
ராமன் வில்லை எடுத்தால், அதிலிருந்து புறப்படும் பாணம் எதிரியை அழிக்காமல் விடாது. ஆனால் ராவணனின் படையைச் சேர்ந்த பதினான்காயிரம் வீரர்களும் ராமனால் வீழ்த்தப்பட்ட போது, ஒருவன் மட்டும் தப்பித்தான். அவனை ராமனும் தடுக்கவில்லை. ராவணனிடம் வந்த அவன், ''மகாபிரபு! நம் வீரர்களை எல்லாம் ராமன் கொன்று விட்டான்'' என்றான்.
அட்டகாசமாகச் சிரித்த ராவணன், ''அனைவரும் இறந்த விட்ட போது, உன்னால் மட்டும் எப்படி தப்பிக்க முடிந்தது?'' எனக் கேட்டான்.
வந்த வீரன், ''பிரபு! தந்திரம் செய்தேன்; தப்பித்தேன்'' என்றான்.
''அப்படி என்னடா தந்திரம்?''
''சேலையைக் கட்டிக் கொண்டு தப்பினேன்''
''சேலையா? எதற்கு?''
''அந்த ராமன் தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டானாம். அதனால் என்னை பெண் எனக் கருதி விட்டான்'' என்றான்.
மனைவியைத் தவிர மற்ற பெண்களை ஏறிட்டும் பார்க்காத உத்தமர் அல்லவா ராமன்!