sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சனாதன தர்மம் - 23

/

சனாதன தர்மம் - 23

சனாதன தர்மம் - 23

சனாதன தர்மம் - 23


ADDED : மார் 15, 2024 11:45 AM

Google News

ADDED : மார் 15, 2024 11:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாவமும், புண்ணியமும்

ஒருவர் செய்யும் செயலுக்கு ஏற்ப அது நன்மையானாலும் சரி, தீமையானாலும் சரி அதற்கேற்ப பலன் கிடைத்தே தீரும். ஆயினும் ஆணவத்தைத் துறந்து பாவத்தை உணர்ந்து கடவுளிடம் சரணாகதி அடையும் போது தண்டனை குறைக்கப்பட்டு மனிதன் காப்பாற்றப்படுகிறான் என்கிறது வேதம்.

ஒவ்வொரு நாளும் துாங்கும் போதும், விழித்திருக்கும் போதும் மனம் கசிந்துருகி சிவனின் திருநாமத்தை நினைத்துப் போற்றுங்கள். பலவழிகள் திரிந்து செல்லும் மனதை அவ்வாறு செல்ல விடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி கடவுளையே நினைத்து அவன் திருவடிகளை போற்றுங்கள். மார்க்கண்டேயரின் உயிரைப் போக்க வந்த எமனையே அழித்த திருநாமம் கடவுளின் திருநாமமாகும் என்கிறது திருஞானசம்பந்தர் தேவாரம்.

கடவுள் நம்பிக்கை ஒருவரை வாழ வைக்கிறது. அதைக் கேலிக் கூத்தாக்கி, சாதாரண மனிதர்களின் மனங்களைக் குழப்பி கடந்த 50 ஆண்டுகளாகப் பேசப்படும் போலிப் பகுத்தறிவு வாதம், கடவுள் நம்பிக்கையை மட்டும் சிதைக்கவில்லை. பாவம், புண்ணியம் என்ற சிந்தனையில் இருந்தும் தடம் புரளச் செய்திருக்கிறது. 'பாவமாவது, புண்ணியமாவது முடிஞ்சா கரையேறிக்கோ' என்ற நிலைக்கு சமுதாயம் தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கான விளைவு மனித மனங்களில் நிம்மதியற்ற தன்மை எங்கும் நிலவுவதை நாம் காண்கிறோம்.

சிறுவயதில் தவறுகள் செய்தால் சாமி கண்ணைக் குத்தி விடும் என்று சொல்லும் தாயாருக்குப் பயந்து நேர்மையான வழியில் பயணம் செய்த தலைமுறைகள் உண்டு. சாமியாவது பூதமாவது எப்படி வந்து எந்தக் கண்ணைக் குத்தும் எனக் கேலி பேசியவர்களை நம்பி பயணப்பட்டவர்கள் தங்கள் கைகளாலேயே தங்கள் கண்ணினைக் குத்திக் கொண்டதைக் கண்கூடாக இன்று காண்கிறோம். பக்தி என்னும் பெயரில் பயத்தை உருவாக்கி அதன் மூலம் தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கத்தை விதைத்தனர் நம் முன்னோர்.

பிறருக்குக் காலையில் துன்பம் கொடுத்தால், அது மாலையில் தானே ஒருவனைத் தேடி வந்தடையும் என்கிறார் திருவள்ளுவர். இதையே ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்கிறது நியூட்டனின் மூன்றாம் விதி.

செய்த பாவங்கள் தலைமுறைகளைத் தாண்டியும் பாதிப்புகளைத் தந்து விட்டுச் செல்கிறது. 'அவனுக்கென்னப்பா... அவன் பண்ணாத அநியாயமா? ஆனாலும் பாரு... கார்ல போறான்... நல்லா இருக்கான்... நானும் தான் கோயில் கோயிலாக சுத்துறேன். ஆனா என்னையத் தான் கஷ்டம் சுத்தி சுத்தி வருது' என்ற புலம்பல்கள் கேட்காத இடமே இல்லை. ஆனால் உண்மையில் நல்லவன் ஏதோ ஒரு விதத்தில் கடவுளால் காப்பாற்றப்பட்டு விடுகிறான். தீயவனோ காப்பாற்ற முடியாத உயரத்தில் இருந்து வீழ்ந்து போகிறான் என்பதே உண்மை.

