ADDED : மார் 13, 2025 02:58 PM

செல்வம் அருளும் ஸித்தி (பிங்கள) கணபதி
விநாயகரை வணங்கினால், கல்வியும் செல்வமும் தாமே வந்து சேரும் என்பதைப் புலப்படுத்தும் விதத்தில், ஸ்ரீதேவி மற்றும் ஸம்ருத்தி தேவி ஆகிய இரு தேவியருடன் காட்சியளிக்கிறார் ஸித்தி கணபதி. இவரை பிங்கள கணபதி என்றும் அழைப்பதுண்டு. பிங்களம் என்றால் பொன்னிறம் என்று பொருள்.
வலக்கையில் மாம்பழம், இடக்கையில் கற்பக மரத்தின் பூங்கொத்துகள், பின் வலக்கையில் மழு, பின் இடக்கையில் கரும்பு ஆகியவற்றையும், துதிக்கையில் எள்ளு பூர்ணம் அடங்கிய மோதகத்தையும் ஏந்தியபடி தங்கத்தைப் போன்ற மஞ்சள் நிறத்தில், இலட்சுமி மற்றும் பூர்ண ஸித்தி ஆகிய இரு தேவியருடன் எழுந்தருளி இருப்பவர் இந்த கணபதி.
தியான சுலோகம்
பக்வ சூத பல கல்ப மஞ்ஜரீம் - இக்ஷு தண்டதில மோதகைஸ் ஸஹ!
உத்வஹந் பரசு மஸ்து தே நம: - ஸ்ரீ ஸம்ருத்தி யுத ஹேம பிங்கள||
பக்வ சூத பல - நன்கு கனிந்த இனிப்பு மாங்கனி
கல்ப மஞ்ஜரீம் - கற்பக மரத்தின் பூங்கொத்து (மாம்பூங்கொத்து)
இக்ஷுதண்ட - முழுமையான கரும்புக் கழி
திலமோத கைஹி - எள்ளு பூர்ணமுள்ள மோதகம் ஆகியவற்றுடன்
ஸஹ - கூடியதாக
பரசு - கோடரியையும்
உத்வஹந் - ஏந்தி இருப்பவரும்
ஸ்ரீ - லக்ஷ்மீ எனும் ஸ்ரீதேவியுடனும்
ஸம்ருத்தி - பூரண சித்தி எனும் சம்ருத்தி தேவியுடனும்
யுத - சேர்ந்து இருப்பவரும்
ஹேம - உருக்கிய தங்கம் போன்ற மஞ்சள் நிறத் திருமேனியரும்
பிங்கள - பிங்களர் எனும் பெயருமுடைய கணபதியே!
தே - உமக்கு (உமது திருவடிகளுக்கு எனது)
நமஹ - நமஸ்காரமானது (ஸாஷ்டாங்க வணக்கமானது)
அஸ்து - உரியதாகட்டும்.
மாம்பழம்: இன்ப துன்பங்களைக் கடந்து, பற்றற்ற நிலையை ஆன்மா அடைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
கற்பசு பூங்கொத்து: தேவலோகத்தில் உள்ள கற்பக மரத்தின் பூங்கொத்துகள் இவை. கணபதி தன் அடியவர்கள் கேட்டதைத் தருபவர் என்பதை உணர்த்தும்.
மழு: தந்தை சிவபெருமானின் ஆயுதம். உயிர்களைப் பிணைத்துள்ள பாசங்களை வெட்டி, வீடுபேற்றைத் தருவது.
கரும்பு: உயிர்களின் விருப்பங்களைக் குறிக்கிறது. உயிர்கள் வேண்டுபவற்றை அருள்பவர் கணபதி என்பதை கரும்பு காட்டுகிறது.
எள்ளு பூர்ண மோதகம்: எள்ளுப்பொடி, தேங்காய், வெல்லம் கலந்து செய்யப்படுவது இந்த மோதகம். எள் பாவத்தைப் போக்கும் தன்மை கொண்டது. அடியவர்களின் பாவங்களைப் போக்குபவர் கணபதி என்பதை இந்த மோதகம் உணர்த்தும்.
பலன்: குறைவில்லாத செல்வம் பெருகும். செய்த பாவங்கள் நீங்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும். பூரண நிறைவு கிட்டும்.
அருள் தொடரும்
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்