
பால தேவராய சுவாமிகள் கந்தசஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது. ஒருசமயம் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். சிகிச்சை செய்தும் பலனில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்துாருக்கு வந்தார். அப்போது அங்கு திருவிழா நடந்து கொண்டிருந்தது.
முருகபக்தரான இவருக்கு இதைக் கண்டதும் மனம் சற்று மாறியது. தற்கொலை எண்ணத்தை விட்டு கடலில் நீராடி முதலில் முருகனை தரிசனம் செய்தார். பின் தியானத்தில் அமர்ந்தவருக்கு முருகன் காட்சி தந்து சஷ்டி கவசம் பாடும் திறனை கொடுத்தார். அடுத்த நிமிடமே அவரது மனதில் பக்தி வெள்ளம் பிரவாகம் எடுத்து ஓடியதில் கவசம் பிறந்தது. பின் மற்ற ஐந்துபடை வீடுகளுக்கும் கவசம் பாடிமுடித்தார். வயிற்று வலியும் பறந்தது. கவசம் இயற்றுவதற்காகவே முருகன் தன்னை சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்து பரவசம் அடைந்தார்.
ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்தால் நோய்கள் அண்டாது. மனம் வாடாது. பதினாறு பேறும் பெற்று நீண்டநாள் வாழலாம். நவக்கிரகங்களும் நன்மை அளிப்பார்கள். முக்கியமாக குழந்தைச் செல்வம் இல்லாமல் வருந்துபவர்கள் கவசத்தை பாராயணம் செய்வது சிறப்பு.
ஏனென்றால் இவர்களுக்கு அந்த முருகனே குழந்தையாக வந்து பிறப்பான். இப்படி பல பலன்கள் உண்டு. இவை சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. சஷ்டிகவசம் நமது வாழ்க்கைக்கான கவசம்.