ADDED : ஜூன் 27, 2024 01:01 PM

விளங்காத கை
என் முன்னால் கண்ணீர் சிந்தியபடி அமர்ந்திருந்த ரிஷியைப் பார்த்தேன். அவனுக்கு இருபது வயதிருக்கும்.
“பச்சைப்புடவைக்காரி கொடுமைக்காரி சார். எங்கம்மாவுக்குத் பக்கவாதம் வந்து வலது கை விளங்காமப் போயிருச்சி”
“அடப்பாவமே! டாக்டர் என்ன சொல்றார்”
“குணமடையறது கஷ்டம். எங்கம்மாவப் பத்தி உங்களுக்குத் தெரியாது சார். தினமும் பூஜை செய்வாங்க. எவ்வளவு தான தர்மம் செஞ்சாங்க தெரியுமா? எனக்குத் தெரிஞ்சி நுாறு குழந்தைங்களை படிக்க வச்சிருப்பாங்க. எங்கம்மாவுக்கு ஏன் இப்படி ஆகணும்?”
“உங்கப்பா...''
ரிஷி சொன்ன பெயரைக் கேட்டு அதிர்ந்து விட்டேன். அவனது தந்தை புகழ்பெற்ற திரைப்பட்ட இயக்குனர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் காலமானார். அப்படியென்றால் இவனுடைய அம்மா பெரிய தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளராச்சே? வருடக்கணக்கில் ஓடும் தொடர்களின் தயாரிப்பாளர் ஆயிற்றே! பாவம், அவளுக்கா அந்த கதி? அவளுக்காக பிரார்த்தித்தேன். அதற்குமேல் நான் என்ன செய்ய முடியும்? பச்சைப்புடவைக்காரி மனது வைத்தால்தான் உண்டு.
“ஒரே ஒரு தரம் அம்மாவ பாருங்க சார். உங்ககிட்ட புலம்பினா நிம்மதி கிடைக்கும்னு நம்பறாங்க... ப்ளீஸ். நானே என் கார்ல கூட்டிக்கிட்டுப் போறேன்”
கோரிக்கையை ஏற்றேன்.
சென்னையில் இருந்த பிரம்மாண்டமான வீட்டிற்குள் நுழைந்தோம். தாயின் அறைக்கு அழைத்துச் சென்றான் ரிஷி.
அதைக் கொடுமை என்றே சொல்ல வேண்டும். அந்த ஐம்பது வயது பெண்ணின் முன் தட்டில் உணவு இருந்தது. அதை வலது கையால் எடுக்க முயற்சித்தபடி இருந்தாள். பிசியோதெரப்பி செய்யும் ஒரு பெண் உற்சாகப்படுத்தியபடி இருந்தாள்.
“அப்படித்தாம்மா. கையை இன்னும் கீழே இறக்குங்க. இன்னும் கொஞ்சம்''
கை நிறைய உணவை எடுத்துவிட்டாள். தடுமாறி வாயருகே கொண்டுபோனாள். அடுத்த நொடி உணவை வாயில் இடுவாள் என எதிர்பார்த்தேன். வாய்க்கு அருகே போனவுடன் கை ஆடியதால் உணவு தரையில் விழுந்தது. ஓவென்று அழுதாள் அந்தப் பெண்.
“சிஸ்டர் இன்னிக்கு போதும். நாளைக்கு வாங்க. நர்சை சாப்பாடு ஊட்டச் சொல்றேன்”ரிஷி சொன்னதற்கு அந்தப் பெண் கீழ்ப்படிந்தாள். ரிஷியின் தாய் என்னை யார் என புரிந்து கொண்டாள். பச்சைப்புடவைக்காரியின் படத்தைப் பார்த்து அழுதாள். நான் அருகில் அமர்ந்தபடி அவளின் கையைப் பிடித்தபடி, “சாப்பிட முடியல சார். வாய்க்குப் பக்கத்துல கொண்டு போகும் போது யாரோ தட்டிவிடற மாதிரி இருக்கு. ஈ எறும்புக்குக்கூட துரோகம் நினைக்காத என்ன கடவுள் ஏன் படுத்தணும்? நான் செய்யாத பூஜையா. பண்ணாத தர்மமா?”
பச்சைப்புடவைக்காரிக்கு மட்டுமே பதில் தெரிந்த கேள்விகள். நான் என்ன பேசினாலும் இவள் காயப்பட்டுவிடுவாள். சிரித்து வைத்தேன். அடுத்த கால்மணி நேரத்துக்குத் தான் செய்த நல்ல காரியம் பற்றியும் தான் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றியும் புலம்பினாள். ரிஷியே நெளிய ஆரம்பித்தான். இதில் இருந்து எப்படி கழன்று கொள்வது என யோசிக்க ஆரம்பித்தேன்.
அறையின் வெளியில் சத்தம் கேட்டது. ஒரு பணிப்பெண் ஓடி வந்து, “அம்மாவப் பாக்க பெரிய டாக்டர் வாராங்க”
ரிஷி என் கையைப் பிடித்தபடி, “பத்து நிமிஷம் வெளியே காத்திருங்க சார். அப்புறம் நானே ஓட்டல்ல கொண்டுபோய் விடறேன். நாளைக்கு பிளைட்டுல கிளம்பிடலாம்”
நான் வெளியே வந்தேன். போர்ட்டிகோவில் நர்சைப் போல் நின்ற ஒரு பெண் சிரித்தாள். “ஒரேயடியாகப் புலம்புகிறாளோ?”
