ADDED : மார் 09, 2023 11:34 AM

வல்லமை பேசேல்
என் பேரைச் சொல்லியுமா கேட்கல.எடு போனை... இந்த ஏரியாவுலயே இருக்க முடியாதபடி... ஊருக்குப் புதுசுன்னு நினைக்கிறேன். தலைவர் பேரைச் சொல்ற... ஏண்டா புதுப்பயலா... சொல்லிக்குடுத்து கூட்டி வர்றதில்ல... இதெல்லாம் இப்போது வலம் வரும் வார்த்தைகள். ஒரு வி.ஐ.பி. என்றால் கூட நாலு பேர்... அவரைப் பற்றி அறிமுகம் செய்ய.அவரைப் பேச விடாமல் பெருமைகளைச் சொல்ல... யாரும் சொல்ல ஆளில்லை எனில் அவரே பேசுவார் வாயால் அல்ல... கையால்... இதெல்லாம் தான் தன் வல்லமையைத் தானே பேசுதல் என்பது. உன் திறமையை (பதவியை) நீயே புகழ்ந்து பேசாதே என அவ்வையார் குறிப்பிடுகிறார்.
வள்ளுவரும் தன்னையே புகழாதே என்று கூறுகிறார். உன்னைப் புகழ்ந்தால் விஷம் போல ஒதுக்கு. யாராவது உன்னைக் குறை கூறினால் அமிர்தம் போலக் கருது என மனுநீதி பகர்கிறது.
அந்தக் காலத்தில் குற்றம் புரிந்தவர்களை அந்தமான் சிறையில் அடைப்பார்கள். புழுத்த கஞ்சியை சாப்பிட்டுக் கொண்டு உயிர் உள்ளவரை கிடக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தில் பல பேர் அவ்வாறு தான் துன்புறுத்தப்பட்டார்கள்.
அந்தக் காலச் சூழலில் உண்மையான குற்றவாளி ஒருவன் கல்கத்தா நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான். அவனது குற்றத்திற்காக அந்தமான் சிறைக்கு அனுப்ப வேண்டும் என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். அவனோ வத்தலும், தொத்தலுமாக இருந்தான். நீதிபதிக்கு பாவமாக இருந்தது. ஏனப்பா! உன் மீது சாட்டப்பட்ட குற்றம் உண்மையா? உன்னைப் பார்த்தால் புல் தடுக்கி பயில்வான் போலல்லவா இருக்கிறாய் என்றார்.
அவன் உடனே கொதித்தெழுந்து குற்றவாளிக் கூட்டில் இருந்து தாவிக் குதித்து நீதிபதி முன்னால் போய் நின்று தன் வீர தீரங்களை கூறி ஆர்ப்பாட்டம் செய்தான். நீதிபதி உடனே சொன்னார் யார் அங்கே! இவனை மீண்டும் கூண்டுக்குள் ஏற்றுங்கள். இவன் எதையும் செய்வான். இரட்டை ஆயுள் விதிக்கிறேன். அந்தமானுக்கு அனுப்புங்கள் என்றார்.தற்பெருமையால் வந்த ஆபத்து இது.
ராமாயணத்தில் ராமன் முன்பு ராவணன் எல்லா ஆயுதங்களை இழந்து தனியனாக நின்றான். ராமன் நினைத்திருந்தால் ஒரு நொடியில் அவனை அழித்திருக்க முடியும். ஆனால் ராமனோ நிராயுத பாணியாக நிற்கும் எதிரியை வீழ்த்த விரும்பவில்லை. ராவணனுக்கு ஒரு வாய்ப்பளித்தான். எனவே ராவணன் தன் தாத்தா மாலியவானிடம் சென்று தன் எதிரியான ராமனின் போர்த்திறத்தைப் புகழ்ந்து பேசினான். பெருமை என்பது உற்றார் உறவினர் அல்ல எதிரியால் பேசப்படும் போது மேலும் சிறப்புடையதாகிறது.
அனுமன் இலங்கைக்குச் சென்று சீதையைக் கண்டு ஆறுதல் சொல்லித் திரும்பும் போது அசோக வனத்தை அழித்து, ராவணன் புதல்வர்களைக் கொன்று, ராவணன் சபையே வியக்க சரிசமமாக ஆசனம் இட்டு அமர்ந்து அறிவுரை கூறினார்.
