மலைக்கு செல்ல 200 படிகள். இளைப்பாறும் மண்டபங்களும் வழியெங்கும் இருக்கு. மகா மண்டபத்தில் விநாயகர், சிவன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நந்தி, நாகர் சன்னதிகள் உள்ளன. கருவறையில் அமர்ந்த கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார். மனக்குறை, நோய் தீர தேனி மலை முருகனை பக்தர்கள் வழிபடுகிறார்கள்''
“புதுக்கோட்டையில பார்க்க வேண்டிய சுற்றுலா தலமாகவும் இந்த மலை இருக்குமே பாட்டி” எனக் கேட்டான் யுகன்.
''ஆமா... மலை மீதிருந்து பார்த்தால் இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். கண்ணுக்கு விருந்தளிக்கும் பசுமையும், சுனைகளுமாக சுற்றுலா தலமாகவும் தேனி மலை பயணம் அமையும். இங்க ஒரு நல்ல விஷயம் என்னன்னா இந்த தேனி மலையில் வெயில் அடிச்சாலும் நம் கால்களை சூடு தாக்காது. கால்களில் குளிர்ச்சியை உணரலாம். இங்குள்ள மொட்டை பாறையின் அமைப்பு அப்படி”
“ உடனே இங்கு செல்ல ஆசையா இருக்கு. நீ சொல்ற தகவலை எல்லாம் குறிச்சிக்கிட்டே வர்றேன். கண்டிப்பா போகலாம் பாட்டி.”
“சரிடா தங்கம்” என்றாள் பாட்டி.
நிறைய திருப்புகழ் பாடல்களை என் கொள்ளுப் பேரன் அமுதன் பாடிக் காட்டினான். யுகா... நீயும் உன் மனைவியும் ஆளுக்கு ஒரு திருப்புகழை பாடி காட்டுங்க”
“ ரொம்ப கண்டிப்பா இருக்கியே பாட்டி, எனக்கு இருக்குற வேலைப்பளுவில் நான் இன்னும் பழகல, அதனால இன்னும் ஒரு வாரம் அவகாசம் வேணும். தேவந்திக்கு ரெண்டு வாரம் தேவைப்படும்னு நினைக்கிறேன் என யுகன் சொல்லி முடிப்பதற்குள் அவள் பாடத் தொடங்கினாள்.
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம்... என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய... தென்று நாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன... தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி நாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு... மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை... தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும... டங்கல்வேலா
சீறிவரு மாறவுண நாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி... அண்டகூடஞ்
சேருமழ கார்பழனி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக... தம்பிரானே
ஆத்மார்த்தமாக பாடிய தேவந்தியை ஓடி வந்து கட்டிக் கொண்டான் அமுதன்.
-இன்னும் இனிக்கும்
பவித்ரா நந்தகுமார்
94430 06882