ADDED : ஜன 13, 2025 09:12 AM

விதர்ப்ப நாட்டின் மன்னர் ருக்மாங்கதன் தர்மவழியில் நல்லாட்சி செய்தார். அவரின் மகன் தர்மாங்கதன் நந்தவனம் ஒன்றை அமைத்தார். 'பூக்களை பறிக்காதீர்கள்' என எழுதிய பலகையை அங்கு வைத்தனர். நந்தவனத்தின் அழகைக் கண்ட முனிவர் ஒருவர், அங்கு தவம் செய்ய வந்தார். நாளடைவில் அங்கு பூத்த பூக்கள் காணாமல் போக ஆரம்பித்தன.
யார் பறிக்கிறார்கள் என தெரியாமல் காவலர்கள் விழித்தனர். பூக்களை முனிவர்தான் திருடியிருப்பார் என எண்ணி அவரை கைது செய்தனர். காவலர்கள் மீது கோபம் கொண்ட மன்னர், '' தவறுக்காக மன்னிப்பு கோருகிறேன்'' என முனிவரை வேண்டினார் மன்னர்.
மனம் குளிர்ந்த முனிவர், '' கொம்மட்டி விதைகளை தோட்டத்தில் துாவினால் பூக்கள் பறிப்பது யார் என்பதை விரைவில் தெரிய வரும்'' என்றார். அதன்படி விதைகள் துாவப்பட்டன. சில நாளிலேயே முளை விட்டு கொடிகள் படர்ந்தன.
ஒருநாள் அதிகாலையில் பெண் ஒருத்தி தனியாக நந்தவனத்திற்குள் நிற்பதைக் கண்ட மன்னர். ''பெண்ணே... நீ யார்? இதற்கு முன்பு உன்னை பார்த்ததில்லையே'' என்றார்.
''நான் தேவலோகப் பெண். பூஜைக்காக நானும், என் தோழிகளும் பூக்கள் பறிக்க இங்கு வந்தோம். ஆனால் காலில் கொடிகள் சுற்றியதால் என்னால் நடக்க முடியவில்லை. என்னுடன் வந்த தோழிகள் எல்லாம் தேவலோகத்திற்குச் சென்று விட்டனர்'' என்றாள்.
''கவலை வேண்டாம். பூஜைக்குத்தானே பூப்பறிக்க வந்தீர்கள். இப்போது தேவலோகம் எப்படி செல்வீர்கள்''
''உங்கள் நாட்டில் ஏகாதசி விரதம் இருந்தால் எனக்கு உதவி செய்ய முடியும் ''
''எப்படி?''
''ஏகாதசி விரத பலனை எனக்கு தந்தால் உடனடியாக என்னால் தேவலோகம் செல்ல முடியும்''
''ஆச்சர்யமாக உள்ளதே. ஏகாதசி விரதத்திற்கு இவ்வளவு மகிமையா'' என ஆச்சர்யப்பட்டார் மன்னர். செய்தி நாடு முழுவதும் பரவியது. சற்று நேரத்தில் அரண்மனையில் சமைக்கும் பெண் ஒருத்தி ஏகாதசி விரதம் இருப்பதாக மன்னரிடம் தெரிவித்தாள். அவளது விரத பலனைத் தானம் கொடுக்கவே, கொடியின் பிடியிலிருந்து விடுபட்டாள் அந்த தேவலோகப்பெண். அங்கிருந்து பறந்து தேவலோகம் புறப்பட்டாள்.
அன்று முதல் ஏகாதசி விரதம் இருக்கத் தொடங்கிய மன்னர், மக்களும் விரதம் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.