ADDED : மார் 07, 2025 08:41 AM

'ஜெய்ஹிந்த்' செண்பகராமன்
இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளிடம் இருந்து தனக்கு ஆதரவு கிடைத்ததாலும், ஏற்கனவே ஜெர்மானிய அரசின் ஒத்துழைப்பு இருந்ததாலும் பலத்துடன் ஆங்கிலேயரை இந்தியாவில் இருந்து விரட்ட திட்டங்கள் தீட்டினார் செண்பகராமன். அதனால் விரைவில் இந்த நிழல் அரசாங்கத்தை காபூலில் இருந்து டில்லிக்கு மாற்றி ஆட்சியைப் பிரகடனம் செய்ய வேண்டும் எனத் திட்டம் வகுத்தார்.
ஆனால் எதிர்பாராத வகையில் நிலைமை மாறியது. உலகப் போரில் இங்கிலாந்துக்கு ஆதரவாக அமெரிக்கா கை கொடுத்தது. அதனால் எதிரி நாடுகளுக்கு பயம் தொற்றிக் கொண்டது. இங்கிலாந்தின் அழுத்தம் காரணமாக ஜப்பான் 'சுதந்திர இந்திய அரசாங்கத்திற்கு' அளித்த ஆதரவை விலக்கியது. செண்பகராமனைத் தவிர வேறு யாரும் அதைக் காக்க முன்வராத நிலை உருவாக, 'அரசாங்கம்' கலைக்கப்பட்டது.
செண்பகராமன் சிந்தித்தார். இந்த நிலைமைக்குக் காரணம், அமெரிக்கா, இங்கிலாந்துக்குக் கொடுத்த ஆதரவுதான் என்பதால், நேரடியாக அமெரிக்காவுக்கே சென்று இந்திய விடுதலைக்கு முயற்சித்தால் என்ன எனத் தோன்றியது அவருக்கு. 1919ம் ஆண்டு அங்கே போன அவர், ஜனாதிபதியான உட்ரோ வில்சனைச் சந்தித்தார். ஆனால் அவர் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்காவில் இனவெறி முற்றிலும் நீங்காத அவலம் நிலவியது.
ஜனாதிபதி வில்சன், வெள்ளையர்களுக்கு சாதகமாகவும், கறுப்பின மக்களுக்கு பாதகமாகவும் செயல்படுகிறாரோ எனத் தோன்றியது. தன் நாட்டுக்காக உதவி தேடிப் போன இடத்தில் அங்கும் கொடுமை அரசாங்கத்தாலேயே நிகழ்வதைக் கண்டு நொந்தார். இங்கே தனக்கு நியாயமோ,
ஆதரவோ, உதவியோ கிடைக்காது என்பது புரிந்தது. இதற்கிடையில் இங்கிலாந்து உளவாளிகள் செண்பகராமனின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தனர். அவரை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என தந்திரங்களை மேற்கொண்டனர். அவற்றில் ஒன்று, அழகிய பெண்களை அவருடன் பழக விட்டது.
ஆனால் செண்பகராமனோ, இந்த சபலத்துக்கெல்லாம் ஆளாகவில்லை. 'எனக்குத் திருமணம் செய்து கொள்ளும் ஆசை இல்லை. தாய்நாட்டின் விடுதலைதான் முக்கியம். ஆகவே என்னை எந்தக் கவர்ச்சியாலும் வீழ்த்த முடியாது' என சூளுரைத்தார்.
வெவ்வேறு வேடம் பூண்டு அரசாங்கத்தின் கண்களில் மண்ணைத் தூவி தப்பித்தார். ஒரு சமயம், கிழக்கு ஆப்பிரிக்க பிரஜை போல வேடமிட்டு, 'அப்துல்லா பின் மன்சூர்' என பெயரும் வைத்துக் கொண்டார். இந்தப் பெயருடன் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அங்கே அடிமைபட்டுக் கிடந்த இந்தியர்களிடம் ஆறுதலாகப் பேசியதோடு அவர்களுக்காக தலைமறைவுப் போராளியாக பணியாற்றினார்.
