sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அசுர வதம் - 27

/

அசுர வதம் - 27

அசுர வதம் - 27

அசுர வதம் - 27


ADDED : மே 10, 2024 12:00 PM

Google News

ADDED : மே 10, 2024 12:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜலந்தரன் வதம்

இந்திரன் தன்னால் மட்டுமே தேவலோகத்தைக் காப்பாற்ற முடியும் என்று தற்பெருமை கொண்டான். அவனுக்கு பாடம் புகட்ட வேண்டுமென முடிவு செய்தார் சிவன்.

இந்நிலையில் சிவனை தரிசிக்க ஒருநாள் கைலாயத்திற்கு வந்தான் இந்திரன். அப்போது சிவனே வாயிற்காவலனாக மாறி நின்றார். அதிகார தோரணையில் பேசினான் இந்திரன். அதற்கு சிவன் பதிலளிக்கவில்லை. கோபமடைந்த இந்திரன், “வாயிற்காவலனுக்கு இவ்வளவு ஆணவமா?” என வச்சிராயுதத்தால் தாக்கினான். ஆனால் அது நொறுங்கியது. ஆயுதம் பயனற்றுப் போனதைக் கண்ட இந்திரன் கலங்கினான்.

வாயிற்காவலன் வடிவில் இருந்த சிவன் கோபத்தால் ருத்ர வடிவமெடுத்தார். இந்நிலையில் அவரது நெற்றியில் அரும்பிய வியர்வைத்துளிகள் பூலோகத்தில் கடலில் விழுந்தன. தன் முன் நிற்பவர் கடவுள் என்பதை அறிந்த இந்திரன் சரணடைய சிவன் மன்னித்தார். இதற்கிடையில் கடலில் விழுந்த வியர்வையில் இருந்து வலிமை மிக்க அசுரக் குழந்தை உருவானது.

அதை வளர்க்க விரும்பிய கடலரசன் சத்தியலோகத்திற்குச் சென்று பிரம்மாவைச் சந்தித்தான்.

குழந்தைக்கு பெயர் வைக்குமாறும் வேண்டினான்.

குழந்தையைக் கையில் வாங்கிய பிரம்மா பெயர் பற்றி யோசித்த போது குழந்தை அவரது தாடியை இழுத்தது.

அசுர பலம் கொண்ட குழந்தையாக இருந்ததால் பிரம்மாவால் வலியைத் தாங்க முடியவில்லை. அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து குழந்தை மீது விழுந்தது. கண்ணீர் வர வைத்ததால் 'ஜலந்தரன்' (தண்ணீரால் ஆனவன்) எனப் பெயரிட்டார்.

அக்குழந்தை வளர்ந்து பெரியவனான பிறகு பிரம்மாவை நோக்கி தவமிருந்து வரம் பெற்றான். அதன் மூலம் அசுரர்களின் தலைவன் ஆனான். ஜலந்தரபுரம் என்ற நகரத்தை உருவாக்கி, அசுரர்களின் துணையுடன் உலகத்தையே தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான்.

காலநேமி என்பவரின் மகளான பிருந்தையை மணம் புரிந்தான். திருமாலின் பக்தையான பிருந்தை, தன் கணவரான ஜலந்திரனை கடவுளாக கருதி பணிவிடைகளையும் செய்து வந்தாள். ஜலந்திரனும் மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.

அசுரர்களில் சிலர் ஜலந்தரனிடம், ''மன்னா... தாங்கள் பிரம்மாவிடம் வரம் பெற்று சாகாவரம் பெற வேண்டும் தேவலோகத்தையும் தங்கள் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வர வேண்டும்'' என துாண்டினர். அவனும் அதை ஏற்று பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான்.

மனமிரங்கிய பிரம்மனும் நேரில் தோன்றினான். “சாகாவரத்தை என்னால் தர இயலாது. இருப்பினும் உன்னை உயிராக மதிக்கும் உன் மனைவியின் கற்பு உன் ஆயுளை நீட்டிக்கச் செய்யும். உன் மனைவியின் கற்புத்தன்மை மாசுபட்டால் நீ கொல்லப்படுவாய்” என வரம் அளித்தார்.

அன்பு மிக்க பிருந்தையின் கற்புத்தன்மை மாசுபட வாய்ப்பே இல்லை என எண்ணி அசுரனும் மகிழ்ந்தான். தனக்கு அழிவே இல்லை என ஆணவம் கொண்டான். தேவலோகம் சென்று இந்திரனுடன் சண்டையிட்டு தேவலோகத்தைக் கைப்பற்றினான்.

