
அடிலகன் என்னும் சிவபக்தன் பூலோக வாழ்வை முடித்து கைலாயம் சென்றான். அங்கு நந்தீசர் காவல் புரிந்து கொண்டிருந்தார். பார்வதி தியானத்தில் இருந்தாள். சிவன், பார்வதியை தரிசிக்க விரும்பிய பக்தன் நந்தீசர் அனுமதியுடன் பார்வதியின் முன் நின்று சத்தமிட்டபடியே வணங்கினான். சத்தமிட்டதால் தியானம் கலைந்த பார்வதி, ''நந்தீசா... ஏன் இவனை இங்கு அனுமதித்தாய்'' எனக் கோபித்தாள்.
''தாயே... தியானத்தில் இருந்து தாங்கள் எழுந்த பிறகே நான் அனுமதித்திருக்க வேண்டும். மன்னியுங்கள்'' என்றார். விஷயம் அறிந்த சிவன் உடனடியாக நந்தீசரை பூலோகத்தில் பிறக்குமாறு கட்டளையிட்டார். இந்த நேரத்தில் பூலோகத்தில் சிலாதர் என்னும் முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சப்தரிஷிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு உணவளிக்க சிலாதரின் மனைவி தயாரானாள். 'குழந்தையில்லாத தங்களின் வீட்டில் நாங்கள் சாப்பிட மாட்டோம்' என மறுத்தனர். சிலாதர் வருத்தமுடன், ''சிவபெருமானே! எங்களுக்கு குழந்தை வரத்தை தந்தருள வேண்டும்'' என வேண்டினார்.
அப்போது நந்தீசரை குழந்தையாக்கி ஒரு பெட்டியில் வைத்து தாழிட்டு சிலாதரின் ஆஸ்ரமத்தின் அருகில் கிடக்கச் செய்தார் சிவன். அதை திறந்த போது காளை முகத்துடன் குழந்தை இருப்பதைக் கண்டார் சிலாதர். ஆனாலும் ''கடவுளே... இந்தக் குழந்தையை எப்படி வளர்ப்பேன்'' என வருந்தினார். அப்போது ''கைலாயத்தின் காவலனான நந்தீசனே குழந்தையாக வந்திருக்கிறான். 12 ஆண்டுகள் மட்டுமே பூலோகத்தில் வாழப்போகும் இவனை அன்புடன் வளர்த்து வா'' என அசரீரி கேட்டது.
சிவனருள் பெற்ற அக்குழந்தையை மனைவியிடம் ஒப்படைத்தார் சிலாதர். அந்தக் குழந்தையைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் வாழ்வில் நல்ல நேரம் தொடங்கியது. அவர்களின் உள்ளமும், உடலும் புத்துணர்வு பெற்றது. பிரதோஷ நாளில் அக்குழந்தை சிவதியானத்தில் ஆழ்ந்திருக்கும். அப்போது நந்தீசரை தரிசித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைந்தனர்.
அற்புதங்கள் நிகழ்த்திய நந்தீசர் தன் 12ம் வயதில் பெற்றோருடன் கைலாயத்திற்கு புறப்பட்டார். கைலாயத்தின் காவலராக மீண்டும் பதவியில் அமர்ந்தார். பிரதோஷ நாளில் இந்த வரலாறை படிப்பவர்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவர்.