sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 8

/

பச்சைப்புடவைக்காரி - 8

பச்சைப்புடவைக்காரி - 8

பச்சைப்புடவைக்காரி - 8


ADDED : மார் 22, 2024 09:20 AM

Google News

ADDED : மார் 22, 2024 09:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடிகனின் துன்பம்

ஒரு பெரிய நட்சத்திர ஓட்டல் அறையில் அமர்ந்திருந்தேன். முன்னால் இளம் நடிகன்.

“என் பிரச்னையை தீர்த்து வச்சீங்கன்னா என்ன கேட்டாலும் தரேன்”

“என்ன பிரச்னை?”

பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் தயாராகிறது. இளம் நடிகன்தான் கதாநாயகன். அருமையான கதை. அழகான கதாநாயகி. படம் வெற்றி பெற்றால் நடிகன் புதிய உச்சம் தொடுவான். ஒப்பந்தம் இடும் நிலையில் ஒரு வாரிசு நடிகர் குழப்பம் செய்கிறார்.

“அந்த வாரிசு நடிகன் எனக்கு வில்லனா வந்துட்டான் சார். வாழ்க்கையே அஸ்தமிக்கற நிலைமை. ஏதாவது பண்ணுங்க சார்”

நான் என்ன செய்ய முடியும்? இவனது கர்மக் கணக்கு எப்படி இருக்கிறதோ... ஏதாவது சொன்னால் துவண்டு விடுவான்.

“உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்”

“இப்படிச் சொல்லி கழற்றி விட்றாதீங்க சார். உங்களுக்குச் சாப்பாடு ஏற்பாடு செஞ்சிருக்கேன். சாப்பிட்டபின் யோசிச்சி நல்ல செய்தி சொல்லுங்க சார்”

நடிகன் வெளியேறினான். ஊழியர்கள் உணவு தர வயிறு நிறைய சாப்பிட்டேன்.ஓட்டலில் மேலாளர் போல இருந்த ஒரு பெண், “சாப்பாடு நன்றாக இருந்ததா?” தலையசைத்தேன்.

“வாயைத் திறந்து பேசினால் முத்து உதிர்ந்திடுமா? உலகத்திற்குப் படியளப்பவளை அலட்சியம் செய்கிறாயே!”

'தாயே' என வணங்கினேன்.

“நீ கணித்தது சரிதான். நடிகனின் கர்மக் கணக்கு இடியாப்பச் சிக்கலாக இருக்கிறது. அன்பு ஒன்று மட்டுமே பரிகாரமாக அமையும்”

“நான் என்ன சொல்லட்டும் தாயே”

“நானே உன் மனதில் எண்ணங்களை விதைக்கிறேன். வார்த்தைகளாக மலர்கிறேன். குரலில் கொஞ்சம் கண்டிப்பு இருக்கட்டும்”

கண் இமைப்பதற்குள் தாய் மறைந்தாள்.

பத்து நிமிடம் கழித்து நடிகன் வந்தான்.

“என்ன சார் ஏதாவது வழி தெரிஞ்சுதா?”

“கோயிலுக்குப் போ, பூஜை பண்ணுன்னு பரிகாரம் சொன்னா அதுக்கு நான் ஆள் இல்ல. நான் சொல்றத உங்களால செய்ய முடியுமான்னு தெரியல”

“அதச் செஞ்சா அந்த படம் கிடச்சிரும்ல?”

“அதுக்கு உத்தரவாதம் கிடையாது. ஆனா படம் கிடைக்காட்டியும் உங்க மனசு அலை பாயாது. அமைதியா இருக்கும்”

நான் பேசத் தொடங்கினேன்.

“அந்தப் படத்துல சான்ஸ் கிடைச்சா பெரிய நடிகர் ஆயிருவீங்க. கோடிக்கணக்குல சம்பாதிப்பீங்க. புகழ் கிடைக்கும். ஆனா அப்பவும் மனசுல தவிப்பு இருக்கும். இதவிடப் பெரிய வாய்ப்ப நினைச்சி ஏங்குவீங்க. குடும்பத்துல பிரச்னை வரலாம். உங்க உடல்நலம் பாதிக்கலாம்”

“என்ன சார் பயமுறுத்தறீங்க?”

“புகழோட உச்சியில இருக்கற எல்லாருக்கும் இருக்கற பிரச்னையச் சொல்றேன். அப்படி பிரச்னை இல்லாம சந்தோஷமா வாழணும்னா அதுக்கு ஒரு வழி இருக்கு”

“காத்துக்கிட்டிருக்கேன்”

“அன்பு. கண்மூடித்தனமா அன்பு காமிங்க. யாருக்கும் வித்தியாசம் பார்க்காம அன்பை கொட்டுங்க. தனியா தவிக்கறவங்களுக்கு ஆறுதல் கொடுங்க.. பச்சைப் புடவைக்காரி உங்கள அமைதியா வச்சிருப்பா. அந்த நிலையில படவாய்ப்பு கிடைச்சாலும் கிடைக்காட்டியும் வித்தியாசம் இருக்காது”

நடிகன் திடீரென எழுந்து நின்று என் காலைத் தொட்டான். தலையில் கைவைத்து ஆசியளித்தேன்.

பச்சைப்புடவைக்காரி என் காருக்கு அருகில் நின்றிருந்தாள். அவள் கால்களில் விழுந்தேன்.

