ADDED : பிப் 13, 2025 12:29 PM

குன்றத்துார்
பாட்டி, யுகன், தேவந்தி, அமுதன் என நால்வரும் காரில் குன்றத்துார் கிளம்பினர். முன்னதாக பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டாள் தேவந்தி. “எவ்வளவு நாளா சொல்லிட்டு இருந்தேன். இன்னிக்கி தான் செல்லும் பாக்கியம் கிடைச்சிருக்கு. சரி குன்றத்துார் எவ்வளவு துாரம்?” என பாட்டி கேட்டார்.
“சென்னை பிராட்வே பஸ் ஸ்டாண்டில் இருந்து 30 கி.மீ., பூந்தமல்லியில் இருந்து 7 கி.மீ., நானும் தேவந்தியும் சென்னைக்கு வந்த புதுசுல இந்த கோயிலுக்கு போயிருக்கோம். மொத்தமா 84 படிகள் தான் இருக்கு. சீக்கிரமா ஏறிடலாம். காரிலேயே மேலே ஏறலாம்'' என்றான் யுகன்.
“ சரி யுகா, கீழே இருக்கிற கந்தலீஸ்வரரைத் தான் தரிசனம் பண்ணனுமே”
“யார் இந்த கந்தலீஸ்வரர்”
“கந்தலீஸ்வரர் வேறு யாரும் இல்லை, நம்ம சிவன் தான். அதுக்கு முதல்ல குன்றத்துார் தல வரலாற தெரிஞ்சுக்கணும். தேவர்களை கொடுமைப்படுத்திய தாரகாசுரனை அழிக்க முருகன் படையோடு வந்து திருப்போரூரில் ஆகாய மார்க்கமா சண்டை போட்டார் அது முடிந்ததும், மனம் அமைதி பெற திருத்தணி சென்றார். வழியில் குன்றத்துார் மலையின் மீது அமர்ந்து கொஞ்ச நேரம் இளைப்பாறினார். இங்கு தங்கி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். அவரே கந்தலீஸ்வரராக மலையடிவாரத்தில் இருக்கார். கந்தனால் உருவாக்கப்பட்தால் இப்பெயர் ஏற்பட்டது. குன்றத்தூரில் சில காலம் தங்கி விட்டு திருத்தணி சென்றார்”
“சரி பாட்டி, மலை இறங்கி கீழே வந்ததும் கூட கந்தலீஸ்வரரை தரிசனம் பண்ணலாம். மலையடிவாரத்தில் பெரிய மைதானம் இருக்கு. காரை விட்டுப் போக சிரமம் இல்லை” என்றான் யுகன்.
“நிச்சயம் போகலாம். அது மட்டுமில்ல, குன்றத்துார் தான் சேக்கிழார் பிறந்த ஊர். கந்தலீஸ்வரர் கோயிலில் தனி சன்னதியில் சேக்கிழார் இருக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சேக்கிழார் குருபூஜையின் போது மலையில் இருந்து முருகன் இறங்கி வந்து சேக்கிழாருக்கு காட்சி தருவது வழக்கம். இரண்டாம் குலோத்துங்கச் சோழன் தான் இக்கோயிலைக் கட்டினார்”
யுகனும் பாட்டியும் பேசி முடிப்பதற்குள் குன்றத்துார் வந்துவிட்டது. கோபுரத்தின் அருகில் காரை நிறுத்தி விட்டு, அங்கிருந்து பத்து படிகள் இறக்கத்தில் உள்ள வலஞ்சுழி விநாயகரை தரிசிக்க சென்றனர்.
“தடைகளை போக்குபவர் இந்த வலஞ்சுழி விநாயகர். எல்லாரும் தோப்புக்கரணம் போடுங்க'' என்றார் பாட்டி. தோப்புக்கரணம் இட்டு வழிபட்டு மேலே சென்றதும் கொடிமரம் கண்ணில் பட்டது. கலை நுட்பம் மிக்க கொடிமரத்தை அமுதனுக்கு காட்டினாள் தேவந்தி. பாட்டியின் ஒரு கையை பிடித்தபடியே நடந்தான் யுகன். “நல்லவேளை! இந்த கோயிலில் எண்ணெய் பிசின் இல்லாமல் தரை சுத்தமா இருக்கு.
சில கோயில்களில் 'இங்கே விளக்கு ஏற்றாதீர்கள்' என போர்டு வைத்திருந்தாலும் சிலர் வீம்புடன் அங்கேயே ஏற்றி இருப்பாங்க. எண்ணெய் வழிஞ்சு, நடக்குறவங்களுக்கு வழுக்குற மாதிரி ஆயிடும். அதுக்கு பதிலா நான் என்ன பண்ணுவேன் தெரியுமா? நெய் வாங்கி தீபம் ஏற்ற கொடுத்துடுவேன். சுத்தமும் பக்தர்களின் பாதுகாப்பும் முக்கியம் இல்லையா”
“சரிதான் பாட்டி. உள்ள போகலாம் வா” என அழைத்துச் சென்றான் யுகன். கருவறை சன்னதி முன்பு துவார பாலகர், வஜ்ரம், சூலாயுதம் என முருகனுக்குரிய ஆயுதங்களை பார்த்தபடி சென்றார்கள். கருவறையில் மூலவர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தந்தார். கருவறைக்கு வெளியே இருந்து பார்க்கும்போது ஒரே சமயத்தில் மூவரையும் தரிசிக்க முடியாதது யுகனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பாட்டி, தேவந்தியை விசாரிக்க அவர்களும் அப்படியே சொன்னார்கள்.
