sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 21

/

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 21

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 21

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 21


ADDED : மார் 14, 2025 08:57 AM

Google News

ADDED : மார் 14, 2025 08:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாஷ்யம் ஐயங்கார்

தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி சேரங்குளத்தில் 1907ல் பிறந்தவர் பாஷ்யம். பெற்றோர் குப்புசாமி ஐயங்கார், செண்பகலட்சுமி. பிறந்த ஊரில் உயர்நிலைப் படிப்பை முடித்த பாஷ்யம், திருச்சி தேசிய கல்லுாரியில் படித்தார். அப்போது தேசிய உணர்வூட்டும் நுால்களை அதிகம் படித்தார். அதனால் விடுதலைக்காக எல்லா வழிகளிலும் போராடுவது என தீர்மானம் செய்தார். முக்கியமாக ஜாலியன்வாலா பாக் படுகொலை அவலங்களும், காந்திஜியின் சொற்பொழிவும் அவர் எண்ணத்தை பலப்படுத்தின.

அப்போது இங்கிலாந்தில் இருந்து சைமன் தலைமையில் ஒரு குழு, ஆங்கிலேய ஆதிக்கத்தை மேலும் நிலைநாட்டும் சாத்தியக்கூறுகளை ஆராய இந்தியாவுக்கு வந்தது. அந்த குழு சென்ற இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி காட்டி, 'சைமனே திரும்பிப் போ' என எதிர்ப்பு கோஷமிட்டனர்.

இந்தக் குழு திருச்சிக்கு வந்த போது பாஷ்யம் தலைமையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைக் கண்டித்து, பங்கேற்ற மாணவர்களுக்கு தலா 2 ரூபாய் அபராதம் விதித்தது கல்லுாரி நிர்வாகம். பாஷ்யத்துக்கு மட்டும் 5 ரூபாய்... தலைமை தாங்கினார் அல்லவா? ஆனால் அதைக் கட்ட மறுத்தார். அப்போது அவர் மீது பாசம் கொண்ட கல்லுாரி முதல்வர் சாரநாதன், அவர் சார்பில் தண்டத்தை செலுத்தினார். ஆனால் பாஷ்யம் இதையும் எதிர்த்தார். 'நான் கட்ட மறுக்கிறேன், ஆனால் எனக்காக நீங்கள் கட்டுவது என்னை அவமானப் படுத்துவதாக இருக்கிறது' என கல்லுாரியை விட்டு வெளியேறினார்.

அவ்வளவுதான். அதற்குப் பிறகு முழுநேர புரட்சியாளராக மாறினார். புரட்சி அமைப்புகள் இவரை வரவேற்றன. அவர்கள் ஆதரவில் துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெற்றார். எப்போதும் கைவசம் துப்பாக்கி வைத்திருக்க விரும்பி, மகாகவி பாரதியாரின் நண்பரான முத்துக் குமாரசாமிப் பிள்ளையுடன் நட்பு கொண்டார். அவர் மூலம் கைத்துப்பாக்கிகளை வாங்கி, துப்பாக்கி சுடும் வித்தையை நண்பர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

புரட்சியாளர் அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார். காளியம்மன் படத்துக்கு முன், 'இந்திய சுதந்திரத்துக்காக முழு மூச்சாக பாடுபடுவேன்' என எழுதி ரத்தக் கையெழுத்திட்டு உறுதிமொழி ஏற்றார்.

புத்துணர்ச்சியுடன் தன் கிராமத்துக்குத் திரும்பினார் பாஷ்யம். 'ஆங்கிலேயருக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும்' என்ற வேட்கை உள்ளத்தில் கனன்றது. அதற்கு அங்கு வாய்ப்பு கிடைத்தது. சிதம்பரம் நடராஜர் பூங்காவிற்கு அடிக்கல் நாட்ட கவர்னர் மார்ஷ் பாங்ஸ் என்பவன் வருவதாக அறிந்தார். உடனே சட்டைப் பைக்குள் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு சிதம்பரம் சென்றார். ஆனால் மார்ஷை சுட்டுக் கொல்ல இயலாதபடி சந்தர்ப்ப சூழல் தடுத்தது. ஆனாலும் தளராமல் அடுத்து ஏதேனும் வாய்ப்பு வரும் எனக் காத்திருந்தார்.

இதற்கு இடையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இறங்க அவர் சார்ந்திருந்த புரட்சி அமைப்புக்கு பணம் தேவைப்பட்டது. வரி, தண்டம் என்ற பெயர்களில் நம்மைச் சுரண்டி தன் கஜானாவைப் பெருக்கிக் கொண்டது பிரிட்டிஷ் அரசு, அதற்குச் சொந்தமான மதுரை இம்பீரியல் வங்கியைக் கொள்ளையடிக்க திட்டம் வகுத்தார். ராமசாமி, மாரியப்பன் என்ற நண்பர்களுடன் புறப்பட்டார். ஆனால் அவர்கள் சொதப்பி விடவே காவலர்களிடம் சிக்கினர். ஆனால் காவல்துறை புலனாய்வு செய்து விட முடியாதபடி, அன்றிரவே வங்கிக்குச் சென்று தாங்கள் கொள்ளை முயற்சியின் போது விட்டுச் சென்ற தடயத்தை அழித்தார் பாஷ்யம்.

ஆனால் நண்பர்களைக் காவலர்கள் துன்புறுத்தியதில் வேறு வழியின்றி பாஷ்யத்தை அவர்கள் காட்டிக் கொடுக்க வேண்டியதாகி விட்டது. அதனால் பாஷ்யம் கைது செய்யப்பட்டார். இரண்டு மாதம் சிறையில் சித்ரவதைக்கு ஆளான பாஷ்யம், குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் 'சந்தேகத்திற்குரிய, அரசாங்க துரோகி' என்ற புரட்சியாளர்களின் பட்டியலில் இவர் பெயரையும் சேர்த்தது காவல்துறை.

