ADDED : டிச 22, 2023 05:07 PM
108 திவ்யதேசங்களில் தலைமையிடமாக செயல்படும் கோயில்தான் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில். இங்கு அருள்புரியும் ஸ்ரீரங்கநாதரை வைகுண்ட ஏகாதசியன்று தரிசித்தாலே நமது பாவம் அனைத்தும் தீரும்.
இவர் எங்கிருந்து வந்தவர் தெரியுமா... அயோத்தி. ஆம். ஸ்ரீராமபிரான் மற்றும் முன்னோர்களால் வழிபாடு செய்யப்பட்டவர்தான் இவர். ராவணனால் கடத்தி செல்லப்பட்டாள் ஸ்ரீராமபிரானின் மனைவியான சீதை. பின் ஸ்ரீராமபிரான் பல சோதனைகளை கடந்து சீதையை அயோத்திக்கு மீட்டு வந்தார். இந்த வெற்றிப்பயணத்திற்கு உதவியவர்களுக்கு ஸ்ரீராமபிரான் தன் பட்டாபிேஷக விழாவில் பரிசுகள் வழங்கினார். அப்போது அங்கு இருந்த ராவணனின் தம்பி விபீஷணனிடம், ''என்ன பரிசு வேண்டும்'' எனக் கேட்டார்.
''அயோத்தில் இருக்கும் ரங்கநாதர் சிலையை எடுத்துச் செல்ல விரும்புகிறேன்'' என்றான் விபீஷணன். அதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் கொடுத்தனுப்பினார். அங்கு இருந்து அவர் வரும்போது வழியில் காவிரி நதியை பார்த்தார். அப்போது விபீஷணனுக்கு நீராடும் ஆசை ஏற்படவே சிலையைக் கீழே வைத்துவிட்டு சென்றார். பின் நீராடி விட்டு வரும்போது சிலையை எடுத்தார். ஆனால் முடியவில்லை. இதனால் அந்த இடத்திலேயே ஸ்ரீரங்கம் கோயில் உருவானது.