ADDED : டிச 06, 2024 07:29 AM

காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க வைணவர்கள் சிலர் காஞ்சி மடத்திற்கு வந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் வெறித்து பார்த்தபடி முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தார்.
'சுவாமி... இவருக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. எத்தனையோ வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களை தரிசித்தால் குணம் உண்டாகும் என குணசீலம், சோளிங்கர் கோயில்களுக்கு சென்றோம். இவருக்கு ஏதாவது செய்யுங்களேன்' என்றனர்.
'நீங்கள் அனைவரும் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லுங்கள்' என்றார் காஞ்சி மஹாபெரியவர். அனைவரும் ஒருமித்த குரலில் சொல்லத் தொடங்கினர். கடைசியில் மஹாபெரியவர் குறிப்பிட்ட நபருக்கு துளசி தீர்த்தம் கொடுத்தார். அங்கிருந்த பலசாலியான ஒருவரை அழைத்து பாதிக்கப்பட்டவரின் தலையில் ஒரு குட்டு வைக்கச் சொன்னார்.
அனைவரும் குட்டு வைப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன ஒரு ஆச்சரியம்! குட்டு விழுந்ததும் சட்டென தலையைத் தடவினார் பாதிக்கப்பட்டவர். 'நான் எங்கே இருக்கிறேன், இங்கு எப்படி வந்தேன்?' என்றார் ஒன்றும் புரியாமல்.
'எல்லாம் சுவாமிகளின் அனுக்கிரஹம்' என நெகிழ்ந்தனர் வைணவர்கள். 'விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஜபித்ததாலும், நம்பிக்கையுடன் திவ்யதேசங்களை (பெருமாள் கோயில்கள்) தரிசித்ததாலும் கிடைத்த பலன்' என்றார் மஹாபெரியவர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும்.
* குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து.
* நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.
* ஆயிரம் தெய்வம் இருந்தாலும் குலதெய்வத்துக்கு ஈடு இல்லை.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com