ADDED : அக் 17, 2024 09:17 AM

ஜான்ஸி ராணி
'கணபதியைத் தொழ காரியம் கைகூடும்' என்ற நம்பிக்கை உள்ள மராத்திய மக்கள் மகாலட்சுமி மீதும் பக்தி செலுத்தினர். இதன் அடையாளமாக இன்றும் மும்பை சித்தி புத்தி விநாயகர் கோயிலும், மகாலட்சுமி கோயிலும் உள்ளன. இந்தியர்களின் பக்திக்கு ஈடு இணையே கிடையாது.
ஒவ்வொரு ஹிந்துவும் தன் குழந்தைக்கு கடவுளின் பெயரையே சூட்டுவர். எப்போதும் கடவுளின் பெயரை உச்சரிக்க வேண்டும் என்பதே இதன் தத்துவம். இந்த உணர்வு கொண்ட குடும்பத்தில்தான் மணிகர்ணிகா நவ.19, 1828ல் பிறந்தாள். தன் 14 வயதில் ஜான்ஸி மன்னர் கங்காதர் ராவ் நெவால்கரை திருமணம் புரிந்தார். பிறகு மக்கள் அவரை ஜான்ஸி ராணி என்றும், லட்சுமி பாய் என்றும் அழைத்தனர்.
இதற்கு காரணம் தங்கள் இஷ்ட தெய்வமான மகாலட்சுமியாகவே அவரை கருதினர். இந்நிலையில் ஆங்கிலேயரால் ஜான்ஸி ராணியும் பாதிக்கப்பட்டார். தன் ஆண் குழந்தை இறந்துவிட ஆனந்தராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்தார். இதை ஆங்கிலேயர்கள் ஏற்கவில்லை. அவர்களின் சட்டப்படி இது செல்லாது என்றனர். என்ன வேடிக்கை.
இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்தவன் நாட்டை கபளீகரம் செய்ததோடு, யார் மன்னராக வர வேண்டும் என்ற சட்டத்தையும் நம்மீதே சுமத்தியிருக்கிறான் என கோபப்பட்டார் ஜான்ஸி ராணி. இவரது வீரத்தை அறிந்த ஆங்கிலேயர்கள் இவரையும், இவருக்கு விசுவாசமான படை வீரர்கள், மக்களையும் அவ்வளவு எளிதாக வளைக்க முடியாது என்பதை உணர்ந்தனர். காசி விஸ்வநாதரின் தீவிர பக்தை ஜான்ஸி ராணி. இதற்கு காரணம் இவரது தாய். ஆம். சிறுவயதில் இருந்தே இவருக்கு தாய்ப்பாலோடு கதை, பாடல்களாக ஆன்மிக உணர்வை ஊட்டி வளர்த்திருந்தார். இதுதான் அவரது வீரத்துக்கு காரணம். அத்துடன் சிறுவயதிலேயே போர்க்கலைகளை கற்றும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
இவ்வளவு தைரியசாலியான ஜான்ஸியை எப்படி வெல்வது என ஆங்கிலேயர் பயந்தனர். அதனால் அவர்கள் 60 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக (1854ம் ஆண்டு) வழங்குவதாகவும், நாட்டை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் ஜான்ஸி ராணியிடம் நயவஞ்சக எண்ணத்தோடு நிபந்தனையை விதித்தனர். அத்தோடு ஜான்ஸி ராணிக்கு உதவுவதற்காக வந்த தாந்தியா தோபே என்ற தளபதியையும், அவருடன் வந்த 20 ஆயிரம் வீரர்களையும் விரட்டி அடித்தனர்.
இப்படி பல தடைகளை சந்தித்தாலும் நம்பிக்கை இழக்காத ஜான்ஸி ராணி, தன் மக்களும் தன் மீதுள்ள நம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதற்காகவே ஹல்தி (மஞ்சள்) - குங்குமப்பண்டிகையை கொண்டாடினார். என்ன பண்டிகை இது?
திருமணமான பெண்கள் மஞ்சள், குங்குமம் பரிமாறிக் கொண்டு, தாலி பாக்கியம் நிலைக்க அம்பிகையை வேண்டுவர். கன்னிப் பெண்கள் திருமணமான பெண்களிடம் இருந்து மஞ்சள், குங்குமம் பெற்று ஆசி பெறுவர். இந்த பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
(இந்த பண்டிகை இன்றும் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கோவாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஆடி, ஆவணியிலும், தீபாவளி, சங்கராந்தி (தை முதல்நாள்) அன்றும் அம்பிகையை வழிபடுகின்றனர்)
பின் ஒருநாள் ஆங்கிலேயப் படை ஜான்ஸி நகருக்குள் புகுந்தது. ஜான்ஸி ராணியை தப்பிக்க வைக்க மக்கள் போரில் இறங்கினர். அதன்படி ராணியும் தப்பித்து, முன்பு தனக்கு உதவ வந்த தாந்தியா தோபே என்ற தளபதியை சந்தித்தார். பின் இருவரும் தங்கள் படைகளுடன், ராவ் சாஹிப் பேஷ்வா என்ற மன்னரின் படையுடனும் ஏற்கெனவே உருவாகியிருந்த புரட்சிப் படைகளுடன் இணைந்து குவாலியருக்குச் சென்றனர். குவாலிய மன்னர் ஜியாஜிராவ் சிந்தியா ஆங்கிலேயர்களின் அடிவருடி. இந்த துரோகியை ஒழிக்க வேண்டும் என அவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். இந்நிலையில் இவர்களை பின்தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்களும் இவர்களை சுற்றி வளைத்தனர்.
''என் உடலில் மூச்சு இருக்கும் வரை எதிரிகளை கொல்லாமல் விடமாட்டேன். அதற்கு அருள்புரிய வேண்டும்'' என கடவுளை பிரார்த்தித்து, ஆங்கிலேயரை எதிர்க்க தன் வீரர்களுடன் குதிரையில் புறப்பட்டார் ஜான்ஸி ராணி. கண்ணிமைக்கும் நேரத்தில் பலரை பந்தாடி எமலோகம் அனுப்பினார். ஒரு கட்டத்தில் தனக்கு பின்பக்கமாக வந்த ஆங்கிலேயனால் தாக்கப்பட்டு உயிர் நீத்தார்.
வலியச் சென்று யாருக்கும் துன்பம் இழைக்கவில்லை; ஆனால் வலிய வந்த பகைவனை பக்தியின் மூலம் வெல்லலாம் என்பதை நிரூபித்தவர் ஜான்ஸி ராணி.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695