ADDED : டிச 22, 2023 04:47 PM

அங்கதன் என்ற தங்க மகன்
தன்னைத் தாக்கியது ராம பாணம் என்பதை அறிந்தபோது வாலி பேரதிர்ச்சி அடைந்தான். கொடியவன் ராவணனுடன் நட்பு கொண்டதாலும், தம்பியை விரட்டியடித்து அவனது மனைவியை அபகரித்ததாலும் தனக்குக் கிடைத்த தண்டனை இது என சமாதானம் அடைந்தான்.
அந்த நிலையிலும் தன் மகன் அங்கதனை வரவழைத்தான். வீழ்ந்து கிடந்த தந்தையைப் பார்த்ததும் கண்ணீர் பெருக, 'தந்தையே, என்ன கோலம் இது?' எனக் கதறினான் அங்கதன். அவனை அமைதிப்படுத்திய வாலி, 'என் முடிவு தீய நடவடிக்கைக்கான தண்டனை. நான் உளமாற ஏற்கிறேன். நீ இனி அண்ணல் ராமனுக்கு உதவியாக அவர் ஆணைகளை நிறைவேற்ற வேண்டும்' என அறிவுறுத்தினான்.
இளங்கன்றாக துள்ளித் திரிந்த அவனுக்கு தந்தையாரின் இறுதி கட்டத்தில்தான் அவருடைய துர்ச்செயல்கள் தெரியவந்தன. அவர் அறிவுறுத்தியபடி ராமனை பணிந்து நின்றான். பொன்னாலான வாளை அங்கதனின் இடையில் செருகி ராமன் வாழ்த்தினான். அதாவது வாலியின் வாரிசு என மறைமுகமாகச் சிறப்பித்தான்.
அங்கதன் அப்போது முதல் ராமதாசனாக ஆனான். தந்தையார் கட்டளைப்படி ராமனுக்கு சேவை செய்யத் தயாரானான்.
ராமனின் ஆணைப்படி கிஷ்கிந்தைக்கு அரசனாக சுக்ரீவனுக்கு முடிசூட்டினான் லட்சுமணன். அப்போது அங்கதனிடம், 'உன் சிற்றப்பன் சுக்ரீவன், இனி உனக்கு தந்தை போலாவான். அவனுக்கு உற்ற மகனாகத் திகழ்வாயாக' என்று ராமன் அறிவுறுத்தினான்.
பல நாட்களுக்குப் பிறகு சீதையைத் தேடுவதற்கு உதவுவதாக சுக்ரீவன் குறித்த காலம் கழியவே, ராமன் வெகுண்டு லட்சுமணனை அனுப்பி கோபத்தைத் தெரிவிக்கச் சொன்னான்.
அதே போல லட்சுமணன் சினப்புயலாக சீறி வந்ததைக் கண்ட அங்கதன் பதறிப் போனான். விவரம் தெரிந்து கொண்ட அவன் ஓடோடிப் போய் சுக்ரீவனிடம் தகவல் தெரிவித்தான். ஆனால் மது போதையில் இருந்த சுக்ரீவன் அலட்சியப்படுத்தினான். 'ராமனின் கோபம் கிஷ்கிந்தைக்கு ஆகாதே' என தவித்த அங்கதன் உடனே அனுமனிடம் போய் விவரம் சொன்னான். அதைக் கேட்டு அனுமனும் செய்ததறியாமல் திகைத்து நிற்க, அவனை அழைத்துக் கொண்டு தன் தாய் தாரையைச் சந்தித்தான் அங்கதன்.
மகனின் பதற்றம் கண்டு கவலைப்பட்ட தாரை, உடனே சேடிப் பெண்டிரை அழைத்துக் கொண்டு லட்சுமணனை எதிர்கொண்டாள். அவனிடம், 'எங்கெங்கோ சென்றிருக்கும் வானரப் படைகளை சுக்ரீவன் திரட்டிக் கொண்டிருக்கிறான். அவர்கள் வந்தவுடன், சீதையைத் தேடும் பணியில் சிரத்தையுடன் ஈடுபடுவான்' என்று சொல்லி சமாதானப்படுத்தினாள். இதைக் கண்டு அங்கதன் நிம்மதி அடைந்தான்.
வானரப் படைகள் கணிசமான எண்ணிக்கையில் வந்து சேர்ந்த பிறகு சீதையைத் தேடும் பணி சுறுசுறுப்பாக ஆரம்பித்தது. சுக்ரீவனின் ஆணைப்படி அனுமன், அங்கதன், நீலன் முதலானோர் தெற்கு நோக்கிச் சென்றனர். பலநாள் அலைந்து திரிந்தும் சீதை கடத்தப்பட்டிருக்கும் பகுதி எது என்றே தெரியவில்லை. வழியில் ஒரு பொய்கையை அவர்கள் கண்டனர். அதன் கரையில் செழித்து நின்ற மரங்களிலிருந்து காய்,கனிகளை பறித்து உண்டனர். அந்த நீர்நிலையில் இருந்து நீர் எடுத்து பருக முயன்ற போது, அதைக் காவல் புரியும் துமிரன் என்ற அரக்கன் இவர்கள் மீது பாய, அவனை ஓங்கி அறைந்து கொன்றான் அங்கதன்.
