sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 22

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 22

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 22

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 22


ADDED : ஜன 26, 2024 07:35 AM

Google News

ADDED : ஜன 26, 2024 07:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷ்யசிருங்கரும் ராமாவதாரமும்

தசரதன் கவலை கொண்டார். தனக்குப் பிறகு அயோத்தியை ஆளப் போவது யார் என்ற கேள்வி அவருக்குள் விஸ்வரூபம் எடுத்தது. அதுவரையிலான வாரிசில்லாத துர்ப்பாக்கியம் எப்போது விலகுமோ என்ற வேதனை அவர் உள்ளத்தை அரிக்க ஆரம்பித்தது.

உடனிருந்தே பழகிவரும் முனிவர் வசிஷ்டர், தசரதனின் ஆதங்கத்தை அறியாதவரல்லர். ஆகவே தசரதனிடம், 'வேள்வி இயற்றினால் விடை கிடைக்கும் என்று நான் அறிந்திருக்கிறேன். இத்தகைய 'மகவு அருள் வேள்வி'யைச் சிறப்புற நடத்தி நற்பலன் கிடைக்கச் செய்பவராக ரிஷ்ய சிருங்கர் என்ற முனிவரைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய உதவியை நாடினால் வருத்தம் விலகும் என நம்புகிறேன். அவரை அழைக்கலாமா?' என்று கேட்டார்.

'தாங்கள் சொன்னால் அது சரியாக இருக்கும். அவரை அழைத்து வருவது எப்படி? அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் முனிவரே' எனக் கேட்டுக் கொண்டார் தசரதன்.

ரிஷ்ய சிருங்கர், விபாண்டக முனிவரின் மகன். இளம் வயதிலேயே சாஸ்திர, வேத அறிவியலில் கரைகண்டவர். முகத்தில் கலைமானின் கொம்பைக் கொண்டவர் என்பதால் இவரை கலைக்கோட்டு முனிவர் என்பர். இவர் யாகம் செய்கிறார் என்றால் சுற்று வட்டாரமே மாசற்றதாக மாறும். அதனாலேயே யாகம் முடியும் முன்பே மழை பொழியும் அதிசயம் நிகழும்.

இவரது புகழைக் கேள்விப்பட்டான் உரோமபதன் என்ற மன்னன். அவனது நாட்டில் பல ஆண்டுகளாக மழையின்றி வறட்சியும், பஞ்சமும் தலைவிரித்தாடின. ரிஷ்யசிருங்கரின் காலடி பட்டால் போதும், நாடு வளம் பெறும் என அவன் கருதினான். அவரை அழைத்து வருவது எப்படி?

உரோமபதனின் அரண்மனை ஆடல் பெண்டிர் ரிஷ்ய சிருங்கரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தனர். மன்னனின் விசனம் அறிந்து, தாம் போய் முனிவரை அழைத்து வருவதாகச் சொல்லி புறப்பட்டனர். ரிஷ்ய சிருங்கர் தங்கியுள்ள வனப்பகுதிக்கு சற்று தொலைவில் பர்ணசாலை அமைத்து தங்கினர். முனிப்பெண்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டனர். அக்கம்பக்கத்து முனிப்பெண்கள் போலவே தாமும் நித்திய நியமங்களை மேற்கொண்டனர்.

ஒருநாள் விபாண்டகர் வெளியே சென்ற நேரத்தில் அப்பெண்கள் அந்த வீட்டினுள் நுழைந்து ரிஷ்யசிருங்கரை சந்தித்தனர். அவரும் வரவேற்று உபசரித்தார். அத்தனை அருகில் அழகிய பெண்களை அவர் அப்போதுதான் சந்திக்கிறார் என்பதால் அவர்களிடம் ஈர்ப்பு உண்டானது. ஆகவே அன்று மட்டுமின்றி அடுத்தடுத்த நாட்களிலும் அவர்கள் அவருடைய குடிலுக்கு வருவதும், பழங்களை வழங்குவதும், அவற்றை அவர் உவப்புடன் ஏற்பதுமாகக் கழிந்தது. ஒருநாள் முனிவர் தங்களின் ஆசிரமத்துக்கு எழுந்தருள வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ரிஷ்ய சிருங்கரும் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி உடன் புறப்பட்டார். ஆனால் அந்தப் பெண்களோ அவரை அங்கே, இங்கே என போக்குக் காட்டி மெல்லத் தம் நாட்டிற்கே அழைத்து வந்து விட்டனர்.

ரிஷ்யசிருங்கரின் பாதம் அந்நாட்டு எல்லையில் பட்டதுமே வெண் வானம் கருத்தது, கருமுகில்கள் சூழ்ந்தன, திவலையாய் ஆரம்பித்து அருவியாய் பொழிந்தது மழை! கிணறுகளும், குளங்களும், பிற நீர்நிலைகளும் நிரம்பின. அந்த அதிசயம் கண்டு மகிழ்ந்த உரோமபாதன், தன் அமைச்சர்கள், முனிவர்களுடன் சென்று ரிஷ்ய சிருங்கரின் பாதங்களில் விழுந்தான். 'எங்கள் வறட்சி போக்கிய வள்ளலே நன்றி' என நெகிழ்ந்தான்.

அதைக் கேட்டு ரிஷ்யசிருங்கர் திடுக்கிட்டார். தன்னை ஏமாற்றி அழைத்து வந்த பெண்கள் மீது கோபம் கொண்டார். உடனே மன்னன், 'நான் செய்த தவறைப் பொறுத்தருள வேண்டும். தங்களது ஆற்றலும், தெய்வீக சக்தியும் தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடக் கூடாது என்பதாக இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் அனுப்பியே இந்தப் பெண்கள் உங்களைச் சந்தித்தார்கள்' என்று சொல்லி மன்னிப்பு கேட்டான்.

