ADDED : ஏப் 03, 2025 12:48 PM

ஜதீந்திரநாத் தாஸ்
சுயநலக் கலப்பு இல்லாத சிந்தனை கொண்டவரே உண்மையான தியாகி. இதற்கு ஜதீந்திரநாத் தாஸ் ஓர் எடுத்துக்காட்டு. தான் துன்பப்பட்டாலும் மற்றவர் நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்ற உயரிய குணம் கொண்டவர் அவர்.
கல்கத்தாவில் 1904 அக். 27ல் பிறந்த ஜதீந்திரநாத் தாஸ், பள்ளிப் பருவத்தில் அறிவாற்றல் மிக்கவராக விளங்கினார். விடலைப் பருவத்தில் ஒழுங்கீன ஈர்ப்புகளில் கவனத்தைச் செலுத்தாமல் அப்போது சுதந்திரத்திற்காகப் பாடுபடுவது என தீர்மானித்தார். அதன் விளைவாக, அப்போது வங்காளத்தில் தேசிய உணர்வோடு இயங்கி வந்த அனுசீலன் சமிதியில் உறுப்பினராக சேர்ந்தார். அடுத்து 1921ல் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு போராட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவருக்கு 17 வயது.
ஆனால் நாளடைவில் எந்தவகை எதிர்ப்பும், அநியாய எதிரியின் மீதான தாக்குதலாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் ஜதீந்திரநாத் தாஸ். ஆகவே அஹிம்சை தத்துவத்தை அவரால் ஏற்க முடியவில்லை.
ஆங்கிலேயருக்கு எதிரான நடவடிக்கைகளால் அவர்களை கலக்கமுறச் செய்யவோ, அச்சமூட்டவோ வேண்டும் என்ற புரட்சி எண்ணம் கொண்டவராக விளங்கினார். இந்த தாக்கத்தை இவருக்குள் விதைத்தவர், ஷசீந்திரநாத் சன்யால் என்ற புரட்சியாளர். இவருடைய கருத்துகளிலும், நடவடிக்கைகளிலும் ஈர்க்கப்பட்ட ஜதீந்திரநாத் தாஸ், அவரை குருவாக கருதி நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார்.
ஹிந்துஸ்தான் குடியரசுக் கட்சியை அவர் உருவாக்கிய போது, கூடவே இருந்து எல்லா பங்களிப்பையும் நல்கினார். இதன் விளைவாக கல்கத்தாவில் இருந்த வித்யாசாகர் கல்லுாரியில் உயர்நிலைக் கல்வி படித்தபோது, ஆங்கிலேய அரசுக்கு எதிரான பேச்சு, கருத்துப் பரிமாற்றம் போன்ற அரசியல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். ஆனால் இவை சாதாரண குற்றங்களாகக் கருதப்பட்டதால், அவரை கடுமையாக தண்டிக்க முடியாது எனக் கருதிய ஆங்கிலேய அரசு, ககோரி ரயில் நிலைய கஜானா கொள்ளையில், கொஞ்சமும் தொடர்பு இல்லாத அவரை சம்பந்தப்படுத்தியது.
இதனால் அவரை மைமன்சிங் (வங்காள தேசத்தின் ஒரு பகுதி) சிறையில் அடைத்து கொடுமையை அரங்கேற்றியது ஆங்கிலேய அரசு. எப்படி எல்லாம் துன்புறுத்த முடியுமோ அப்படியெல்லாம் செய்து குற்றுயிரும், குலையுயிருமாக ஆக்கியது.
முக்கியமாக இந்திய அரசியல் கைதிகளை பாரபட்சமாக நடத்தியதை அவரால் சகிக்க முடியவில்லை. அதாவது சமூகக் குற்றங்கள் காரணமாகக் கைது செய்யப்பட்ட ஆங்கிலேயக் கைதிகளுக்கு சலுகைகளும் சுதந்திரமும் வழங்கப்பட்டன. ஆனால் இந்தியர்களுக்கு அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டன. இதை எதிர்த்து ஜதீந்திரநாத் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
அதிகாரிகள் சமாதானப்படுத்த முயன்று தோற்றனர். ஆனால் ஒரு கைதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட விவரம் வெளியே கசிந்தால் அது மேலதிகாரிகளின் கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என பயந்த சிறை அதிகாரிகள், அவ்வாறு இருபது நாட்கள் உண்ணாவிரதம் இருந்த தாஸிடம், மன்னிப்பு கேட்டுக் கொண்டு, அனைத்து கைதிகளையும் ஒன்று போல நடத்துவதாக வாக்குறுதி அளித்தனர். தாஸும் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் புரட்சியாளர்கள் இவரைத் தொடர்பு கொண்டனர். முக்கியமாக பகத்சிங் இவரிடம் வெடிகுண்டு தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அவர் கோரியபடி தயாரித்த ஜதீந்திரநாத், கல்கத்தாவில் இருந்து ஆக்ராவிற்கு அவற்றை மிக ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு சேர்த்தார். அவை 1929ல் லாகூர் சட்டமன்றத்தில் பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோரால் வெடித்து, காலனி ஆதிக்கம் மீதான போராளிகளின் எதிர்ப்பைத் தெரிவித்தன.
