ADDED : ஏப் 17, 2025 12:30 PM

அஞ்சலை அம்மாள்
கடலுாரில் பிறந்த ஒரு வீரப்பெண்மணியை காந்திஜி பாராட்டியதோடு, அவரது மகளைத் தன் சொந்த மகளாகவும் பாவித்திருக்கிறார். அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் தான் அஞ்சலை அம்மாள். நெசவுத் தொழில் செய்த முத்துமணி, அம்மாக்கண்ணு தம்பதிக்கு 1890, ஜூன்1ல் மகளாக பிறந்த இவர், குடும்பத் தொழில் மீது சிறு வயதிலேயே அக்கறை கொண்டிருந்தார்.
திண்ணைப்பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே இந்திய சுதந்திரம் பற்றியதான விழிப்புணர்வைக் கொண்டிருந்தார். ஆங்கிலேயர்கள் செயற்கையாக பொருளாதார பாதிப்பு, வறுமையை உருவாக்கி வந்ததை கோபத்துடன் கவனித்தார்.
நாட்டில் பஞ்சம், பட்டினி, வறுமை ஏற்படுமானால் இந்தியர்கள் அனைவரும் தங்களின் நிரந்தர அடிமைகளாகத்தான் வாழ வேண்டியிருக்கும் என மனக்கணக்கு போட்டனர். அதனால் நமக்குச் சொந்தமான வளத்தை, அவர்கள் பலாத்காரத்தால் சொந்தம் கொண்டாடுவதையும், நம் நிலத்திலே நாம் அவர்களுக்குக் கட்டுப்பட்டு இயங்க வேண்டிய கொடுமையையும் பொறுக்காத அஞ்சலை, தன் ஆற்றலுக்கு உட்பட்டு, தன் வசம் இருந்து வளத்தை மூலதனமாக வைத்து ஆங்கிலேயரை எதிர்க்க முடிவு செய்தார். ஆமாம், நெசவுத் தொழிலை அபிவிருத்தி செய்து, அவற்றை இந்திய சகோதர, சகோதரிகளுக்கு விற்று, அந்நிய ஆடை புறக்கணிப்பு என்ற எதிர்ப்பைக் காட்டினார். இவரது எண்ணத்துக்கு பலம் சேர்க்க இவருடன் இணைந்தார் கணவர் முருகப்பன்.
கடலுாரில் இருந்து சென்னை சைதாப்பேட்டைக்கு வந்த இந்தத் தம்பதி, தறி போட்டு, நெசவு செய்து துணிகள் தயாரித்து தாமே பல சிற்றுார்களுக்குச் சென்று விற்று வந்தனர். 1921ல் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இவர்கள் இணைந்தனர். இந்த வகையில், ஆங்கிலேயருக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் தென்னிந்தியப் பெண் அஞ்சலை அம்மாள். ஆனால் இவர் பத்தோடு பதினொன்றாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆமாம்,தனக்கு சொந்தமான நிலம், வீட்டை விற்று, அந்தத் தொகையால் தேசிய விடுதலை சக்தி மேலும் தீவிரமடைய உதவியவர். புதுச்சேரியில் இருந்து கடலுாருக்கு ஒருமுறை வந்திருந்த மகாகவி பாரதியார், ''என் கற்பனையில் உதித்த புதுமைப் பெண்ணை இங்கே பார்க்கிறேன். பெண்கள் அடுப்படியையே தஞ்சமடைந்து, வீட்டைவிட்டு வெளியே வர அஞ்சும் காலத்தில், அஞ்சலை அம்மாள் தான் துணிச்சல் மிக்கவர் என்பதை, இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கு கொள்வதன் மூலம் நிரூபித்திருக்கிறார். என் நெஞ்சம் நிமிர்கிறது''என்றெல்லாம் பாராட்டியிருக்கிறார்.
சிப்பாய்க் கிளர்ச்சி (1857) என்ற, ஆங்கிலேய அரசின் மீது காட்டப்பட்ட முதல் வெகுஜன எதிர்ப்பு, ஆங்கிலேயரை திகைக்கவும்,வெஞ்சினம் கொள்ளவும் வைத்தது. அவ்வாறு புரட்சியில் ஈடுபட்ட சிப்பாய்களையும், அவர்களுக்கு ஆதரவு அளித்த மக்களையும் நுாற்றுக் கணக்கில் கொன்று குவித்தனர். இந்த படுபாதக செயலை முன்னின்று நடத்திய கொடுங்கோலனின் பெயர் ஜேம்ஸ் நீல். அவனைப் 'பாராட்டும்' வகையில் 1860ம் ஆண்டு அவனுக்கு சென்னை மவுன்ட் ரோடில் ஒரு சிலையை ஆங்கிலேயர் நிறுவினர். இந்தப் பாவச் சின்னத்தை அகற்றக் கோரி இந்திய புரட்சியாளர்கள் போராடினர். 1927, செப்.1 அன்று எஸ்.என். சோமையாஜுலு தலைமையில் அஞ்சலை அம்மாளும் அவரது கணவர், மகள் அம்மாக்கண்ணு மூவரும் சேர்ந்து சிலையை உடைக்கும் 'பழிவாங்கும்' செயலில் ஈடுபட்டனர். இந்தக் குற்றத்துக்காக அஞ்சலை அம்மாளுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்துக்கு வந்த காந்திஜி சிலை உடைப்பு முயற்சியில் ஈடுபட்ட அஞ்சலை அம்மாள் குடும்பத்தினரைப் பாராட்டினார். அதோடு சிறுமி அம்மாகண்ணு மீது மிகுந்த பாசம் கொண்டு அவளைத் தன்னுடன் வார்தா ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டார். அதுமட்டுமல்ல, அம்மாகண்ணு என்ற பெயரை லீலாவதி என மாற்றி வைத்தார். அஞ்சலையும், கணவரும் மனமுவந்து மகளை காந்திஜியுடன் அனுப்பினர். தமிழகத்தில் தாங்கள் தொடர்ந்து தேசிய விடுதலைக்காகப் போராட, மகள் வடநாட்டில் அவ்வாறே சேவை புரிய அனுமதித்தனர்.
