ADDED : ஆக 30, 2019 02:36 PM

குருகுலத்தில் படிக்கும் கணபதி என்ற மாணவன் மற்றவர்களிடம் பேசிக் கொண்டே இருப்பான். குருநாதர் அவனைக் கண்டித்தும் திருந்தவில்லை. ஒருநாள் கணபதியை, யானையின் முன் கட்டி வைத்தார் குருநாதர். சங்கிலியை அறுத்துக் கொண்டு யானை வந்தால் தன்னை மிதிக்குமே என பயந்தான்.
'' யானையின் வாயைப் பார்'' என்றார் குருநாதர்.
''குருநாதா! அதன் வாயை நம்மால் பார்க்க முடியாதே! அதைத் தான் தும்பிக்கை மூடியிருக்குதே'' என்றான்.
'சரி...எப்போதெல்லாம் அதன் வாயை பார்க்க முடியும்?” என கேட்டார்.
“ உணவை வாய்க்குள் வைக்கும் போதும், பிளிறும் போதும் மட்டுமே பார்க்கலாம்” என்றான்.
“சரியாகச் சொன்னாய். இதில் உள்ள தத்துவம் உனக்கு புரிகிறதா?” எனக் கேட்டார்.
கணபதி விழித்தான்.
'' சாப்பிடவும், தேவைக்கு பேசவும் மட்டுமே வாய் திறக்க வேண்டும். மற்ற சமயங்களில் மவுனமே நன்மை தரும். இதனால் தான் விநாயகர் யானைத்தலையுடன் இருக்கிறார்.
அவரது திருநாமத்தை பெயராக கொண்ட நீயோ தேவையில்லாமல் பேசுகிறாய். இனி வாய் திறப்பாயா?'' என்றார் கனிவுடன்.
அதன்பின் தேவைக்கு மட்டுமே வாய் திறந்தான் கணபதி.