
மகாராஷ்டிராவில் உள்ள சதாராவில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். அவரைக் காண மனைவியுடன் சென்றார் சுப்ரமணியம். சுவாமிகளைக் கண்டதும், 'சிவமகிமா ஸ்தோத்திரம்' என்ற புத்தகத்தைக் காட்டி, 'தினமும் இதை படி' என சைகை மூலம் ஆசியளித்தார் மஹாபெரியவர். சிவபெருமானின் பெருமையைக் கூறும் நுால் இது.
மஹாபெரியவர் மவுன விரதத்தில் இருக்கிறார் என்பது இதன் பின்னரே சுப்ரமணியத்துக்கு புரிந்தது. 'இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்' என சைகை மூலம் சுவாமிகள் நமக்கு சொல்கிறாரே' என மனைவி நெகிழ்ந்தார். பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.
தினமும் படித்தவர், சில நாளைக்கு பிறகு படிக்க மறந்தார்.
'முடிந்தவரை நான் படிக்கிறேன்' என திங்கட்கிழமை தோறும் மனைவியும் படிக்கத் தொடங்கினார். நாளடைவில் அவரும் மறந்தார். அந்த புத்தகம் கவனிப்பார் இல்லாமல் கிடந்தது. எட்டு ஆண்டுகள் ஓடின. திருமணத்திற்கு தயாராக இருந்த மகளின் ஜாதகத்தை கையில் எடுத்தார் சுப்ரமணியம். ஜோதிடரிடம் காட்டிய போது, 'இப்போதே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம்' என்றார்.
இரண்டு ஆண்டு கடந்தும் வரன் அமையவில்லை.'ஜாதகம் நல்லா இருக்குன்னு சொன்னாரே... பிறகு ஏன் தாமதம் ஆகுது?' என ஜோசியரை மீண்டும் அணுகினார்.
'இன்னுமா அமையலை... எதுக்கும் உங்கள் ஜாதகத்தையும் பார்க்கலாம்' என்றார்.
அதன்படி சுப்ரமணியம் தன் ஜாதகத்தை காட்டிய போது, 'தோஷம் இருக்கு. சிவ அபச்சாரம் பண்ணிருக்கே... அது தீரணும்னா தினமும் ஸ்லோகம் சொல்லணும்' என்றார்.
'அப்படியா... என்ன ஸ்லோகம்?' எனக் கேட்டார் சுப்ரமணியம்.
'சிவமகிமா ஸ்தோத்திரத்தை சொல்லலாம் என என் உள்ளுணர்வு சொல்றது' என்றாரே பார்க்கணும்!
பத்து ஆண்டுக்கு முன்பே காஞ்சி மஹாபெரியவர் இதை கொடுத்தாரே என நெகிழ்ந்த சுப்ரமணியம், 'அப்படியே ஆகட்டும்' என்றார். மீண்டும் அந்த ஸ்தோத்திரத்தை படிக்க ஆரம்பித்தார். ஆறே மாதத்தில் திருமணம் நடந்தது.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* பூஜைக்கு பயன்படுத்திய பூவை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
* பெண் தெய்வத்திற்கு கருப்பு நிற ஆடையை சாத்தக்கூடாது.
* சாப்பிடும் போது காலணி அணியாதீர்கள்.
* நோயின்றி வாழ பகலில் துாங்க வேண்டாம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com