மீண்டும் ஜெர்மனிக்கு வந்தார். ஏற்கனவே தனக்கு அறிமுகமாகி, நெருங்கிய நண்பராக திகழ்ந்த மன்னர் கெய்சரின் ஆதரவோடு இந்தியாவில் ஆங்கிலேயரை கலக்கமுறச் செய்து நாட்டை விட்டு விரட்ட எண்ணியிருந்தார். அப்போது முதல் உலகப் போரும் முடிவுக்கு வந்தது. அதேசமயம் ஜெர்மனியில் நாஜி கட்சி வலுப்பெற்று, கட்சித் தலைவர் ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானார். ஏற்கனவே ஜெர்மானிய அதிகாரிகளுக்குப் பரிச்சயமானவர் என்பதால் ஹிட்லருடன் சுலபமாகப் பழகும் வாய்ப்பு செண்பகராமனுக்குக் கிடைத்தது. ஆனால் இவர் முந்தைய ஆட்சியாளரான கெய்சரின் நெருங்கிய நண்பர் என்ற வகையில் நாஜிப் படையினர் அவரை சந்தேகக் கண் கொண்டே பார்த்தனர். இதை செண்பகராமன் உணராமல் இல்லை. தனக்கும் அங்கே உள்ள இந்தியப் புரட்சியாளர்களுக்கும் எப்போதும் ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவரால் ஊகிக்க முடிந்தது.
இதற்கிடையில் அவரை மணமுடிக்க ஜெர்மானியப் பெண்கள் பலர் வலை வீசினர். யாரையும் ஏறெடுத்தும் பார்க்காத செண்பகராமன், ''நான் இந்தியப் பெண்ணைத்தான் மணப்பேன். அப்படி ஒரு பெண் அமையாவிட்டால் பிரம்மசாரியாக காலம் கழிப்பேன்'' என இந்தியப் பண்பாட்டை பேணுவதில் உறுதியாக இருந்தார்.
அந்த காலகட்டத்தில் அவரைப் போலவே இந்திய விடுதலைக்காகப் போராடிய பம்பாயைச் சேர்ந்த பார்சி பெண்ணான காமா அம்மையாரைச் சந்தித்தார். உடன் லட்சுமி பாய் என்ற தன் வளர்ப்பு மகளையும் அழைத்து வந்திருந்தார். அவள் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவள் என்றும், விடுதலைக்காகப் போராடும் தியாகிகளைப் பற்றிய விவரங்களை அவள் சேகரிப்பதாகவும், அந்த வகையில் செண்பகராமனைப் பார்க்க வந்ததாகவும் தெரிவித்தார் காமா.
லட்சுமி பாய் என்ற பெயர் சட்டென செண்பகராமனுக்கு ஜான்சி ராணியை நினைவுபடுத்தியது. அப்போதே அந்தப் பெண் மீது அவருக்கு அபிமானம் தோன்றியது. அடுத்தடுத்த சந்திப்புக்குப் பிறகு, இருவரும் மனம் ஒப்பித் திருமணம் செய்து கொண்டனர். 1931ல் பெர்லின் நகரின் ஆல்டர் ஓட்டலில் மணமக்களாக இணைந்தனர். மனைவியை 'ஜான்சி' என அழைத்து அந்நாளைய
இந்தியப் போராட்ட தியாகிக்கு மரியாதை செலுத்தினார் செண்பகராமன்.
நட்புடன் பழகி வந்தாலும், எதேச்சாதிகார மமதை மிகுந்தவராக இருந்தார் ஹிட்லர். இந்தியா மீது தாழ்வான அபிப்ராயம் கொண்டிருந்தார். நேரடியாக செண்பகராமனிடமே, ''இந்தியர்கள் அடிமை வாழ்வுக்குதான் தகுதியானவர்கள். அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆள அங்கே யார் இருக்கிறார்கள்?'' என கிண்டல் செய்தார்.