காஞ்சி மஹாபெரியவர் சன்னதி. ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கிறார்கள். ஒவ்வொருவராக குடும்பத்துடன் வந்து கோரிக்கைகளைச் சொல்லி முறையிட்டு ஆசி பெறுகின்றனர். வரிசையில் வந்தது ஒரு வசதியான குடும்பம். அதில் வந்த இளம் தம்பதியுடன் எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவனும் இருந்தான். எல்லோருடைய கண்களிலும் கண்ணீர் தளும்பி நிற்கிறது. கண்களாலேயே பெரியவர் என்ன என்று கேட்கிறார். 'பிறந்ததில் இருந்து இந்தச் சிறுவன் மூளை வளர்ச்சியின்றி இருக்கிறான். செய்யாத வைத்தியமில்லை. அடுத்து என்ன செய்யுறதுன்னு புரியலை' என அழுது முறையிடுகின்றனர். அக்குடும்பத்தின் ஊர், பேர் இவற்றை விசாரித்து விட்டு சிறிது நேர மவுனமாக இருந்த மஹாபெரியவர் தொடர்ந்து பேசுகிறார். 'போன தலைமுறையில உங்கள் குடும்பத்தில் சரஸ்வதின்னு யாரும் இருந்தாளா...' எதிரில் நிற்கும் குடும்பத்தினர் மவுனம். இவர்கள் உறவினர் என அறியாமல் இவர்களின் பின்னால் நிற்கும் மற்றுமொரு குடும்பத்தினர் உறவு முறையை உணர்ந்து, 'ஆமா பெரியவா... இவங்க குடும்பத்துல தான் அவங்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம்' என்றனர். பெரியவர் மீண்டும் 'அவளை ரொம்பப் படுத்தினேளோ...' என்றார். இவர்களின் முந்தைய தலைமுறையில் அந்தப் பெண் ஏதோ ஒரு வகையில் கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறாள். இவர்களுக்குத் தெரியவில்லை.

பின்னர் நின்று உறவுமுறையைப் புரிந்தவர்கள், ''ஆம் பெரியவா'' என்றனர். அவ்வளவு தான் பெரியவர் மவுனமாக எழுந்து சென்று விட்டார். முந்தைய தலைமுறையில் ஒரு பெண் விட்ட கண்ணீர், இப்போது மூளை வளர்ச்சியற்ற குழந்தையை அந்தக் குடும்பத்தில் தந்து விட்டுப் போயிருக்கிறது. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் என்பாரே வள்ளுவர். அது தான் இது.

எனவே பாவங்கள் எப்போது செய்திருந்தாலும் தலைமுறை தாண்டிக் கூட திரும்ப ஏதோ விதத்தில் துன்பத்தை விதைத்து விட்டுப் போகிறது. எனவே தான் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் கடவுளுக்கு உற்றவர்களாய் வாழ்ந்திட வேண்டும் என்றாள் ஆண்டாள் நாச்சியார்.

''பண்ணிய புண்ணியம் பயிரில் தெரியும்'' என்பார்கள் கிராமப் புறங்களில். அவன் ரொம்ப கொடுத்து வச்சவன்டா என்பார்கள். எதைக் கொடுத்து வைத்தான். நற்செயல்களைத் தான். நேர்மையாக வாழ்பவர்கள் அப்போது கேலி செய்யப்படுவார்களே தவிர அவர்கள் எப்போதும் நிம்மதியும், மகிழ்வும் பெற்று இருப்பார்கள்.