அவன் பேச்சால் அமைதியானார் ரிஷ்ய சிருங்கர். இனி தர்மம் சார்ந்தோருக்காகத் தன் சக்தியை பயன்படுத்துவது என முடிவெடுத்தார்.

உரோமபதன், தன் மகள் சாந்தையை ரிஷ்ய சிருங்கருக்கு மணமுடித்து மகிழ்ந்தான். முனிவரும் அவளை ஏற்றுக் கொண்டு இல்வாழ்வைத் தொடங்கினார். இந்த விவரங்களை தசரதனுக்குச் சொன்ன வசிஷ்டர், நேரடியாக சந்தித்து அவர் மூலம் முனிவரை அயோத்திக்கு வருமாறு கேட்கலாம் என யோசனை அளித்தார்.

அதன்படி உரோமபதனின் அங்க நாட்டிற்கு பரிசுப் பொருட்களுடன் சென்றார் தசரதன். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மன்னன் தன்னை வந்து சந்தித்ததற்கான காரணம் கேட்டான். தசரதனும் தன் ஏக்கத்தை விவரிக்க விரைவில் மருமகன் ரிஷ்ய சிருங்கரை, மகள் சாந்தையுடன் அயோத்திக்கு அனுப்புவதாக கூறினான்.

தன் நாட்டில் திடீரென பசுமை புத்தொளி பெறுவதையும், தென்றலில் புது மணமும் கமழ்வதையும், மெல்லிய தூறலாய் தேவலோக ஆசி பரவுவதையும் தசரதன் உணர்ந்தார். அவருக்குப் புரிந்தது - ரிஷ்ய சிருங்கர் அயோத்தி எல்லையைத் தொட்டுவிட்டார். உடனே தன் மனைவியர், வசிஷ்டர் முதலான முனிவர்கள் புடைசூழ, இருகரம் கூப்பி தன் நாட்டை வந்தடைந்த ரிஷ்ய சிருங்கரை வரவேற்றார் தசரதன். முனிவரும் மலர்ந்த முகத்தினராய் உபசரணைகளை ஏற்றார். தசரதன் கேட்டுக் கொண்டதன்படி மாமனார் உரோமபதன் அறிவுறுத்த, அயோத்தி அரண்மனைக்கு ரிஷ்ய சிருங்கர் எழுந்தருளினார். அங்கும் ராஜமரியாதை பெற்றுக் கொண்ட முனிவர், தசரதனிடம் அழைப்புக்கான காரணம் கேட்டார்.

'என் குடிமக்களுக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் துன்பம் நேராதபடி அயோத்தியை ஆண்டு வருகிறேன். பொறுப்பைக் கைமாற்றிட வாரிசு இன்றி தவிக்கிறேன். தாங்கள் யாகம் இயற்றி குழந்தைப் பேறு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்றார் தசரதன்.

உடனே ரிஷ்ய சிருங்கர், 'மன்னவரே, வருத்தம் நீக்குக. இந்த அயோத்தி ஒன்று மட்டுமா, பதினான்கு உலகங்களையும் காத்து அரசாளும் வலிமை மிக்க மைந்தர்களை வழங்கவல்ல மாபெரும் வேள்வியை இங்கே இயற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்வீர்களாக'

'அரச நீ இரங்கல் இவ் உலகு

ஒன்றுமோ உலகம் ஈர் ஏழும் ஓம்பிடும்

வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்

இன்று நீ இயற்றுதற்கு எழுக ஈண்டு என்றான்'

-கம்பர்

என்று தசரதனுக்கு ஆறுதலளித்தார்.

உடனே வசிஷ்டர் தலைமையில் எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டு தேவையான பொருட்கள் கொண்டு வரப்பட்டன. துணை வேதியர் நுாற்றுக்கணக்கில் அழைக்கப்பட்டனர்.

விமரிசையாக யாகம் நடைபெற்றது.

ரிஷ்ய சிருங்கர் பிரதானமாக வீற்றிருந்து, பொங்கிப் பரவி, அடர்ந்து வானோக்கி எழும் தீக்குள் பலவகை ஆகுதிகளை இட்டார். நிறைவு கட்டத்தில் தீப் பிழம்பிலிருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது. அதன் கரங்கள் அமுதம் போன்ற பண்டத்தை தங்கத் தட்டில் ஏந்தி வந்து ரிஷ்ய சிருங்கரிடம் அளித்தது. பிறகு தீக்குள்ளேயே புகுந்து மறைந்தது.

அதைப் பெற்ற முனிவர், அதை அப்படியே தசரதனிடம் வழங்கி, 'உங்கள் மனைவியருக்கு அவரவர் தகுதிக்கேற்ப வழங்குங்கள்' என சொல்லி அளித்தார்.

தசரதனும் முனிவரை சிரம் தாழ்ந்து வணங்கி, அந்த அமுதப் பிண்டத்திலிருந்து ஒரு பகுதியை முதலில் கோசலைக்கும், அடுத்து கைகேயிக்கும், மூன்றாவதாக சுமித்திரைக்கும் அளித்தார். மூன்று சம பங்குகளாக இல்லாமல் கடைசியில் கொஞ்சம் மிஞ்சவே, அதையும் சுமித்திரைக்கு வழங்கினார்.

பரதன், லட்சுமணன், சத்ருக்னன் மூவருடன் ராமனின் அவதாரம் இனிதே நிகழ்ந்தது.

-தொடரும்

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us