
கடற்கரை ஓரமாக நின்ற பெரிய மரத்தின் உச்சியில், கடற்குருவி ஜோடி ஒன்று அடைகாத்து வந்தது. குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தன. ஒருநாள் புயல் வீசவே கடலில் அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறின.
பெண் குருவி, ''எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் உயிரை விட்டு விடுவேன்'' என்றது.
''பயப்படாதே! கூட்டுடன் சேர்ந்தே முட்டைகள் கடலில் விழுந்துள்ளது. எனவே அவை உடைந்திருக்காது. கடலிலுள்ள தண்ணீரை வற்றச் செய்தால் முட்டைகளை நாம் மீட்டு விடலாம்'' என நம்பிக்கை ஊட்டியது ஆண் குருவி.
''கடலை எப்படி வற்றச் செய்வது?''
''முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே இடைவிடாமல் சில நாளாவது நாம் முயற்சிக்க வேண்டும். வாயில் கொள்ளும் மட்டும் நீரை எடுத்துக் கொண்டு போய் தொலைவில் கொட்டுவோம். இப்படியே இடைவிடாமல் செய்தால் கடல்நீர் வற்றி முட்டைகள் வெளிப்படும்''. இப்படி பேசிய குருவிகள் இரவு பகலாக செயலில் மும்முரமாக இறங்கின.
அப்போது சக்தி மிக்க முனிவர் ஒருவர் அங்கு வந்தார். குருவிகளின் செயலைக் கண்டார். ஞான திருஷ்டியால் முட்டைகளை இழந்த தாயின் தவிப்பு மனதை நெகிழச் செய்தது. தனது சக்தியால் கடலை சில அடிகள் பின்வாங்கச் செய்தார்.
அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. அதைப் பார்த்த குருவிகள் மகிழ்ந்தன. முட்டைகளை பாதுகாப்பாக வேறிடத்தில் சேர்த்தன.
''நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா! நமது ஒருநாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம்'' என்றது ஆண் குருவி பெருமையுடன்.
முனிவர் சிரித்தபடி நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லையே... முனிவரின் அருளால்... ஆனால் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ, அவரது தவசக்தியைப் பற்றியோ எதுவும் தெரியாது. ஆனால் நம்பிக்கையுடன் கடல் நீரை அள்ள முயற்சி செய்தன.
குருவிகள் அதைச் செய்யாமல் இருந்திருந்தால் முனிவர் தன் வழியே போயிருப்பார்.
உழைக்கும் நேரமே நல்ல நேரம். சோம்பேறியாக இருக்கும் நேரமே எமகண்டம். நம்பிக்கையுடன் உழையுங்கள். நல்லதே நடக்கும்.