“கருவறையின் அமைப்பு அப்படி. ஒரு பக்கமாக நின்னு தரிசிச்சா முருகனும் வள்ளியும் மட்டும் தெரிவாங்க. அதேபோல இன்னொரு பக்கத்தில் நின்னு தரிசனம் செஞ்சா முருகனும் தெய்வானையும் மட்டும் தெரிவாங்க. இதே கருவறைக்கு வெளியே வாசலில் நின்னு பார்த்தபோது முருகனை மட்டுமே பார்க்க முடிந்தது” என யுகனின் காதில் கிசுகிசுத்தார் பாட்டி. இருபுறமும் நின்று சுப்பிரமணியரை வள்ளி தெய்வானையுடன் தனித்தனியாக தரிசனம் செய்து வெளியே வந்தனர்.
''இப்படி வா அமுதா கோயிலை சுற்றி வரலாம்” என அமுதனையும் தேவந்தியையும் அழைத்தான் யுகன்.
கந்தரலங்கார பாடலான
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்
பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு
நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு
தோளும் பயந்த தனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்சென்
கோடன் மயூரமுமே
என பாடியபடி வந்தான் அமுதன்.
தொடர்ந்து விஸ்வநாதர் விசாலாட்சி, பைரவர் சன்னதிகளை தரிசித்தனர். மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரச மரத்தடி நாகலிங்கேஸ்வரரை வழிபட்டு நின்றனர்.
”தேவந்தி இந்த அரச மரக் கிளைகளில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி இருக்காங்க பாரு. உன் சினேகிதிக்கு குழந்தை இல்லைன்னு சொன்னியே இங்க வந்து தரிசிக்க சொல்லு. அப்புறம் நீயும் ஒரு தொட்டிலைக் கட்டு. ஆசைக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கட்டும்” என பாட்டி சொல்ல தேவந்தியும் யுகனும் சிரித்துக் கொண்டனர்.
மூலவர் சன்னதி மீதுள்ள விமானம் ஷட்கோண அமைப்பில் இருப்பதை யுகனிடம் காட்டிய பாட்டி, 'சடாட்சர மந்திர அலைகளுக்கு உகந்த அமைப்பு இது' என்றார். கோயிலின் முகப்புக்கு மீண்டும் வந்தனர்.
இந்த கோயிலில் முருகன் வடக்கு பக்கமா இருக்குறது ரொம்ப விசேஷம். வடக்கு நோக்கி இருக்கும் கடவுள் மோட்சத்தை அருள்வார் என்பது மகான்களின் வாக்கு.
“கந்த சஷ்டியை இங்கு எட்டு நாட்களுக்கு விமரிசையா கொண்டாடுவாங்கன்னு என் பிரண்டு சிவா சொல்லி இருக்கான். இங்கிருந்து இரண்டு தெரு தள்ளித்தான் அவன் வீடு. சஷ்டியின் போது ஆறாம் நாள் சூரசம்ஹாரமும் ஏழாம் நாள் வள்ளி கல்யாணமும் எட்டாம் நாள் தெய்வானை கல்யாணமும் நடக்கும். தொட்டில் கட்டி குழந்தை பாக்கியம் கிடைத்தவர்கள் குழந்தையோட எடைக்கு எடை பழம், சர்க்கரை, வெல்லம்னு காணிக்கையா செலுத்துவாங்க பாட்டி. அதோட இங்கு வழிபட்டால் குழந்தைகளுக்கு வரும் உடல் பிரச்னை, நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். 'இது உன் குழந்தை அதனால நீயே காப்பாத்தணும் முருகா' அப்படின்னு சொல்லி முருகனிடம் வழிபட்டு குழந்தையை கூட்டிட்டு போவாங்களாம். அந்தக் குழந்தையை எந்த குறையும் இல்லாம முருகன் காப்பாற்றுவார்” என சிவா சொன்ன விஷயங்களை சொல்லி முடித்தான் யுகன்.
“ குன்றத்துார் மலையேறி வந்தா மனபாரம் தீர்ந்த மாதிரி இருக்கு. இங்க சாமி கும்பிட்டுட்டு போனா மனம் இலகுவாயிடும் போலிருக்கு”என்றாள் தேவந்தி.
“பழமையான மலைக்கோயில் இது. 1300 ஆண்டு பழைமையானது. திருத்தணிக்கு தெற்கே இருப்பதால் 'தென் தணிகை' என அழைக்கப்பட்டது” என்றார் பாட்டி கோயிலை சுற்றியுள்ள இயற்கை சூழலை ரசித்தபடி. கோபுர வாசலுக்கு அருகிலுள்ள படிகளில் கண்ணாடி வளையல் விற்றுக் கொண்டிருந்தனர். அதைக் கண்டு மயங்கிய தேவந்தி இரண்டு செட் வளையல்களை எடுத்துக் கொடுத்து விற்கும் பெண்ணிடம் தன் கையை நீட்டினாள். 'ஐ! கண்ணாடி வளையல்' என அமுதன் ஆசையுடன் அருகில் வந்து நின்றான். அதைக் கண்டு மகிழ்ந்த யுகன் கண்ணாடி வளையலுக்கான பணத்தை எடுக்க பாக்கெட்டில் கைவிட்டு இருபது ரூபாய் நோட்டு இரண்டை எடுத்தான்.
-இன்னும் இனிக்கும்
பவித்ரா நந்தகுமார்
94430 06882