ADDED : மே 30, 2025 08:45 AM

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) சிவனை வழிபட்டார் சுந்தரர். தன் மனைவியான பரவை நாச்சியார் செய்யும் அன்னதானத்திற்கு பொன் தருமாறு வேண்டினார். சிவபெருமானும் பன்னிரண்டு ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.
'எப்படி எடுத்துச் செல்வது... வழியில் திருடர் பயம் இருக்குமே' என்றார். 'விருத்தாசலம் மணி முத்தாற்றில் போட்டு விட்டு திருவாரூர் கமலாலயக் குளத்தில் எடுத்துக் கொள்' என்றார் சிவன். பொற்காசுகளை எல்லாம் வேட்டியில் வைத்து கட்டாகக் கட்டினார். அதற்கு முன்பாக குளத்தில் இருந்து எடுக்கும் போது ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக ஒரு பொற்காசை மட்டும் தனியாக மடியில் வைத்துக் கொண்டார். மூடையை ஆற்றில் போட்டு விட்டு திருவாரூர் புறப்பட்டார். மனைவியுடன் கமலாலயம் குளத்தை அடைந்தார்.
ஊரார் எல்லாம் குளக்கரையில் கூடினர். குளத்தில் இரண்டு முறை இறங்கி தேடியும் மூடை கிடைக்கவில்லை. சிவன் மீது பாட்டு பாடியபடி மூன்றாவது முறை மூழ்கிய போது மூடை கிடைத்தது. பன்னிரண்டு ஆயிரம் பொற்காசுகளில் ஒன்று குறைவாக இருந்தது. அடையாளக் காசை வைத்து ஒப்பிட்ட போது சரியாக இருந்தது. மூடையை எடுத்துக் கொண்டு இல்லத்தை அடைந்தார். அதன் பின் அன்னதானப் பணி அமோகமாக நடந்தது. இதையே 'ஆற்றில் இட்டு குளத்தில் தேடியது' என்ற சொலவடையாக சொல்வார்கள். -
-லட்சுமி பாலசுப்ரமணியன்