sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அன்றாட வாழ்வில் ஆத்திசூடி - 33

/

அன்றாட வாழ்வில் ஆத்திசூடி - 33

அன்றாட வாழ்வில் ஆத்திசூடி - 33

அன்றாட வாழ்வில் ஆத்திசூடி - 33


ADDED : பிப் 20, 2023 11:07 AM

Google News

ADDED : பிப் 20, 2023 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேரிடம் அறிந்து சேர்

அவனோட சங்காத்தமே (நட்பே) நமக்கு வேண்டாமப்பா... அவனோட சேந்தா போகப் போற... பாத்துப்போப்பா... அவன் ஒரு மாதிரி... அவனைச் சுத்தி இருக்குற ஆளப்பாத்தாலே தெரியலையா... அவனைப் போயி நல்லவங்கிற... இதெல்லாம் சமுதாயத்தில் தினமும் கேட்கும் செய்திகள். உலகத்துல எல்லாருமே நல்லவனா இருக்கத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால் சூழ்நிலை, நட்பு... இதெல்லாம் ஒருவனை மாற்றி விடுகிறது.

பையன் காலேஜ் போயிட்டான். அம்மா சொல்றத கேட்பதே இல்லை. ஒருநாள் அம்மா கூப்பிட்டு அருகில் உட்கார வைத்தாள். எதைச் சொன்னாலும் கேட்காத வயது. எல்லாத்துக்கும் கோபப்படுற வயது. என்ன செய்வது? அம்மா பொறுமையோடு தலையைக் கோதினாள். 'இப்ப பசங்க முடி வெட்டுறதப் பாத்தாலே ஒரு மாதிரியா இருக்குப்பா...' சொல்ல வார்த்தை தொண்டைக்குழி வரைக்கும் வந்தது. அதை சொன்னா கோபப்படுவான்னு அமைதியானாள். ''தங்கம்... உன்னோட சேர்ற பிள்ளைகளைப் பாத்தா பயமா இருக்குடா?'' என்றாள் எச்சிலை விழுங்கியபடி. ''ஏன் அவனுகளுக்கென்ன''

''இல்ல தங்கம். இது தான் வயசு. நல்லவங்களோட சேர்ந்தா நல்லா வரலாம்ன்னு சொன்னேன். ஏன் கெட்டவங்க மத்தியிலே நாம நல்லவனா இருக்க முடியாதா?'' எனக் கத்தினான் மகன்.

அம்மா பொறுமையோடு ஒரு சட்டி பாலை எடுத்து, ''இதில இந்தத் தண்ணியை ஊத்து'' என ஒரு டம்ளர் தண்ணீரைக் கொடுத்தாள். வேண்டா வெறுப்பாக ஊற்றினான். 'இப்பப் பாரு. பாலுல ஏதாவது மாற்றம் தெரியுதா? இல்லையே. இப்ப தண்ணி இருக்குற சட்டிலே கொஞ்சம் பாலை ஊத்து'' என்றாள். ''என்னம்மா நான் என்ன சின்னப் புள்ளயா? என்ன வச்சு விளையாடுற'' என முறைத்தான்.

''என் தங்கம். தண்ணி இருக்குற சட்டிலே பாலை ஊத்துடா'' என்றாள். ஊத்தினான். ''இப்பச் சொல்லு தண்ணி பாலா மாறிருக்கா?'' எனக் கேட்டாள். ''இல்ல அதுக்கென்ன இப்போ?'' என்றான் ஏளனமாக. ''இல்ல கண்ணு நல்லவங்களோட சேர்ந்தா நாமும் நல்லவங்களா மாறலாம். மோசமானவங்களோட சேர்ந்தா தண்ணில கலந்த பால் மாதிரி காணாமப் போயிடுவோம்'' என்றாள். அம்மாவை முதன் முறையாகச் சற்று மரியாதையாகப் பார்த்தான். கண்கள் கசியத் தொடங்கின. யோசிக்க ஆரம்பித்தான். அம்மாவிற்கு நம்பிக்கை பிறந்தது. ஓடிப் போய் குல தெய்வத்திற்கு காசு முடிந்து வைத்தாள். இனி அவன் நிச்சயம் திருந்தி விடுவான்.

