ADDED : அக் 24, 2024 03:01 PM

மகிழ்ச்சி பற்றி காஞ்சி மஹாபெரியவர் என்ன சொல்கிறார்.
'சில நேரங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எப்போதும் இது போல இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம் அல்லவா... ஆனால்... ஒரு செயலைச் செய்தால் துக்கம் வருகிறது. வேறு ஒரு செயலைச் செய்தால் மகிழ்ச்சி வருகிறது. மகிழ்ச்சி வர வேண்டும் என்றால் என்ன செய்கிறோம்?
சினிமா போகலாம் அல்லது கச்சேரி கேட்கலாம், ஓட்டலில் சாப்பிடலாம். ஆக கண், காது, நாக்கு என ஒரு விஷயத்தை அனுபவிக்கும் போது மகிழ்ச்சி ஏற்படுவதாக நினைக்கிறோம். சரி... இங்கெல்லாம் போனால் மகிழ்ச்சி உண்டாகிறதே... அது எங்கிருந்து வருகிறது... பின்வரும் சம்பவத்தை பார்த்தால் உண்மை புரியும்.
தன் ஒரே மகனை விதிவசத்தால் பறி கொடுத்த ஒருவன் சோகமாக இருக்கிறான் என வைத்துக் கொள். அவனிடம் 'கச்சேரிக்கு வா' என நண்பன் அழைத்தால் மகனைப் பறிகொடுத்தவன் வருவானா?
மனம் சரியாக இருந்தால் வெளியில் இருப்பவை மகிழ்ச்சியைத் தரும். ஒருவன் தன் வீட்டில் இருந்தே பாட்டு பாடி மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். இன்னொருவன் கடவுளின் திருநாமத்தை ஜபிப்பதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
இது எப்படி உண்டாகிறது? மகிழ்ச்சி வெளியில் இருந்து வரவில்லை. அது உள்ளே இருந்து வருகிறது. உனக்குள்ளே மகிழ்ச்சி இருக்கு.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* தெற்கு, மேற்கு நோக்கி பூஜை செய்ய வேண்டாம்.
* பூஜைக்கு பயன்படுத்திய பூவை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
* ருத்ராட்சம், ஸ்படிக மாலை அணிந்து துக்கம் விசாரிக்காதீர்கள்.
* புண்ணிய தீர்த்தங்களில் எச்சில் துப்பவோ, சிறுநீர் கழிக்கவோ கூடாது.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com