பயணம் தொடர்ந்தது. அங்கதன் இச்செயலில் தன்னால் வெற்றி பெற இயலாது போகுமோ என சஞ்சலம் கொண்டான். தன்னை இளவரசனாக உயர்த்திய ராமன், என் தோல்வியை சகித்துக் கொள்வானா அல்லது தந்தையனைய சுக்ரீவன்தான் பொறுப்பானா? அவர்களிடம் போய் சீதை காணக் கிடைக்கவில்லை என்ற செய்தியைத் தெரிவிக்க எனக்குத் துணிவில்லை. ஆகவே இப்போதே உயிர் துறப்பேன்' என விரக்தியுடன் பேசினான்.
'எந்தையும் முனியும் எம் மிறை இராமனும்
சிந்தனை வருந்தும் அச் செய்கை காண்குறேன்
நுந்துவென் உயிரினை நுணங்கு கேள்வியீர்
புந்தியின் உற்றது புகல்விராம் என்றான்
-கம்பர்
ஆனால் வழியில் கழுகு இனத்தவனான சம்பாதியை அவர்கள் சந்தித்தது, சீதை தேடலில் புது திருப்புமுனையைக் காட்டியது. சூரியனை நோக்கிச் சென்ற தன் தம்பி ஜடாயுவைக் காப்பதற்காகத் தான் முன் சென்று சூரிய வெம்மையால் தன் சிறகுகள் தீயப் பெற்றவர் சம்பாதி. அவர், 'ராவணன் சீதையைக் கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்திருக்கிறான்' என்ற தகவலைச் சொன்னார்.
அவர் அளித்த தகவல் அங்கதனுக்குப் புதுத் தெம்பை அளித்தது. உடனே அனைவரும் உற்சாகத்துடன் இலங்கை நோக்கிப் பயணப்பட்டனர். ஆனால் இப்போது பெருங்கடல் எதிர்ப்பட்டு அவர்களைத் தொய்வடைய வைத்தது. இதைக் கடந்து சென்றால்தான் இலங்கையை அடைய முடியும். இந்தச் சாதனையை யாரால் செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்தபோது, அங்கதன், பணிவுடன் தன் தகுதியை வெளிப்படுத்தினான். அதாவது தன்னால் இக்கடலைத் தாண்டி இலங்கைக்குச் செல்ல இயலும் என்றும் ஆனால் திரும்பி வரும் உத்தி தெரியாது என்றும் வெளிப்படையாகத் தன் பலத்தையும், பலவீனத்தையும் அறிவித்தான்.
பிறகு அனுமன் அந்தப் பொறுப்பை மேற்கொண்டு கடலைத் தாண்டி, இலங்கையை அடைந்து, சீதையைக் கண்ட வெற்றியுடன் திரும்பினான். அந்த சமயத்தில் தனக்கு இல்லாத ஆற்றல் அனுமனுக்கு இருக்கிறதே என அங்கதன் பொறாமைப்படவில்லை. மாறாக தாம் எடுத்துக் கொண்ட நோக்கம் நிறைவேறுகிறது என மகிழ்ந்தான்.
அடுத்து இலங்கைக்குச் செல்ல கடல் மீது பாலம் கட்ட வேண்டும். வானரப் படையினர் கற்களையும், பாறைகளையும் சுமந்து வந்து கடலில் எறிந்தனர். மிக பிரமாண்ட மலைகளை அப்படியே பெயர்த்து எடுத்து கடலில் எறிந்து பாலம் அமைப்பதில் பெரும் பகுதிப் பணியை நிறைவேற்றியவன் அங்கதன்.
கடல் பாலத்தின் உதவியால் இலங்கையை அடைந்தாகி விட்டது. அடுத்தது போர்தான். ஆனால் போர் இலக்கணப்படி ராவணனிடம் யாரையாவது துாதனுப்பி, 'நீ உயிரோடு இருக்க விரும்பினால் சீதையை விடுவிப்பாயாக அல்லது இறக்க விரும்பினால் போருக்கு வா' என்ற செய்தியைச் சொல்ல வேண்டும். இதற்கு இப்போது சரியான நபர் அங்கதன்தான் என முடிவெடுத்தான் ராமன். ஆகவே, 'நம்பீ, நீ சென்று வா, அவன் பதில் தெரிந்து வா'என்று அவனிடம் சொன்னான்.
அங்கதனுக்குப் பெருமை பிடிபடவில்லை. தன்னை ராமன் உயர்த்திய நேர்த்தி உணர்ந்து நெகிழ்ந்தான்.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695