
காஞ்சி மஹாபெரியவர் ஆந்திராவிற்கு யாத்திரை சென்றார். அங்கு அவர் தங்கிய அறையை ஒட்டி அலுவலக அறை இருந்தது. பக்தர்கள் காணிக்கையாக தரும் பொருட்களை அலுவலகத்தில் கொடுத்து ரசீது பெற வேண்டும். அங்கு வேட்டி, புடவை, சால்வை, தங்க, வெள்ளிக்காசுகள் ஆகிய பொருட்கள் அறை முழுவதும் ஆங்காங்கே கிடந்தன.
அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு பகலில் அதை எடுத்து வைக்க நேரம் இருக்காது. ஏனென்றால் அவ்வப்போது 'இதைக் கொண்டு வாருங்கள்... அதைக் கொண்டு வாருங்கள்' என சுவாமிகள் சொல்வதால் எப்போதும் பரபரப்பாகவே அந்த அறை இருக்கும்.
அசதியால் இரவு உணவு முடித்தவுடன் கிடைத்த இடத்தில் துாங்கி விடுவர். ஒருநாள் திருடன் ஒருவன் அங்கே நுழைந்து பணம் இருக்கும் மரப்பெட்டியை திறக்க முயற்சி செய்தும் முடியாததால் துாக்க முயன்றான். அதுவும் முடியவில்லை.
பக்கத்து அறையில் காஞ்சி மஹாபெரியவர் விழித்திருந்தார். வந்திருப்பது திருடன் என்பதை அறிந்தும் அவர் கத்தவில்லை. அருகில் படுத்திருந்த சீடர்களை எழுப்பி, 'பக்கத்து ரூம்ல பெட்டியைத் துாக்க ஒருத்தன் சிரமப்படுறான். போய் ஒத்தாசை பண்ணுங்கள்' என்றார்.
சீடர்கள் லைட் சுவிட்சை ஆன் செய்தனர். வெளிச்சம் வந்ததும் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் தலைதெறிக்க திருடன் ஓடினான். உடனே சுவாமிகளிடம், 'ஓடிப் போயிட்டான் பெரியவா' எனத் தெரிவித்தனர்.
'அடடா... சொல்லாமலே போயிட்டானே... பெட்டியில் இருந்து வேணுங்கிறதை எடுத்துட்டு போடானு சொல்லி இருக்கலாமே...' என்றார். திருட வந்தவனுக்கும் அனுக்ரஹமா; அவன் மீதும் பெரியவா கருணை காட்டுகிறாரே... என அனைவரும் திகைத்தனர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சியையும் பார்க்காதே.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com

