
''டேய் அடுத்து என்னடா பண்ணப் போற'' என்று மாட்டிற்கு தீவனம் வைத்தபடியே மகனிடம் கேட்டார் சுப்பிரமணியன்.
''போப்பா... உனக்கு வேற வேலையே இல்லையா, எப்ப பார்த்தாலும் இதையே கேக்குற'' என சிடுசிடுத்தான் ஆனந்த்.
ஆம்... பள்ளிப்படிப்பை முடித்து கல்லுாரியில் சேரக் காத்திருக்கும் இளைஞன் அவன்.
அப்பாவின் தொழிலான விவசாயம் அவனுக்கு பிடிக்கவில்லை.
''டேய்... நானே ராஜா... நானே மந்திரின்னு நிம்மதியா வாழணும். அதுதான்டா என் விருப்பம்'' என்றார் சுப்பிரமணியன்.
''போப்பா! நல்லா படிச்சோமா... சம்பாதிச்சோமான்னு இல்லாமா...'' என முணுமுணுத்தபடி நண்பனைப் பார்க்க கிளம்பினான்.
வழியில் தன் பள்ளி ஆசிரியரான பூமிநாதனை சந்தித்தான்.
''ஆனந்த்... எப்படிப்பா இருக்க? எந்த கல்லுாரியில் சேரப் போற?'' என விசாரித்தார்.
''ஐயா... கம்ப்யூட்டர் இன்ஜினியராக விரும்பறேன். காரு, பங்களான்னு வாழ்க்கையில முன்னேறணும். ஆனால் அப்பா தான் விவசாயம் பாரு... அதப்பாரு...இதப்பாருன்னு என் ஆசைக்கு குறுக்கே நிற்கிறார்'' என்றான்.
அவனுக்கு உண்மையை உணர்த்த விரும்பினார் ஆசிரியர்.
''ஆனந்த் நான் சொல்றதைக் கேளு... நாளை காலையிலிருந்து உன் அப்பா வேலை செய்வதை உன்னிப்பாக கவனி. பின்னர் என்னை வந்து பார்'' என்றார்.
ஆனந்தும் தலையசைத்துவிட்டு புறப்பட்டான்.
மறுநாள் அதிகாலையில் சேவல் கூவியது. அப்பா படுக்கையில் இருந்து எழுவதைக் கண்டான். காலைக்கடனை முடித்ததும் காளை மாடுகளுடன் வயலுக்கு புறப்பட்டார். அவருடன் அவனும் சென்றான். வெயிலை பொருட்படுத்தாமல் வியர்வை சிந்த உழைப்பதைக் கண்டான். மாலையில் களைப்புடன் வீடு திரும்பிய அவர் நிம்மதியாக ஓய்வெடுத்தார்.
மறுநாள் காலையில் ஆசிரியரை சந்திக்கச் சென்றான் ஆனந்த். வயலுக்குச் சென்றுவிட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கவே அங்கு சென்றான். ஆசிரியர் அங்கு நிலத்தை உழுது கொண்டிருந்தார். ஆனந்துக்கு ஒரே ஆச்சரியம்.
''என்னடா... வாத்தியாரும் இப்படி இருக்கிறாரேன்னு யோசிக்கிறியா'' எனக் கேட்டார்.
ஆனந்த் மவுனமாகி விட்டான்.
''உன்னைப் போல நானும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் தான். ஆசிரியர் பணிக்கு வந்தாலும் என் அப்பாவிற்கு உதவி செய்ய மறந்ததில்லை. நீயும் உங்க அப்பா வேலை செய்றதை கவனித்தாய் அல்லவா... நீயும் அவரைப் போல சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பது தான் அவரின் எண்ணம். அக்கறையுடன் படி. அதே நேரம் பெற்றோருக்கு உதவி செய். பெற்றோருக்கு நன்றியுடன் இரு. நமக்கு உணவளிக்கும் விவசாயப் பணியை ஏளனமாக கருதாதே'' என்று ஆதங்கத்தை கொட்டினார் ஆசிரியர்.
ஆனந்த் கண்களில் கண்ணீர் கொட்டியது.
''நான் விவசாயக் கல்லுாரியில் சேரப் போறேன். என்னை ஆளாக்கிய விவசாயத் தொழிலை மேன்மை பெறச் செய்வேன்'' என சபதம் செய்தான்.
மழையில் நனைந்த பூமியாக ஆசிரியரின் மனம் குளிர்ந்தது.