“பொதுவாகச் சொல்லிட்டோமே என கவலைப்படுறியா? உன் வார்த்தைகள் அவன் மனதைத் தைத்து விட்டன. நாளை மதியம் நடக்கப்போவதைப் பார்”

ஒரு உணவகத்தில் நடிகன் தன் நண்பனுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அருகில் இருந்த மேஜையில் அறுபது வயது பெண் அப்போது தான் வந்தமர்ந்தாள்.

அவள் முகத்தைப் பார்த்ததும் உருகினான் நடிகன். ஓடிப் போய், “நல்லா இருக்கீங்களாம்மா?”

“யாருன்னு தெரியலையே?”

“நலம் விசாரிக்க உங்கள தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்லைம்மா. தனியா உட்காந்திருப்பதால வந்தேன். அங்க நானும் என் பிரண்டும்தான் இருக்கோம்”

அவளின் கையைப் பிடித்துத் தன் இடத்திற்கு அழைத்து வந்தான் நடிகன். திக்குமுக்காடிப் போனாள். அவளுக்கு உணவை ஆர்டர் செய்தான் நடிகன்.

அவளைப் பற்றி விசாரித்தான்.

சென்ற வருடம் அவளது கணவர் இறந்துட்டாராம். மகனும், மகளும் வெளிநாட்டில் உள்ளனர். கணவருடன் அந்த பெண் ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளன்று அந்த உணவகத்துக்குத்தான் வருவார்களாம். அன்று அவர்களின் 40வது திருமண நாளாம்.

“அவர் இல்லாமல் தனியா வர்றது இதுதான் முதல் முறை. எனக்கு மனசு ஆறலப்பா” சொல்லும் போதே அழுகை வந்தது. நடிகன் பேச்சை மாற்றி சிரிக்க வைத்தான். அன்பால் உருக வைத்தான். நடிகன் என தன்னை அறிமுகப்படுத்தினான். சினிமா பார்த்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டன என வெள்ளந்தியாகச் சொன்னாள் அந்தப் பெண்.

அவளின் வீட்டிற்கு செல்லும் போது, ''உங்கம்மா புண்ணியம் பண்ணியிருக்கணும்ப்பா. இல்லாட்டி இப்படி முத்துப்பிள்ளை பிறந்திருக்குமா?”

நடிகன் திடுக்கிட்டான்.

தன் நண்பனை அனுப்பிய பின், தன் தாய் வசிக்கும் கிராமத்திற்கு காரை விடச் சொன்னான். போகும் வழியில் நிறைய பழங்கள், பலகாரங்கள் வாங்கினான்.

வீட்டில் இருந்த தாய், நடிகனான மகனைப் பார்த்ததும் பரவசமானாள். தாயின் காலைத் தொட்டு வணங்கினான்.

“என்னப்பா திடீர்னு? ஏன் இவ்வளவு வாங்கிக்கிட்டு வந்திருக்க?”

“எல்லாம் உங்களுக்குத்தான். உங்களப் பாக்கணும்னு தோணிச்சு. உங்க கையால சாப்பிட்டு எத்தனை வருஷமாச்சு?”

“என்ன வேணும்னு சொல்லு, உடனே பண்ணிடறேன்”

“காலையில செஞ்சது என்னம்மா மிச்சமிருக்கு?”

“வத்தக்குழம்பும் கத்திரிக்காயும்”

“அது போதும்மா. சின்ன வயசுல செய்வீங்களே அது மாதிரி சாதத்த உருட்டிக் கொடுங்கம்மா”

நடிகனின் தாய் உடைந்து போய் அழுதாள். இரண்டு மணி நேரம் இருந்து விட்டு நடிகன் கிளம்பினான்.

அவனுக்காக வீட்டு வாசலில் மனைவி காத்திருந்தாள்.

“அலைபேசியை ஆப் பண்ணிட்டு எங்க போனீங்க?”

“அம்மாவப் பார்க்க”

“புரடியூசர் போன் பண்ணாரு. நீங்கதான் ஹீரோவாம். காண்ட்ராக்ட் அனுப்பி வச்சிருக்காரு”

“அது கிடக்கு. நீ சாப்பிட்டியா? நேத்து தலை வலிக்குதுன்னு சொன்னியே இப்போ எப்படி இருக்கு?”

“என்னாச்சு உங்களுக்கு? இப்படியெல்லாம் பேச மாட்டீங்களே?”

“இதுவரை என்னமோ ஆகியிருந்திச்சி. இன்னிக்குத்தான் எல்லாம் சரியாச்சு”

தன் மனைவியை அணைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தான் நடிகன்.

“ஒரு வேளை சோறு கேட்டவனுக்கு... ஆயிரம் கோடி கிடைத்தது. நடிகன்

கேட்டது பட வாய்ப்பு மட்டும்தான்.

ஆனால் அவனுக்கு ஒரு நல்ல வாழ்வையே அமைத்துத் தந்து விட்டீர்களே”

“நான் என்ன செய்தேன்? எல்லாம் அவன் மனதில் இருந்த அன்பு செய்த அற்புதம்”

“அன்பு என்றால் என்ன? பச்சைப்புடவைக்காரி என்றால் என்ன?”

பெரிதாகச் சிரித்தபடி காற்றோடு கலந்தாள் கனகாம்பிகை.

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com






      Dinamalar
      Follow us