அடுத்து 1931ல் ஜனவரியில் கடலுாரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்ட அஞ்சலை, பிற புரட்சியாளர்களைப் போல போலீசாரால் தாக்கப்பட்டார். அப்போது அவர் ஆறுமாத கர்ப்பிணி வேறு! ஆனாலும் சந்தோஷமாகச் சிறை சென்றார். சிறை தண்டனை முடிவதற்குள் அவர் பிரசவிக்க வேண்டியிருக்கவே, தற்காலிக விடுதலை (பரோல்) பெற்று வந்தார். ஆனாலும் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அவர் எஞ்சிய 15 நாள் தண்டனையைப் பூர்த்தி செய்வதற்காக சிறைக்குத் திரும்பினார். அவரது திடமனதைக் கண்டு ஆங்கிலேயர்களே கலங்கினர்.
அஞ்சலை அம்மாளின் விடுதலைச் செயல்கள் காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன. அதனால் 1931ல் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் அவருக்குத் தலைமை பொறுப்பை அளித்தனர். இதனால் உற்சாகமாகி மேலும் சில நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். அவற்றில் ஒன்று - கள்ளுக்கடை மறியல். இதற்காக ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்து சட்ட மறுப்பு மறியலிலும், அந்நியத் துணி நிராகரிப்புப் போராட்டத்திலும் பங்கேற்றதற்காக மீண்டும் சில மாதங்களுக்கு சிறை வாழ்க்கை!
1934ம் ஆண்டு கடலுாருக்கு வருகை தந்த காந்திஜி அஞ்சலை அம்மாளை சந்திக்க விரும்பினார். ஆனால் அரசாங்கம் அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் மனம் தளரவில்லை அஞ்சலை. பர்தா உடை அணிந்து கொண்டார், ஒரு குதிரை வண்டியில் பயணி போல வந்து காந்திஜியை சந்தித்தார். அவருடைய துணிவைக் கண்டு 'நீதானம்மா 'தென்னிந்தியாவின் ஜான்சிராணி'' என வெகுவாகப் பாராட்டினார்.
தொடர்ந்து எதிர்ப்பைக் காட்டவும், சிறை செல்லவும் அஞ்சலை தயங்கவில்லை. தனி நபர் சத்தியாகிரகம், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம், சென்னை மற்றும் பிற நகரங்களுக்கும் சென்று வீர உரை ஆற்றி, மக்களை விடுதலை வேள்விக்கு ஊக்குவித்தது என்று பல குற்றச்சாட்டுகளால் அடுத்தடுத்து சிறை தண்டனை ஏற்று தன்னைப் பெரிதும் வருத்திக் கொண்டார் அஞ்சலை.
1946ல் சென்னை மாகாண சட்ட மன்ற உறுப்பினராக கடலுார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர். ''நம் கிராமங்களில் உற்பத்தியாகும் பஞ்சு அந்தந்த கிராமங்களிலேயே கதர் ஆடைகளாக உருவாகி, நம் மக்களின் துணிப் பஞ்சத்தைப் போக்க வேண்டும். இதற்கு ஆங்கிலேய அரசு ஒரு சட்டம் இயற்ற வேண்டும்.
ஒரு முழத் துண்டைக் கட்டிக்கொண்டு எங்கள் விவசாயி நிலத்தில் பாடுபடுகிறார். உங்களுக்கோ இரண்டு மூன்று என்று கோட்டுகள்! ஏழை விவசாயிக்கு உணவில்லை, துணியில்லை. ஆனால் நீங்கள் மூன்று வேளை சாப்பிட்டு அஜீரண கோளாறுக்காக மருத்துவரைப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு உணவும், உடையும் கொடுக்கும் எங்கள் விவசாயியை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?'' என சட்ட மன்றத்தில் கணீரென முழங்கினார் அஞ்சலை அம்மாள்.
தம் பதவிக் காலத்தில், தீர்த்தாம்பாளைய மக்களுக்காக புவனகிரி செல்லும் வீராணம் வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்காலை உருவாக்கி குடிநீர் கொண்டு வந்தார். தாகம் தீர்ந்து மகிழ்ந்த ஊர் மக்கள் அந்தக் கிளை வாய்க்காலை 'அஞ்சலை வாய்க்கால்'என அழைத்தனர். தவிர, கடலுார் அரசு மருத்துவமனையில் எக்ஸ்-ரே கருவியை முதன்முறையாக நிறுவினார். பண்ருட்டிக்கு அருகிலுள்ள சிற்றுார்களில் சுகாதாரமற்ற குடிநீரால் மக்களுக்கு நரம்பு சிலந்தி நோய் ஏற்பட, அவர்களுக்கும் உதவிகள் செய்தார். நேர்மையான, உண்மையான, வித்தியாசமான அரசியல்வாதியாகத் திகழ்ந்தார்.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தியாகி ஓய்வூதியத்தைப் பெற மறுத்த இந்த வீராங்கனை, தம் 71ம் வயதில், 1961ம் ஆண்டில், விவசாய பணிகளில் ஈடுபட்டவாறே உயிர் நீத்தார்.
-அடுத்த வாரம்: லாலா லஜபதி ராய்
பிரபு சங்கர்
72999 68695