ADDED : மே 31, 2024 10:24 AM

உடம்பும் உயிரும்
'உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை கொஞ்சம் தெளிவா சொல்லுங்க தாத்தா' எனக் கேட்டான் கந்தன்.
'இப்போ உன் வயசு என்ன?' எனக் கேட்டார் தாத்தா.
'ஆறு'
'சரி... இப்ப நீ எவ்வளவு உயரம் இருக்க?'
'மூணு அடி தாத்தா. வகுப்பிலேயே நான் தான் உயரமானவன்'
'அப்ப நீ இன்னும் வளருவியா...
'ஆமா தாத்தா... நான் பெரியவன் ஆகும் போது ஆறடி வருவேன்னு எங்க அப்பா சொன்னாரு' 'சரி... அப்போ உனக்கு 40 வயசு ஆகும் போது பத்தடி வளர்ந்துடுவியா'
'இல்லை தாத்தா... 21 வயசு வரை தான் வளருவோம் என டீச்சர் சொன்னாங்களே. அப்போ அதுவரை எவ்வளவு உயரம் வளருகிறேனோ அதுதான் என்னோட உயரம். 40 வயசில 10 அடி எல்லாம் வளர முடியாது தாத்தா'
'இப்போ உனக்கு புரிந்திருக்கும் உன்னுடைய உடல் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட வயது வரை தான்... அப்போ 40 வயது வரை உடம்பு ஆரோக்கியமா இருக்கும். எந்தவித நோயும் நெருங்காது. 40 வயதுக்கு மேல கொஞ்சம் கொஞ்சமாக முடி நரைக்கும். தோல் சுருங்கும். இல்லையா? இத நாம் இளமை, முதுமை என இரண்டாகச் சொல்கிறோம்... அதே மாதிரி உயிர் இந்த உடம்பை விட்டு வேற ஒரு உடம்பை எடுக்குது.
அதைத் தான் கிருஷ்ணரும் திருவள்ளுவரும் இரண்டாவது அத்தியாயம் 13ம் ஸ்லோகம், 340ம் திருக்குறளில் சொல்கின்றனர்.
தே ³ஹிநோ ஸ்மிந்யதா ² தே ³ஹே
கௌமாரம் யௌவநம் ஜரா|
ததா ² தே ³ஹாந்தரப்ராப்திர்தீ
ரஸ்தத்ர ந முஹ்யதி ||2-13||
இந்த உடலில் எப்படி குழந்தைப் பருவம், இளமை, மூப்பு தோன்றுகிறதோ அதைப் போல ஆத்மாவுக்கு மற்றொரு சரீரப் பிறப்பும்(உடம்பும்) தோன்றுகிறது. தீரனாக இருப்பவன் அதைக் கண்டு கலங்க மாட்டான்.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு (குறள் 340)
நோய்களுக்கு இடமான உடம்பில் குடியிருக்கும் உயிருக்கு நிலையாக குடியிருக்க வீடு இதுவரை அமையவில்லையோ ?
உங்க தாத்தாவோட உயிர் வேறொரு உடம்புக்குள் இருக்கும். ஆனால் எந்த உடம்புக்கு அந்த உயிர் போயிருக்குன்னு நம்மால் அறிய முடியாது. இப்போ தெளிவா புரியுதான்னு தாத்தா கேட்க கந்தனும் 'புரிஞ்சது தாத்தா' என பதிலளித்தான்.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554