ADDED : பிப் 27, 2025 03:00 PM

திருமணத் தடை நீக்கும் சக்தி கணபதி
இதுவரை தனித்து காணப்பட்ட, இளமைப் பருவ கணபதி, இப்போது தனது சக்தியோடு இணைந்து காணப்படுகிறார். நெருப்பிலே சூடும், மலரிலே மணமும் இருப்பது போல், இறைவனும் அவரது அருளும் பிரியாமல் இருப்பது இந்த வடிவத்தின் அடிப்படைத் தத்துவம். பின்னிரு கைகளில் பாசம், அங்குசம் ஏந்தியவராக, பக்தர்களின் பயத்தைப் போக்கும் அபய முத்திரையை வலக்கையில் காட்டியவராக, இடது தொடையில் பச்சை நிறமுள்ள சித்தி தேவியை அமர்த்தி அவளை அணைத்திருப்பவராக, மாலை நேர சூரியனைப் போன்ற ஒளியை உடையவராக எழுந்தருளியிருப்பவரே சக்தி கணபதி.
தியான சுலோகம்
ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடிப்ரதேசம்|
ஸந்த்யாருணம் பாசஸ்ருணீ வஹந்தம் பயாபஹம் சக்தி கணேச மீடே ||
ஹரிதாம் - பச்சைநிறமுடைய
தேவீம் - சித்திதேவியெனும், மோட்சம் அளிக்கக் கூடிய தேவியை
ஆலிங்க்ய - (ஒரு கரத்தால்) தழுவிக் கொண்டு
பரஸ்பர - ஒருவருக்கு ஒருவராக
ஆச்லிஷ்ட - அன்போடு அணைத்துத் தழுவியவாறு உள்ள
கடிப்ரதேசம் - (தேவி தழுவிய) இடுப்புப் பகுதியை உடையவருமாக
நிஷண்ணம் - (தனது தொடை மீது தேவியை அமர்த்தி) அமர்ந்திருப்பவரும்
பாசஸ்ருணீ வஹந்தம் - பாசம் எனப்படும் கயிறு, ஸ்ருணீ எனப்படும் அங்குசம் ஆகியவற்றை இருகரங்களில் தாங்கியவரும்
பயாபஹம் - பயத்தைப் போக்குபவரும்
ஸந்த்யாருணம் - மாலைநேர சூரியஒளி போன்ற செந்தூர நிறத்தவருமான
சக்தி கணேசம் - சக்தியோடு கூடிய சக்தி கணேச மூர்த்தியை
ஈடே - துதிக்கிறேன்
அங்குசம், பாசம்: புலனடக்கத்தைக் குறிப்பது அங்குசம். உயிரின் ஆணவ மலத்தை அகற்றுவதைக் குறிப்பது பாசம்.
அபய முத்திரை: அபயம் என்ற சொல்லுக்கு பயமின்மை என்று பொருள். பக்தர்களின் பயத்தைப் போக்குபவர் கணபதி.
சித்தி தேவி: சித்தி என்றால் நிறைவு, வெற்றி, முழுமை எனப் பல பொருள்கள் உண்டு. இவர், செயல்களைக் கைகூட வைக்கும் அன்னை. முக்தியும் அருள்வார்
பலன்: பயம் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். செயல்களில் தடை நீங்கும். மனமொத்த வாழ்க்கைத் துணை கிடைக்கும். திருமணத்தடை நீங்கும்.
அருள் தொடரும்
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்