sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பெற்றோர் கவனிக்க...

/

பெற்றோர் கவனிக்க...

பெற்றோர் கவனிக்க...

பெற்றோர் கவனிக்க...


ADDED : பிப் 28, 2025 08:11 AM

Google News

ADDED : பிப் 28, 2025 08:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான் பணிபுரிந்த போது, நீதிமன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்துள்ளன. அதில் ஒரு வழக்கு என்னை உணர்ச்சி வசப்பட வைத்தது.

பரிதாபத்துடன் நடுத்தர வயது பெண் ஒருவர் நீதிமன்றத்தில் நின்றிருந்தார். வழக்கு தொடுத்த அவர், 'ஐயா... எங்களுக்கு ஒரே மகள். என் வீட்டுக்காரருக்கு பக்கவாதம். வீட்டு வேலை செய்து இருவரையும் காப்பாற்றி வருகிறேன். கஷ்டமே தெரியாமல் மகளை வளர்த்தேன். பலரின் கால்களில் விழுந்து படிக்க வைத்தேன். நான் வேலை செய்யும் இடங்களில் நல்ல உணவு கிடைத்தால், அதை மகளுக்கு கொடுத்து மகிழ்வேன். யார் யாரிடமோ கெஞ்சி வேலையும் வாங்கிக் கொடுத்தேன்.

அவள் இப்போது சம்பாத்தியம் செய்கிறாள். இனி என் கஷ்டம் மறைந்து விடும் என நினைத்த நேரத்தில், திடீரென ஒருநாள் அவளைக் காணவில்லை. அவளின் விருப்பமின்றி யாரோ மயக்கும் வார்த்தைகள் கூறி கடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கிறேன். எப்படியாவது கண்டுபிடித்து கொடுங்கள்' எனக் கேட்டிருந்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி... அவரது மகள் ஆஜர்படுத்தப்பட்டார். அலட்சியமாக நின்றிருந்த அந்த இளம்பெண், “யாரும் என்னைக் கடத்தவில்லை. நான் மேஜரான பெண்; மனசுக்கு பிடித்தவருடன் வாழ்வதற்காக நானே விரும்பிச் சென்றேன்' என்றாள்.

சரளமாக ஆங்கிலத்தில் பேசிய அவளிடம் சம்பாதிக்கும் தோரணையும் இருந்தது.

“சரிம்மா, உன்னை ஆளாக்கிய பெற்றோரை அம்போ...ன்னு விட்டுட்டு போறியே... என்ன நியாயம்'எனக் கேட்டேன்.

அவளிடம் இருந்து பதில் இல்லை. இதற்கு மேல் சட்டத்தில் இடமில்லை. ஆனால் என் மனம் கேட்கவில்லை. இது சினிமாவில் வரும் நீதிமன்றம் அல்ல; நிஜமான நீதிமன்றம். உறவுக்கும் உணர்வுக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு. எல்லாமே இயந்திரத்தனமாக நடந்து விடாது. ஏதாவது ஒரு திருப்பம் நடக்கும் என எண்ணி, “சரிம்மா... உன் அம்மா உன்னுடன் பேச வேண்டும் என்கிறார்; பேசிவிட்டு வாருங்கள் 'என்றேன்.

இருவரும் பேசும் போது தாயின் பாசம் மகளின் அடிமனதை தொடும்; பழசை நினைத்துப் பார்ப்பாள் என்பது என் எண்ணம்! ஆனால் அவர்கள் பேசி முடித்து வந்த போது நான் நினைத்த எதுவும் நடக்கவில்லை! 'ஐயா... உங்களுக்கு சிரமம் கொடுத்துட்டேன்: என் மகள், அவளின் விருப்பப்படி விரும்பினவங்க கூட வாழட்டும்; அவ சந்தோஷமா இருந்தா சரி” என இரண்டே வார்த்தையில் முடித்த தாயார் கை குவித்து வணங்கினார். 'உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இவ மேலே இவங்க அப்பனுக்கு கொள்ளை உசிரு, மகளைப் பார்க்க வந்திருக்காரு, அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகச் சொல்லுங்க' என்றார்.

'எங்கம்மா உன் வீட்டுக்காரர்” எனக் கேட்டேன். அவர் காட்டிய இடத்தில் சுவரோடு சுவராக நின்றிருந்தார் அவர். கை கால் வராது என்பதால் துாக்கிக் கொண்டு வந்து சுவரை ஒட்டி நிறுத்தி இருந்தனர். நடப்பதை எல்லாம் பார்த்து... அவரது கண்கள் அருவியாக கொட்டியது.

அந்த 'அன்பு' மகளை நோக்கி என்ன செய்யப் போகிறாய் என்பது போல பார்த்தேன்! அந்த பெண்ணோ சிறிதும் கண்டு கொள்ளவில்லை. 'நான் கிளம்பலாமா?' எனக் கேட்டு விட்டு காத்திருந்த காதலன் அல்லது கணவருடன் காரில் சிட்டாக பறந்தாள்.

“சரிங்கய்யா... புறப்படுறோம்' எனச் சொன்ன அந்த பெண்ணின் தாயாரிடம் 'ஊருக்கு எப்படி போவீங்கம்மா' எனக் கேட்டேன். சொந்த ஊருக்கு போசு நாற்பது ரூபாய் தேவைப்படும்: பஸ் ஸ்டாண்ட் போய் பிச்சை எடுப்போம்; கூடுதலா கிடைச்சா இரண்டு பேரும் சாப்பிடுவோம்; அப்புறம் ஊருக்கு போய்ட்டா... வீட்டு வேலை செய்யற இடத்துல உதவி கிடைக்கும்; பிழைச்சுக்குவோம்” என்றார்.

நீதிமன்றத்தில் இருந்த அனைவருக்கும் துாக்கிவாரிப் போட்டது. 'இந்தாம்மா, நீ பிச்சை எடுக்க வேண்டாம்; என்னோட அன்பளிப்பா ஏத்துக்குங்க' என என்னிடம் இருந்த ஆயிரம் ரூபாயை கொடுத்தேன்.

அதைப் பார்த்த வழக்கறிஞர்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் என பலரும் கொடுத்ததில் நாற்பதாயிரம் ரூபாய் சேர்ந்தது. அதை அவரிடம் கொடுத்து... உங்கள் கவலைக்கு இது மருந்தல்ல; ஊருக்கு போவதற்கான தீர்வு தான்' எனச் சொல்லிக் கொடுத்தேன்.

பெற்றோரைப் புரிந்து கொள்ளாத இப்படிப்பட்ட பிள்ளைகளும் இருக்கிறார்களே... என நாள் முழுதும் என் மனம் வேதனைப்பட்டது. 'குழந்தைகளுக்கு அறிவைக் கொடுப்பதை விட அன்பை கற்றுக்கொடுப்பது பெற்றோரின் பொறுப்பு' என்பதே என் வேண்டுகோள்.

சா.நாகமுத்து, உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)






      Dinamalar
      Follow us