பலர் முன்னிலையில் தாய்நாட்டை கேவலமாக விமரிசித்ததைக் கேட்டு கொதித்தார் செண்பகராமன். 'என்னிடமே என் நாட்டைக் கேவலமாகப் பேச என்ன தைரியம்' என மனதிற்குள் பொருமினார். ''உங்கள் ஊகம் மிக தவறானது. இந்தியர்களின் அருமை, பெருமைகள் தெரியாத அறிவிலி பேசுவது போல இருக்கிறது, உண்மை நிலவரம் என்னவென்று சொல்கிறேன். இந்தியர் ஒவ்வொருவர் உடலிலும் சுதந்திர வேட்கை கொழுந்து விட்டு எரிகிறது. அடிமைத் தளையைத் தகர்க்கத் துாண்டும் தேசிய உணர்வு கொண்ட அத்தகைய சமூகத்துக்கு, பெற்ற சுதந்திர நாட்டை ஆளத் தெரியாதா என்ன?'' என்றெல்லாம் வாதாடி ஹிட்லரை தலைகுனிய வைத்தார். அதுமட்டுமல்ல, அவ்வாறு பேசியது தவறு என்றும் தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் ஹிட்லரிடம் இருந்து எழுத்து மூல பதிவையும் பெற்றுக் கொண்டார்.
ஓர் இந்தியனிடம் அவமானப்பட்டோமே என்ற கோபம் ஹிட்லரிடம் உண்டானது. உடனிருந்த அவரது சகாக்களும் கேவலப்பட்டு விட்டதை எண்ணி வருந்தினர். செண்பகராமனைப் பழி தீர்க்க திட்டம் தீட்டி, அவருக்குப் பரிமாறப்பட்ட உணவில் விஷத்தைக் கலந்தனர். இந்த விஷம், உட்கொண்டவரை உடனே கொல்லாது; கொஞ்சம் கொஞ்சமாக நோயாளியாக்கி, பிறகு முற்றிலுமாக வீழ்த்தும்.
ஆனாலும், அவர்கள் எதிர்பார்த்தபடி நோய்வாய்ப்பட்ட செண்பகராமன் தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். இந்த அதிசயம் வெறும் சிகிச்சையால் அல்ல, அவருடைய தேசபக்தி மிகுந்த மனோதிடத்தால்தான் என்பது நாஜிக்களுக்குப் புரியவில்லை. அதனால் அவர் பிழைத்து விட்டதை அவர்களால் பொறுக்க முடியவில்லை. விளைவாக, அவரை ஆயுதங்களால் தாக்கிப் படுகாயப்படுத்தினர்.
இம்முறை செண்பகராமனால் மீள முடியவில்லை. 1934ம் ஆண்டு மே 26 அன்று 43ம் வயதில் உயிர் நீத்தார். அச்சமயம், மனைவியிடம், ''நான் இறந்த பிறகு என் சாம்பலை இந்தியாவுக்கு எடுத்துச் செல். அதில் ஒரு பகுதியை என் தாயாரின் சாம்பலைக் கரைத்த கரமனை ஆற்றில் சேர்த்துவிடு. மீதியை கேரள நாட்டு வயல்களில் துாவ ஏற்பாடு செய்'' எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் பல அரசியல் இடையூறுகளால் லட்சுமி பாயால் அவரது விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. இருப்பினும் அஸ்தி கலசத்தை பத்திரமாகப் பாதுகாத்து, 32 ஆண்டுகள் கழித்து, 1966ல்தான் கணவரின் கோரிக்கையை அவர் நிறைவேற்றினார்.
அஸ்தி கரைந்த போது அதில் இருந்த ஒவ்வொரு சாம்பல் துகள்களும் 'ஜெய்ஹிந்த்' என்றே கோஷமிட்டதாகத் தோன்றியது லட்சுமி பாய்க்கு!
அடுத்த வாரம்: ஆர்யா என்ற பாஷ்யம் ஐயங்கார்
பிரபு சங்கர்
72999 68695