ADDED : ஜூன் 12, 2025 11:34 AM

மணப்பேறு அருளும் ஊர்த்துவ கணபதி ஊர்த்துவம் என்றால் மேலே என்று பொருள். பதமுக்திகளான சுவர்க்கம் போன்றவற்றை விட, பரமுக்தியான வீடுபேற்றை அதாவது பிறப்பு, இறப்பில் இருந்து நிரந்தர விடுதலையை அருள்பவர் இந்த கணபதி என்பதைக் குறிப்பதுதான் ஊர்த்துவ கணபதி எனும் திருப்பெயர். இவர் மடியில் வீற்றிருக்கும் சித்தி தேவி, வீடுபேற்றை அருளும் அன்னை. எட்டுக் கரங்களுடன் எண் திசைகளும் நிறைந்து நிற்கும் கணபதி இவர்.
தியான சுலோகம்
கல்ஹார சாலி கமலே க்ஷுக சாப பாண-தந்த ப்ரரோஹக கதீ கநகோ ஜ்வலாங்க: 1
ஆலிங்க நோத்யத கரோ ஹரிதாங்க யஷ்ட்யா-தேவ்யா திசத்வ பய மூர்த்வ கணாதிபோ மே ||
கல்ஹார -நீலோத்பல மலர்
சாலி -நெற்கதிர் கொத்து
கமல - தாமரைமலர்
இக்ஷுக சாப - கரும்பு வில்
பாண - மலர்க்கணை
தந்த - ஒடித்த தன் தந்தம்
ப்ரோரஹக கதீ - வலிமை வாய்ந்த பெரும் கதை (ஆகியவற்றை தாங்கியிருப்பவரும்)
கனக - தங்கத்தைப் போல்
உஜ்வல - ஒளிரும் மஞ்சள் நிறமான
அங்க; - திருமேனியரும்
ஹரிதாங்க - பசுமை நிறமுள்ள திருமேனியளும்
யஷ்ட்யா - கொடி போன்றவளுமான
தேவ்யா - சித்தி தேவியைத்
ஆலிங்கந - தழுவிய
உத்யத கரோ - கரத்தை உடையவரும் (தேவியால் தழுவப் படுபவருமான)
ஊர்த்வ கணாதிப: -- ஊர்த்துவ கணபதியாகிய பெருமான்
மே - எனக்கு
அபயம் - பயமின்மையை (நன்மையை)
திசது- அளிக்கட்டும்
நீலோத்பலம்: குவளை. அம்பிகை ஏந்தியுள்ள மலர். இறைவனின் ஐந்தொழில்களில் இது படைத்தலைக் குறிப்பது.
நெற்கதிர் : பயிர் வளத்தைக் குறிப்பது. அடியார்களின் ஆரோக்கியத்தைக் காப்பவர் கணபதி என்பதைக் காட்டுவது.
செந்தாமரை: ஞானத்தையும் சூரியனால் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் குறிப்பது.
சித்தி தேவி: சித்தி என்றால் நிறைவு, வெற்றி, முழுமை எனப் பல பொருள்கள் உண்டு. இவர், செயல்களைக் கைகூட வைக்கும் அன்னை.
கரும்பு வில், மலர்க்கணை: மன்மதனின் ஆயுதங்கள். உயிர்கள் வேண்டுபவற்றை அருள்பவர் கணபதி என்பதைக் காட்டுகின்றன.
ஒடித்த தந்தம் : துாய்மையையும் மனஉறுதியையும் கொண்டு செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது.
கதாயுதம் : இது பிடிக்கும் தண்டமும் உருண்டையான முனைத்தலைப் பகுதியும் சேர்ந்த ஆயுதம்.
பலன்: உடல் வனப்பு, பொலிவு, திருமணம் கை கூடுதல், வீடுபேறு.
அருள் தொடரும்...
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்