ஆம், நல்லோர் இணக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். எந்தச் சூழலிலும் நல்லவர்களோடு நம்மைச் சேர்த்து வைக்க பிரார்த்தனை செய்வோம்.

மகாபாரதத்தில் போருக்கான அறிவிப்பு வெளியாகியது. பாண்டவர்களும், கவுரவர்களும் தங்களுக்கான படைகளில் பலம் சேர்க்க அண்டை நாட்டு மன்னர்களைச் சந்தித்தனர். உதவி கேட்டு பகவான் கிருஷ்ணரைக் காண அர்ச்சுனன் வந்தான். அப்போது அவர் துாங்கிக் கொண்டிருந்தார். உரிமையுடன் அவரது அறைக்குள் நுழைந்து கிருஷ்ணர் விழிக்கட்டும் என எண்ணி காலடியில் அமர்ந்தான். சற்று நேரத்தில் துரியோதனன் அங்கு வந்தான். காவலாளிகளைப் புறம் தள்ளி கிருஷ்ணர் உறங்கும் அறைக்கு வந்து தலையின் அருகில் அமர்ந்தான். அர்ச்சுனன் இருப்பதைக் கண்டதும் கோபம் வந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.

கிருஷ்ணர் கண் விழித்தார். பாதத்தின் அருகில் அமர்ந்த அர்ச்சுனனை பார்த்ததும், ''வா... அர்ச்சுனா? எப்போது வந்தாய்?'' எனக் கேட்டார். உடனே எழுந்து வணங்கினான். ''இப்போது தான்'' என்றான். உடனே துரியோதனன் சற்று செருமினான். அதைக் கேட்டு பகவான், ''அடடா... துரியோதனா! நீ எப்போது வந்தாய்?'' எனக் கேட்டார். அவனும் சற்று காட்டமாக, ''அப்போதே வந்து விட்டேன். என்ன இருந்தாலும் அர்ச்சுனன் மீது தான் உங்களுக்கு பிரியம்'' என்றான். பகவான் சிரித்தபடியே, ''துரியோதனா!

துாங்குபவன் கண் விழித்தால் கால் பக்கம் பார்ப்பது தானே இயல்பு. அங்கே இருந்த அர்ச்சுனன் முதலில் கண்ணில்பட்டான். நீ தலைக்கு அருகில் இருந்ததால் தெரியவில்லை. எனக்கு எல்லோருமே ஒன்று தான்'' என்றார்.

என்ன விஷயமாக இருவரும் வந்திருக்கிறீர்கள்?'' என்றார் குறும்பாக. ''உங்கள் ஆதரவைப் பெற்று போர் நடத்துவதற்காக'' என்றான் துரியோதனன். ''ஆயுதமில்லாமல் நான் மட்டும் ஒருபுறம், என்னிடம் இருக்கும் படைபலம் மற்றொரு புறம். யாருக்கு எது வேண்டுமோ வைத்துக் கொள்ளுங்கள்'' என்றார் கிருஷ்ணர். உடனே துரியோதனன், '' நான் தான் மூத்தவன். நான் தான் முதலில் கேட்பேன்'' என்றான்.

பகவானும் சம்மதித்தார். ''உங்களின் படை முழுவதும் எங்களுக்கு வேண்டும்'' என்றான். பகவான் அர்ஜுனனைப் பார்த்தார்.

அவனோ, ''நான் பெற்ற பெரும்பேறு அண்ணா... நீங்கள் மட்டும் போதும்'' என்றான். இருவர் சொன்னதையும் கிருஷ்ணர் ஏற்றார். படைகள் இருப்பினும் தர்மமும், பகவானின் அருளும் இல்லாததால் துரியோதனனால் ஜெயிக்க முடியவில்லை. பாண்டவரோ தர்மமும், தர்மத்தின்

வடிவமான கிருஷ்ணரும் கூடவே இருந்ததால் வெற்றி பெற்றனர்.

எல்லா வகையிலும் சிறந்த வீரனான கர்ணனும் துரியோதனன் பக்கம் சென்றதால் இறுதியில் அழிய வேண்டியதாயிற்று.