ஒரே அலுவலகம். ஒருவர் லஞ்சமாக வாங்கிக் குவிப்பார். யாரையும் லட்சியம் செய்ய மாட்டார். காசு இருந்தால் பேசு; இல்லையென்றால் ஓடி விடு என்ற குணம் கொண்டவர். மற்றொருவர் ஒரு டீக்குக் கூட வேறு யாரும் தனக்கு கொடுத்து விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தவர். 'இதோ... பாரு... பெரிய காந்தின்னு நினைப்பு உனக்கு... என்ற கேலிக்கு அன்றாடம் ஆளாகுபவர். அவர் எங்கு மாற்றப்பட்ட போதிலும் தளராமல் உறுதியுடன் அதே நிலையில் இருந்தார். லஞ்சம் வாங்குபவர் பணம் கொடுத்துக் கொடுத்து அங்கேயே தொடர்ந்து பணி புரிந்தார். காலச் சக்கரம் சுழன்றது.

லஞ்சம் வாங்குபவர் பெரிய வீடு கட்டினார். கார் வாங்கினார். சொந்தக்காரர்களிலேயே வசதியானவர் எனப் பேசப்பட்டார். ஆனால் அவர் மனைவிக்கு திடீரென உடல்நலம் குறைந்தது. பக்கவாத நோய் வந்தது. படுத்த படுக்கையானாள்.

மகன் திருமணமாகி உடன் இருந்தான். மாமியாருக்கு இந்த நிலை வந்ததும் மருமகள் தன்னால் அவளைப் பராமரிக்க முடியாது எனக் கூறி கணவனை(மகனை) அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

இவருக்கும் சுகர், பிரசர் எனத் தொந்தரவுகள் அதிகரித்தன. ஓய்வு பெற்றார். அவர் பலன்களை வாங்க அலுவலகம் போன போது உடன் பணிபுரிந்தவர்களே முகத்தைத் திருப்பிக் கொண்டனர். காரணம் இவர் விதைத்த விதை.

இவருக்கும், மனைவிக்கும் நோய்க்கு செலவழிப்பதிலேயே பணம் எல்லாம் கரைந்தது. நல்ல வேளை பென்சன் சாப்பாட்டிற்கு உதவியது. ஆனாலும் மருத்துவச் செலவுகள் கழுத்தை நெரித்தன. அவருக்கு அப்போது தான் உலகம் தெரிந்தது. என்ன செய்வது? யாரும் உதவக் கூட மறுத்தனர். தனியாளாகத் திண்டாடினார். செல்வம் இல்லை. உதவ யாருமில்லை. பணம் இல்லாததால் யாரும் உதவவில்லை. நல்ல நண்பர்கள் இல்லை. உலகமே சுழன்றது. இப்போது என்ன செய்வது? வாழ்க்கையை ரீவைண்ட் செய்ய முடியுமா என்ன? வாழ்க்கைப் பாதையை ஒருமுறை மட்டுமே கடக்க முடியும். அதில் நம்மால் எவ்வளவு நன்மைகளை விதைக்க முடியுமோ அவ்வளவு விதைத்து விட வேண்டும்.

மற்றொருவரும் ஓய்வு பெற்றார். பிள்ளைகள் இவரைப் போல நேர்மையாக இருந்ததால் உயர் பதவிகளில் இருந்தனர். பெற்றவர்களைப் போற்றிப் பாதுகாத்தனர். முதுமையால் ஏற்பட்ட சோர்வைத் தவிர நோய்கள் ஏதுமில்லை. மகிழ்வாக ஓய்வுக் காலத்தைக் கழித்தார்.

பாவம் பின்னால் துன்பம் தரும் என்பதில்லை. அவரவர் கண் முன்னேயே அறுவடை செய்து விடுகிறது என்பதைத் தான் சனாதனம் வலியுறுத்துகிறது.

கடவுள் உண்டு. பாவ, புண்ணியக் கணக்கு உண்டு என்பதை முன்னோர் வழியில் உரக்கச் சொல்வோம். நேர்மையுடன் ஆனந்தமாக வாழ்வோம்.

-தொடரும்

இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்

93617 89870






      Dinamalar
      Follow us