1931ல் சென்னைக்கு வந்த பாஷ்யம் தன் சகோதரர் வீட்டில் தங்கினார். இவர் மீது போலீசின் சந்தேகப் பார்வை விழுந்த போதும், அதற்காக அஞ்சாமல் எப்போதும் கதர் ஆடைகளை அணிந்தார்; அதோடு அந்நியத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு நேரடியாகச் சென்று கதர் ஆடைகளை விற்பனை செய்ய முயன்றார். ஆனால் கடை முதலாளிகளோ அதை ஏற்கவில்லை. அதைவிட அந்நியப் பொருட்களை விற்று தாம் சம்பாதிக்கும் அதிக லாபத்துக்கு இவர் தடையாக இருக்கிறார் எனக் கருதி தாம் மென்று கொண்டிருந்த வெற்றிலைச் சாற்றை அவர் மீது உமிழ்ந்தனர். 'ஆங்கிலேயனுக்கு அடிமையாகிக் கிடக்கும் இவர்கள் இருந்தால் என்ன, செத்தால் தான் என்ன?' என கோபம் மூண்டது பாஷ்யத்துக்கு. ஆகவே சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் இருந்த அத்தகைய கடைகளின் கூரைகளில் ரசாயனப் பொட்டலங்களை வீசினார். பகலில் சூரிய உஷ்ணத்தால் ரசாயனம் தீப்பற்றி கடைகளை எரித்து நாசமாக்கின. ஆனால் இதிலும் தடயம் கிடைக்காததால் பாஷ்யத்தை கைது செய்ய முடியவில்லை.

நேரடியாகக் குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய முடியவில்லையே தவிர, 'சந்தேகம்' என்ற பெயரில் அவரை சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தியது ஆங்கிலேய அரசு. ஆனால் மாட்டு வண்டிக்கு அடியில் வைக்கோல் பிரிகள் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கோணிப்பைக்குள் புகுந்து கண்களில் படாமல் தப்பிச் சென்றார்.

திருவல்லிக்கேணியில் ஐஸ் ஹவுஸ் பகுதியில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மக்களை கள் மயக்கத்தில் ஆழ்த்தி, தன் வயமிழக்கச் செய்வதால், தம் மீதான எதிர்ப்பு குறையும் என்ற ஆங்கிலேயரின் திட்டத்தால் கள்ளுக் கடைகளுக்கு அவர்களுடைய ஆதரவு கிடைத்தது. அந்தக் கடைகளை நடத்தியவர்கள் இந்தியர்களாக இருந்தாலும், கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் அதர்ம சம்பாத்தியத்தில் சுகம் கண்டவர்களாக அவர்கள் இருந்தனர்.

ஆகவே அந்தக் கடைகளை அடித்து நிர்மூலமாக்கினால், கொஞ்ச காலத்திற்கு அவை மீண்டும் முளைக்காமல் இருக்கும் என பாஷ்யமும், புரட்சி நண்பர்களும் கருதினர். அப்படி ஒரு கடையின் முன் மறியல் செய்தபோது, கடைக்காரர் கள்ளுப் பானையை எடுத்து வந்து 'வியாபாரத்தைக்' கெடுக்க வந்த பாஷ்யத்தின் தலையில் ஓங்கி அடித்து அவரைக் காயப்படுத்தினார். காவல்துறையும் பாஷ்யத்தைதான் கைது செய்து சிறையில் தள்ளியது.

எந்த வழக்கிலும் சிக்காமல், 'தண்ணி' காட்டும் பாஷ்யம் மீது காவலர்கள் கோபத்தில் இருந்ததால், அவர் சிறைச்சாலையில் கடும்துன்பத்திற்கு ஆளானார்.

ஒரு சமயம் கைதிகளின் அடிப்படை உரிமைகளுக்காக சிறையிலேயே உண்ணாமல் போராட்டம் நடத்தினார். அமீர் ஹைதர்கான் என்ற கைதியும் ஆதரவு தெரிவித்தார். ஆனால் எதுவுமே உண்ணாததால் அமீருக்கு உடல் பலவீனமுற்றது. அதைக் கண்டு அஞ்சிய சிறை அதிகாரிகள் அவருக்கு பலவந்தமாக உணவளிக்க முயற்சித்தனர். ஆனால் பாஷ்யம் குறுக்கே புகுந்து, அந்தக் காவலர்களைத் தாக்கி, துாக்கியெறிந்து துவம்சம் பண்ணினார்.

அவ்வளவுதான், கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அவருடைய கை, கால்களைக் கட்டி, சகட்டுமேனிக்குத் தாக்கினர். லத்திகள், பூட்ஸ் கால்கள் எல்லாம் கொஞ்சமும் இரக்கமின்றி அவரைத் துவைத்து எடுத்தன. விவரம் கேள்விப்பட்டு சுபாஷ் சந்திரபோஸ் இந்த விவகாரத்தில் தலையிட்டதால் கைதிகளுக்கு அடிப்படை உரிமைகள் கிடைத்தன. பாஷ்யத்தின் உண்ணாவிரதத்தையும் சுபாஷே முடித்து வைத்தார்.

சென்னை கோட்டையில் இந்தியக் கொடியைப் பறக்க விட்டவர் பாஷ்யம் ஐயங்கார். விபரம் அடுத்த வாரம்.



-தொடரும்

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us