ராவணன் வெகுண்டு அனுமனைக் கொல்லப் பணித்தான். அந்நேரம் வீடணன் எழுந்து மாதரையும், துாதரையும் கொல்லக் கூடாது என்றவுடன் வாலில் தீ வைக்கப் பணித்தான். அனுமன் வாலில் தீ வைத்தனர். அனுமன் அத்தீயால் இலங்கை நகரையே சுட்டெரித்தார்.
பின்னால் கம்பர் சொல்லுவார் அனுமனின் வீரதீரச் செயல்களால் கிணறுகளில் கூட ரத்தம் ஊறியது. யாரும் துாங்க முடியாமல் வெப்பத்தால் பூமியே கொதித்தது. பெண்களின் அருகே செல்ல இயலாமல் அவர்களின் கூந்தல் கருகி இருந்தது. இந்த அவல நிலையை என் செய்வது என ராவணன் ஆலோசித்தான் என்பார்.
அத்தகைய வீரதீரச் செயல்களைச் செய்துவிட்டு திரும்பிய அனுமன் தன் தோழர்களிடமோ அல்லது ராமனிடத்திலோ வந்து சீதையைப் பார்த்த செய்தியைத் தவிர வேறொன்றையுமே பகிர்ந்து கொள்ளவில்லை. உங்களுக்காக ஒரு பேனாவை எடுத்து அந்தப் பக்கம் வைத்தேன் என தம்பட்டம் அடிக்கும் இவ்வுலகில் இவ்வளவு பெரிய பராக்ரமத்தைச் செய்தும் வாயே திறக்கவில்லை என்றால் அனுமனின் தன்னடக்கம், பயன் கருதா உதவியை நாமும் கற்க வேண்டும் அல்லவா.
ஆயினும் கம்பர் ஆண்மைக் குணம் நிரம்பிய அனுமன் தன் வெற்றிச் சிறப்பைத் தானே சொல்ல வெட்கப்பட்டு சொல்லாமல் விட்டுவிட்டார் என்கிறார். மேலும் வீடணன் அடைக்கலமான போது தான் அனுமன் இலங்கையில் செய்த வீரதீர பராக்ரமச் செயல்களை ஸ்ரீராமரிடம் எடுத்துக் கூறினான்.
இலங்கையில் அழித்த அசோக வனத்தின் நிலை, வீரர்களைக் கொன்றது. இலங்கையை எரியூட்டியது முதலிய ஆற்றல் மிக்க செய்திகளை வியந்து சொன்ன போதும் அனுமன் அமைதியாய் நின்ற தன்மையும், ராமர் அவரைப் பார்த்துக் கண்களால் புன்னகைத்த போது நாணி, வாய் புதைந்து வணங்கி நின்ற தன்மையும் நாம் மனதில் இருத்த வேண்டிய செய்திகள்.
பிறர் பொருளில் செய்யும் உதவியைச் செய்ய வரும் ஒரு சிறிய நிகழ்ச்சிக்கே தர்ம பிரபுவே வருக என நுாறு பேனர் வைக்கும் காலத்தில் தற்பெருமை பேசாதே என்ற அவ்வையின் வாக்கு அமுதமாகும்.
நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் தம் குருவான அப்பர் பெருமானை பார்த்தது கிடையாது. எனினும் அப்பர் பெயரில் நிறைய தர்மங்கள் செய்து வந்தார். அவர் வசித்த திங்களூருக்கு அப்பர் எழுந்தருளிய போது இத்தனை தர்மங்களைத் தம் பெயரில் செய்யும் உத்தமரைக் கண்டு வாழ்த்தி, தான் யாரெனச் சொல்லாமல் இதனை உங்கள் பெயரிலேயே செய்யலாமே ஏன் இன்னொருவர் பெயரிலே செய்கிறீர்கள் எனக் கேட்ட பொழுது எங்கள் குருநாதர் பெருமை தெரியுமா? கல்லிலே கட்டி கடலிலே இட்ட போது சிவநாமம் ஓதிக் கரையேறியவர். நீற்றறை என்னும் சுண்ணாம்புக் காளவாயில் இட்ட போது
ஒரு வாரம் கழித்து அன்றலர்ந்த மலராக வெளியே வந்தவர்.