இன்றும் நம் கண்முன்னே பலரைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

நல்லவர்கள் கஷ்டப்படுவது போலத் தோன்றினாலும், அவர்களுக்குத் தான் அமைதி, ஆனந்தம் கிடைக்கும்.

ராமாயணத்தில் ராவணனுக்கு அறிவுரைகளை வீடணன் கூறினான். இறுதியில் அறிவுரைகளை ஏற்காமல் வீடணனைக் கொல்லவும் உத்தரவிட்டான். வீடணன் அங்கிருந்து கிளம்பி தர்மத்தின் நாயகனான ஸ்ரீராமர் இருக்குமிடம் தேடி வந்தான். அப்போது அனுமன், '' பகவானே இலங்கையிலேயே வீடணன் அரண்மனை மட்டும் துாய உணர்வுகளைக் கொண்டு இருந்தது. நகரெங்கும் மாமிச உணவுகள் தெரிய, இவர் மாளிகையில் மட்டுமே சைவ உணவுகள் மட்டுமே இருந்தன. இவரது மகளான திரிசடை என்பவர் தாய் சீதாதேவிக்கு ஆறுதலாக இருந்து வருகிறார். எனவே நம் எதிரியின் தம்பி என இவரைக் கருதாமல் தர்மத்தை தேடி வந்தவராகக் கருதி ஏற்கலாம்'' என்றார். பகவானும் ஏற்றுக் கொண்டார். தர்மத்தின் பக்கம், நல்லவர்கள் பக்கம் சேர்ந்ததால் வீடணன் வாழ்ந்தான். என்பதுடன் நித்ய சிரஞ்சீவியாகவும் ஆகிவிட்டான்.

காந்தத்தைச் சார்ந்த இரும்பு காந்தமயம் ஆவது போல் நல்லவரைச் சார்ந்தவர்களும் நற்குணங்கள் பெற்று சிறந்தோங்கி வாழ்கிறார்கள் என்கிறார் ராமகிருஷ்ணர். இதையே 'சார்ந்ததன் வண்ணமாதல்' என்கிறது சைவ சித்தாந்தம். மழை அது விழும் நிலத்தின் இயல்பிற்கு ஏற்ப நிறம் மாறுவது போல மனிதனும் சேரும் இனத்திற்கு ஏற்ப தகுதி பெறுகிறான் என்கிறது குறள்.

அர்த்தமுள்ள இந்து மதம் எழுதி உலகளவில் அனைவரையும் வியக்க வைத்து, படிக்க வைத்த கவியரசர் கண்ணதாசன் தான் சிற்றினம் சேர்ந்த நிகழ்வுகளைப் பெரிதாக, ஒன்றையும் மறைக்காமல் கூறுகிறார். காஞ்சி மஹாபெரியவர் அருளியது போன்று வானத்துல சூரியனைக் கொஞ்ச நேரம் மேகம் மறைத்திருக்கும். அது போலவே அவனது நாத்திகவாசம். சில மணிகளில் மறைக்கப்பட்ட மேகம் நீங்கி சூரியன் பிரகாசமாகத் தெரிவது போல அவனும் பிரகாசிப்பான் என்னும் அருள்வாக்கு உலகம் உணர்ந்தது அல்லவா!

காஞ்சி மஹாபெரியவரின் அருட்பார்வையும், கிருபானந்த வாரியாரின் வழிகாட்டுதலுடன் கூடிய ஆசிகளும் பாரதிக்குப் பின்னர் கண்ணதாசன் என்ற பெருமையை அல்லவா தந்திருக்கிறது.

உலகம் தோன்றிய நாள் முதலாக நல்லதும் இருக்கிறது. அல்லதும் இருக்கிறது. நாம் நலம் பெற வேண்டுமானால் என்றும் நன்மையின் பக்கமே இருத்தல் வேண்டும். அதுவே நமக்கு ஆன்மிகம் காட்டுகின்ற வழி. பெரியோர்கள் காட்டுகின்ற வாழ்வியல் நெறி. நல்லோர் இனத்திருப்போம். நலம் பெறுவோம்.

--தொடரும்

இலக்கியமேகம் ஸ்ரீநிவாசன்

ilakkiamegamns@gmail.com






      Dinamalar
      Follow us