இந்த சம்பவம் தொடர்பாக, வெடிகுண்டு தயாரித்த குற்றத்துக்காக ஜதீந்திரநாத் கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். இங்கும் இந்தியக் கைதிகள் புறக்கணிக்கப்பட்டனர். பிரிட்டிஷ் கைதிகளுக்கு நல்ல உணவும், சலவை செய்யப்பட்ட உடைகளும் வழங்கப்பட்டன.
ஆனால் புரட்சிக் கைதிகளுக்கு கொஞ்சம்கூட ருசி இல்லாத, ஏன் சுத்தமே இல்லாத உணவும், கசங்கிய உடைகளும் அளிக்கப்பட்டன. இவர்களுக்கென உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடம் குப்பை, கூளம், கரப்பான் பூச்சிகள், எலிகள் நிறைந்து நாற்றம் வீசியது. அங்கே பணியாளர்களும் கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல், அலட்சியமாக உணவு என்ற பிண்டத்தைத் தயாரித்தனர். இந்தியக் கைதிகளுக்குத் தட்டில் போட்டு துாக்கி எறிந்தார்கள். அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைகளில் கொஞ்சமும் சுகாதாரம் இல்லை.
இது பொறுக்காத ஜதீந்திரநாத் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அவர்களோ அவரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. 'இந்தச் சூழலில் உண்ணாவிரதம் இருந்துதான் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்' என்ற முடிவுக்கு வந்த அவர், அவர்கள் கொடுத்த உணவை ஏற்க மறுத்தார். இதற்காக அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
விஷயம் வெளியே தெரிந்து விடக் கூடாதே என்பதற்காக அவருக்கு பலவந்தப்படுத்தி உணவைப் புகட்டினர். அதை ஏற்காமல் திணிக்கப்பட்ட உணவை வெளியே துப்பினார். அவ்வளவுதான், இந்த 'அவமானத்தை' தாங்கிக் கொள்ள முடியாத அதிகாரிகள் அவரை அடித்து உதைத்தனர். இதனால் அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டது; பக்கவாத வேதனையும் சேர்ந்து கொண்டது.
அவரை வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அவர் குடிக்கும் நீரில் குளுகோஸ் போன்ற மாத்திரைகளைக் கலந்து கொடுத்தனர். அவர் தெம்பு பெறுவார், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வார் என எதிர்பார்த்தனர். ஆனால் விவரம் புரிந்து கொண்ட ஜதீந்திரநாத் அந்த தண்ணீர்க் குவளையைத் தட்டி விட்டார். அதிகாரிகள் திகைத்தனர். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. அவர் உளமாற தங்கள் குலதெய்வமான காளிமாதாவை பிரார்த்தனை செய்தார்.
'அம்மா, என் வலி, துன்பம் எல்லாவற்றையும் உனக்குக் காணிக்கையாக்குகிறேன்; என் தேசத்துக்கு எப்படியாவது விடுதலை வாங்கித் தந்து விடு. உன் சகோதரி பாரதமாதா கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்டு அடிமையாக உழல்வதை இன்னுமா சகித்துக் கொண்டிருக்கிறாய் போதும் அம்மா, உன் உக்கிரத்தை என் நாட்டு இளைஞர்கள் மனதில் விதைத்துவிடு, அவர்கள் மூலமாக விரைவில் என் கோரிக்கையை நிறைவேற்று தாயே'
ஆனால் அதிகாரிகள் தங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்கவில்லை. அவரது கைகளைப் பின்புறமாகக் கட்டி, ஒரு குழாயில் பாலை நிரப்பி அவர் மூக்குக்குள் செலுத்தினர். இப்போதும் அவர் திமிறவே, குழாய் வெளியே தெறித்து விழுந்தது. ஆனால் அவருடைய சுவாசக் குழாய்க்குள் பால் புகுந்து சுவாசப் பைகளை மோசமாகப் பாதித்தது.
அதிகாரிகள் எவ்வளவோ கொடுஞ்செயல்கள் புரிந்தும், கெஞ்சியும் அவர் மசியவில்லை. இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, 63 நாட்கள் உண்ணாவிரதக் களைப்போடு, அதிகாரிகளின் தாக்குதல் பாதிப்புகளும் சேர்ந்து கொள்ள, செப்.13, 1929 அன்று ஜதீந்திரநாத் தாஸ் உயிர் நீத்தார். அப்போது அந்த இளைய தியாகியின் வயது 25.
லாகூர் ரயில் நிலையத்துக்கு அவர் உடல் வந்த போது அங்கே மட்டுமல்ல, அங்கிருந்து கல்கத்தா செல்லும் வரை ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். கல்கத்தா ஹவுரா ரயில் நிலையத்துக்கு வந்து சுபாஷ் சந்திர போஸ் சவப்பெட்டியைப் பெற்றுக் கொண்டார். மயானத்துக்குச் சென்ற அந்த இறுதி ஊர்வலத்தில் அஞ்சலி செலுத்த வந்த சுமார் ஏழு லட்சம் தேசியவாதிகளின் வரிசை இரண்டு மைல் துாரம் நீண்டிருந்தது.
அடுத்த வாரம் -- அஞ்சலை அம்மாள்
பிரபு சங்கர்