ADDED : மே 14, 2026 12:49 PM

காஞ்சிபுரம் அருகிலுள்ள துாப்புல் என்னும் ஊரில் அவதரித்தவர் வேதாந்த தேசிகன். இவர் தன் தாய்மாமனான அப்புள்ளாரிடம் கருட மந்திர உபதேசம் பெற்றார். கடலுாருக்கு அருகிலுள்ள திருவந்திபுரத்தில் (திருவஹீந்திரபுரம்) தவம் மேற்கொண்டார். வைகுண்டத்தில் இருந்த கருடாழ்வார் நேரில் காட்சியளித்ததோடு, தேசிகனின் நாவில் குடியிருப்பதாகவும் வரமளித்தார். ஊரெங்கும் தேசிகனின் புகழ் பரவியது.
பாம்பாட்டி ஒருவன் தேசிகனிடம் வம்பிழுக்க எண்ணினான். ''என்னிடம் விஷ நாகங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றிடம் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா?” என சவால் விட்டான். தரையில் ஒரு கோடு வரைந்த தேசிகன், ''முடிந்தால் உன் நாகங்கள் இக்கோட்டைத் தாண்டட்டும் பார்க்கலாம்” என்றார்.
பாம்பாட்டி நாகங்களைத் தரையில் விட, அவை சீறியபடி கோட்டை நோக்கிப் பாய்ந்தன. தேசிகன் கருட மந்திரம் ஜபிக்கத் தொடங்கினார். எங்கிருந்தோ வட்டமிட்டபடி கருடன் ஒன்று அங்கு வந்தது. நாகங்களைக் கால் நகத்தால் பிடித்தபடி இரையாக்க முயன்றது.
பயந்து போன பாம்பாட்டி, ''ஐயா... என்னை மன்னியுங்கள். இந்த நாகங்களால் தான் என் பிழைப்பு நடக்கிறது. தயவு செய்து அவற்றை உயிருடன் விடுங்கள்'' எனக் கெஞ்சினான். தேசிகன் மனமிரங்கி மன்னிக்கும் எண்ணத்துடன் மந்திரம் ஜபித்தார். நாகங்களை விடுவித்த கருடன் வானில் சிறகடித்து பறந்தது. பாம்பாட்டியும் மகானான தேசிகனின் காலில் விழுந்து வணங்கினான்.
