ADDED : பிப் 20, 2023 10:49 AM

நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஹிந்து மதத்தின் இரு கண்கள். சிவபெருமானை கடவுளாக வழிபட்ட நாயன்மார்களில் பூத உடலோடு கயிலாயம் சென்றவர் சுந்தரர். அதே போல் மகாவிஷ்ணுவை வழிபட்ட அடியார்களில் பூத உடலோடு வைகுண்டம் சென்றவர் துக்காராம்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்து இல்லறத்துறவியாக வாழ்ந்தவர். இவரது பாடல்களை அபங்கம் என்பர்.இதன் மூலம் ஹரி நாமத்தின் மகிமையை மக்கள் அறிந்தனர். மன்னர் சிவாஜியின் குருவான இவர் ஒரு சமயம் வீதியில் ஹரி நாமம் பாடிக்கொண்டு வரும்போது இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொண்டே வந்து இவரிடம் ஒரு புகாரை தெரிவித்தனர்.
நாங்கள் இருவருமே அருகருகே உள்ள வீட்டில் குடியிருக்கிறோம். வரட்டியை தயார் செய்து அதில் வரும் வருமானத்தில் வாழ்கிறோம். ஆனால் என்னுடைய வரட்டி மட்டும் தினமும் குறைகிறது என ஒருவர் சொல்ல அதனை நான் எடுக்கவில்லை எங்களுக்குள் பிரச்னை தான் மிஞ்சுகிறது என்றார் மற்றொருவர். சரி உங்களுக்கு நானே தீர்வு சொல்லுகிறேன் என இருவரிடமும் வரட்டியை வாங்கினார் துக்காராம். முதலாமானவர் கொடுத்ததை வலதுகாதிலும், இரண்டாமானவள் கொடுத்ததை இடது காதிலும் வைத்துக்கேட்டார். அதில் முதலில் கொடுத்தவரின் வரட்டியில் ஹரி நாமம் ஒலிப்பதை கேட்டார். பின்னர் அவர்களிடம் மனதார ஹரி நாமத்தை சொல்லிக்கொண்டே வரட்டியை தட்டியது யார் என கேட்டார். அதற்கு இருவருமே ஆமாம் எனச்சொன்னார்கள். முதலாமானவரிடம் நீயே உண்மையாக ஹரி நாமம் சொன்னவர். மற்றொருவரோ பொய் சொல்லுகிறார் என சுவாமி சொன்னார். திருடியவர் மன்னிப்புக் கேட்டார். ''ஹரிநாமத்தை மனதார சொன்னால் அது காற்றில் பரவி எதிர் ஒலிக்கும். அது போல வரட்டிக்குள்ளும் ஒலித்தது. அதை தெரிந்து கொண்டேன்'' என்றார்.
இருவரும் அவரின் திருவடிகளை வணங்கினர்.