அதன் பின் வைகுண்டம் நோக்கிச் சென்றான். இதை அறிந்த திருமால் மகாலட்சுமியுடன் அங்கிருந்து வெளியேறினார். இதன் பிறகு கைலாயத்திற்குச் சென்றான். பிரம்மன் அளித்த வரத்தால் அசுரனைக் கொல்ல முடியாமல் சிவன் தொடர்ந்து போரிட நேர்ந்தது. இதையறிந்த பிரம்மா, வரத்தால் ஏற்பட்ட விபரீதத்தை நினைத்து வருந்தினார். போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்பி திருமாலிடம் உதவியை நாடினார்.

அசுரன் ஜலந்தரன் வடிவில் பிருந்தையைக் காணச் சென்றார் திருமால். அவரைத் தன் கணவர் என எண்ணிய அவளும் பணிவிடை செய்தாள். கணவர் அல்லாத ஒருவரை கணவராக கருதி பணிவிடை செய்ததால் அவளது கற்புத்தன்மை மாசடைந்தது.

அந்த நேரத்தில் ஜலந்தரனின் தலையைத் துண்டித்தார் சிவன். அந்தத் தலை பிருந்தையின் முன்பு வந்து விழுந்தது. அப்போது ஜலந்திரன் வடிவில் இருந்த திருமால் சுயரூபத்தைக் காட்ட பிருந்தை கோபமுடன், “என் கணவரின் வடிவில் வந்து ஏமாற்றிய நீ கல்லாக கடவது'' என சபித்தாள்.

அதைக் கேட்ட திருமால், “உன் கணவன் பிரம்மனிடம் பெற்ற வரத்தின்படி, அவனை அழிக்க உன்னிடம் நான் தவறாக நடக்க வேண்டியதாகி விட்டது. என் மீது தீவிர பக்தி கொண்ட உன் கற்புக்குக் களங்கம் ஏற்படுத்தும் முறையில் நடந்து கொண்ட எனக்கு நீ கொடுத்த தண்டனை சரியானதுதான். உன் சாபத்தின்படி, நான் கல்லாக மாற்றம் பெறுவேன்” என்றார்.

திருமால் கல்லாகப் போகிறாரே என வருந்திய பிருந்தை, 'கோபத்தால் அறிவை இழந்து விட்ட என்னை மன்னியுங்கள்' என வேண்டினாள்.

“பிருந்தா... வருத்தாதே, உன் சாபத்தை ஏற்கிறேன். அதன்படி நான் கண்டகி நதியில் சாளக்கிராமக் கல்லாகத் தோன்றுவேன். என்னால் ஏற்பட்ட உன் களங்கம் விரைவில் தீரும். அடுத்த பிறவியில் துளசியாகப் பிறக்கப் போகும் உன்னை நானே மணம் புரிவேன். அதன்பின் துளசியை உலகமே கொண்டாடும் நிலை ஏற்படும். துளசியை வழிபட்டால் நற்பலன் அனைத்தும் கிடைக்கும்” என்றார்.

அதனைக் கேட்ட பிருந்தை மகிழ்ந்தாள். திருமால் அங்கிருந்து மறைந்தார். ஜலந்தரன் அழிந்ததை அறிந்த தேவர்கள் மகிழ்ந்தனர்.

சாளக்கிராமம்

நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் சாளக்கிராமக்கல் கிடைக்கின்றன. அதில் திருமாலின் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை வடிவங்களைக் காணலாம். கல்லின் வடிவம், நிற அடிப்படையில் பல பெயர்கள் இதற்கு உண்டு.

சங்கு, சக்கரம், கதை, தாமரை அமைப்பில் உள்ள கற்கள் கேசவம் எனப்படும். இது தவிர மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், ஸ்ரீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்ஷனம், பிரத்யும்னம், நரசிம்மம், ஜனார்த்தனம், ஹரி, கிருஷ்ணம் என 68 வகை கற்கள் உள்ளன.

துளசி வழிபாடு

கார்த்திகை பவுர்ணமின்று துளசி அவதரித்தாள். இந்நாளில் துளசியை வழிபட்டால் நன்மை உண்டாகும். செவ்வாய், வெள்ளி இதற்கு ஏற்ற நாட்கள்.

கார்த்திகை துவாதசி அன்று திருமால், துளசியைத் திருமணம் செய்ததால் இந்நாள் 'பிருந்தாவனத் துளசி' அல்லது 'துளசித் திருமணம்' எனப்படும். அன்று சுமங்கலிகள் குளித்து துளசி மாடத்தை சுற்றி வருவதோடு மாடத்தை மெழுகி, கோலமிட்டுக் காவி பூசி வழிபடுவர். துளசியுடன், நெல்லி மரக்குச்சி (மகாவிஷ்ணு வடிவம்) அல்லது சாளக்கிராமக் கல் சேர்த்து வைத்து வழிபடுவது சிறப்பு. துளசியை வழிபடும் இடத்தில் செல்வ வளம் சேரும்.

-தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925






      Dinamalar
      Follow us