“தாயே நீங்களா?”
“நானேதான். நீ மீண்டும் உள்ளே போனதும் அவள் செய்த பாவம் நன்றாகப் புரியும். மனதில் தோன்றியதை சொல். அதற்குப் பின் அவர்கள் பாடு!”
“நீங்களே இப்படி விட்டேத்தியாக...''
“என்ன செய்ய... செய்த பாவம் அப்படி”
தாய் மறைந்து விட்டாள். மருத்துவர் வெளியேறியவுடன் அறைக்குள் நுழைந்தேன்.அந்தப் பெண்ணின் கையைத் தொட்ட மாத்திரத்தில் எல்லாம் புரிந்தது.
“நீங்க செஞ்ச பாவத்தச் சொல்லப்போறேன். மூணு வருஷத்துக்கு முன்பு நடந்தது நினைவு இருக்கா? ஒரு தொலைக்காட்சித் தொடர தயாரிச்சீங்க. அது நல்லாப் போச்சு. கோடிக்கணக்குல சம்பாதிச்சீங்க. அந்தத் தொடரோட வேற்று மொழி உரிமைகளை ரெண்டு கோடிக்கு விற்கப் பேரம் பேசினீங்க. உங்க தொழில் வழக்கபடி அதுல பாதி தொகை எழுத்தாளருக்குப் போய் சேரணும். ஆனா நீங்க அவர்கிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டீங்க. உங்ககிட்ட ரெண்டு கோடி ரூபாய் கொடுத்து உரிமைகள வாங்கினவங்க டெல்லி பேப்பர்ல விளம்பரம் கொடுத்தாங்க. அதப் பாத்த அந்த எழுத்தாளரோட ரசிகர் அவருக்குத் தகவல் சொல்லிட்டாரு. எழுத்தாளர் உங்க மீது கேஸ் போடுவேனு மிரட்டினாரு. நீங்க அவர நேர்ல பாத்து பணக்கஷ்டத்துல இருக்கேன்.
சாப்பாட்டுக்கே கஷ்டம். புருஷன் இறந்த பின் கடனாயிருச்சின்னு சொல்லி அவர்கிட்ட கையெழுத்து வாங்கினீங்க. அந்த ரெண்டு கோடில எழுத்தாளருக்கு ரெண்டு ரூபா கூட தராம அமுக்கிட்டீங்க. சாப்பிடவே கஷ்டப்படறேன்னு சொன்னதை உண்மையாக்கிட்டா பச்சைப்புடவைக்காரி. நம்பிக்கைத் துரோகம் செய்தா அவ மன்னிக்க மாட்டா. அந்த பாவம் பக்கவாதமா வந்திருக்கு”
அந்தப் பெண் அழுதாள். ரிஷி நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
“பணத்தாசையில பண்ணிட்டேன். அதுக்காக இப்படி தண்டிக்கலாமா?”
அந்தப் பெண் கத்தினாள்.
“குழந்தை தன்னை அடிச்சாலும் அம்மா சிரிச்சிக்கிட்டே பொறுத்துக்குவா. ஆனா ஒரு குழந்தை தன்னோட இன்னொரு குழந்தைய அடிச்சா கொதிச்சி எழுந்திருவா. இனியும் பச்சைப்புடவைக்காரிய தப்பாபேசினீங்க...”
அவள் அடங்கினாள். மவுனம் நிலவியது.
“நான் என்னதான் செய்யறது சொல்லுங்க?”
“ரிஷி... அந்த எழுத்தாளரை தேடிக் கண்டுபிடிச்சி அவருக்குச் சேரவேண்டிய ஒரு கோடி ரூபாய வட்டியும் முதலுமா கொடுங்க”
“அப்படி கொடுத்தா என் கை சரியாகுமா?”
“மூணு வருஷத்துக்கு முன்னால அந்த எழுத்தாளருக்கு பணம் கெடைச்சிருந்தா புற்று நோயால தவிச்ச தன் மனைவிக்கு வைத்தியம் பாத்திருப்பாரு. இப்போ அவங்க இருக்காங்களோ இல்லையோ, தெரியாது. கை திரும்பி வர்றதுக்கு உத்தரவாதம் இல்ல. ஆனா இனிமே உங்க வாழ்க்கையில பெரிய கஷ்டம் எதுவும் இருக்காது. உங்கம்மாவோட அடுத்த பிறப்பு நல்லா இருக்கும்”
தாயும் மகனும் தனியாகப் பேசிக் கொள்ளட்டும் என வெளியே வந்தேன். பச்சைப்புடவைக்காரி காத்திருந்தாள்.
“ருத்ர தாண்டவமாடி விட்டாய். அவளை நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும் எனச் சொல்”
“அவள் செய்த பாவத்தைப் பற்றி அறிந்ததும் மனதில் வெறுப்பு வந்து விட்டது. தீமையும் ஒரு நோய்தான் என நீங்கள் சொல்லிக்கொடுத்த பாடம் மறந்தது. அதை மறக்காமல் இருக்கும் வரம் வேண்டும் தாயே”
பெரிதாகச் சிரித்தபடி காற்றோடு கலந்தாள் காளீஸ்வரி.
-தொடரும்வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com