நஞ்சை உண்ட போதும் அழுதமாக மாறிட அருள் பெற்றவர். இடர வந்த யானை வணங்கி வழிபட்டுச் சென்ற பெருமைக்குரியவர். இத்தகைய பெருமானை வேறொருவர் என எவ்வாறு சொல்லலாம். சிவனடியாராக இருப்பதால் என்னால் தங்களைக் குறைவாகப் பேச இயலவில்லை. ஆமாம், தாங்கள் யாரோ? எனக் கேட்டார் அப்பூதி அடிகள். அதற்கு அப்பர் சிவனால் சூலை நோய் தந்து ஆட்கொள்ளப்பட்ட சிறியேன் தான் அடியேன் என்றார். தம் பெருமையை அப்பூதி அடிகள் சொல்ல அவர் தான் நான் எனச் சொல்லாமல் தன்னிடம் இருந்த சிறுமையைக் காட்டி அறிமுகம் செய்து கொண்ட வரலாறு நம்முடையது. பிறர் தன்னை மதிக்க வேண்டும் எனத் தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமமாகும். இன்பத்தை விரும்பாமல் இருப்பதல்லவோ இன்பம். அதுபோல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு என்கிறது நீதிநெறி விளக்கம்.
கர்ணன் சேனாதிபதி ஆனவுடன் பாண்டவர் படைகளைக் கடுமையாகத் தாக்கினான். தர்மரைத் தாக்கி அழிக்கக் கூடிய சூழலுக்கு வந்த போது நகுலனும் சகாதேவனும் தர்மரைக் காத்துக் கொண்டு வந்து படை வீட்டில் சேர்த்தனர். விபரம் அறிந்த அர்ஜுனனும், கிருஷ்ணரும் தர்மரை சந்திக்க வந்தனர். இருவரையும் ஒரு சேர சந்தித்த தர்மர், தன்னைக் கொல்ல முயன்ற கர்ணனைக் கொன்று பழிவாங்கிய பின் தான் தன்னைச் சந்திக்க வருவதாகத் தவறாக எண்ணிக் கொண்டு அர்ஜுனனை ஆரத் தழுவினார். பின்னர் கர்ணன் இன்னும் கொல்லப்படவில்லை என்பதை அறிந்து கோபத்துடன் உன் ஆயுதத்தால் என்ன பலன் எனக் கேட்டார். அர்ஜுனன் வெகுண்டெழுந்தான். ஏனெனில் தன் ஆயுதங்களைப் பழிப்பவர்களை கொல்வேன் எனச் சபதம் செய்திருந்தான். இப்போது என்ன செய்வது. கையில் வாளுடன் தர்மர் முன் நின்றான். சகோதரனைக் கொல்வதா? சபதத்தை காப்பாற்றுவதா? கிருஷ்ணர் மறித்து அர்ஜுனா! உன் மூத்த சகோதரனை அவமரியாதையாக நடத்தினாலே அவரைக் கொன்றதற்குச் சமம் என்றார். அர்ஜுனனும் வேறு வழியின்றி தர்மரை அவமரியாதையாக நடத்தினான். பிறகு மனம் நொந்து தன்னையே அழித்துக் கொள்ளத் துணிந்தான்.
பகவான் கிருஷ்ணர் ஏனப்பா! இந்த முடிவு எனக் கேட்டதற்கு பகவானே! என் மூத்த சகோதரனை அவமானமாக நடத்திய பிறகு உயிர் வாழலாமா? எனவே தான் இந்த முடிவு என்றான். உடனே பகவானும் அர்ஜுனா! உன்னை நீயே புகழ்ந்து கொள். அது தற்கொலைக்குச் சமம் என்றார். வேறு வழியின்றி அர்ஜுனனும் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டான். தற்கொலை செய்த கொண்டதற்கு சமமாயிற்று என்று சமாதானமானான். மகாபாரதம் உணர்த்தும் உண்மையிதுவாகும். இதற்கு மேல் தற்புகழ்ச்சியைப் பற்றி நாம் பேச இயலுமா? தன்னடக்கத்தோடு வாழ்வோம்.
தரணியைப் புகழ வைப்போம்.
-அடுத்த வாரம் முற்றும்
இலக்கியமேகம் ஸ்ரீநிவாசன்
ilakkiamegamns@gmail.com

