
நவ.21, 2025 - சந்திர தரிசனம்
நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனுக்கு சோமன் எனப் பெயர் உண்டு. இதனால் தான் இவருக்குரிய திங்கள் கிழமையை சோமவாரம் என்கிறோம். கார்த்திகை மாத திங்கள் கிழமை விரதம் இருந்து சிவனை வழிபடும் சோமவார விரதத்தை மேற்கொண்டால் மனச்சோர்வு உண்டாகாது.
ஒருமுறை தட்சனின் சாபத்தால் தன் பதினாறு கலைகளையும் இழந்தார் சந்திரன். இதனால் வருந்திய அவரது 27 மனைவிகள் தங்களின் தந்தை தட்சனிடம் விமோசனம் கேட்டனர். 'நான் அளித்த சாபத்தால் என் புண்ணியம் குறைந்து விட்டது. என்னால் விமோசனம் தர இயலாது' என்றார் தட்சன்.
இறுதியில் சிவனை நோக்கி தவத்தில் ஈடுபட்டார் சந்திரன். இதன் பலனாக சாபம் நீங்கியதுடன் தன் தலைமுடியில் மூன்றாம் பிறையாக சூடிக்கொண்டார் சிவன். இதனால் 'சந்திரசேகரர்' என்ற பெயர் சிவனுக்கு ஏற்பட்டது. இந்நிகழ்வு நடந்தது ஒரு கார்த்திகை சோமவாரமே.
இதனடிப்படையில் சோமவார விரதம் இருக்கும் வழக்கம் ஏற்பட்டது. விரதம் இருப்பவர்கள் பகல் முழுவதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். முடியாவிட்டால் பால், வாழைப்பழம் சாப்பிடலாம். இப்படியாக வாழ்நாள் முழுவதும் திங்கட்கிழமை விரதம் இருந்தால் மனம் சம்பந்தமான பிரச்னை உண்டாகாது.
சிவபெருமான் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடக்கும். 108 அல்லது 1008 சங்குகளில் புனித நீரை நிரப்பி யாக சாலைகளில் வைத்து வேள்வி நடத்துவர். அந்த நீரால் சிவபெருமானுக்கு அபிேஷகம் செய்வர். இதை தரிசித்தால் பயம் விலகும். மனதில் தெளிவு பிறக்கும். முடிந்தவர்கள் அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அக்னியின் வடிவமான சிவபெருமானை அபிேஷகம் செய்து குளிர்விப்பது விசேஷம்.
வாய்ப்பு கிடைத்தால் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூர் கைலாசநாதரை தரிசியுங்கள். இத்தலம் சந்திரனால் வரும் தோஷங்களுக்கு பரிகாரத்தலமாகும். இங்கு சந்திர பகவான் தனி சன்னதியில் இருக்கிறார். சிவனடியாரான திருநாவுக்கரசர் அருளிய திங்களூர் பதிகத்தை படியுங்கள். இல்லாவிட்டால் கீழ்க்கண்ட பாடல், ஸ்லோகத்தை 27 முறை சொல்லுங்கள்.
அலைகடல் அதனின்றும் அன்று
வந்து உதித்தபோது
கலைவளர் திங்களாகிக்
கடவுளென்று எவரும் ஏத்தும்
சிலைநுதல் உமையாள் பங்கன்
செஞ்சடைப் பிறையாய் மேரு
மலைவலமாக வந்த மதியமே போற்றி போற்றி

