ADDED : ஜன 20, 2015 04:08 PM

அவர் ஒரு புகழ் பெற்ற சக்தி வாய்ந்த முனிவர். அவருடைய ஆசிரமம் ஒரு வளமான கிராமத்தை ஒட்டியிருந்த காட்டில் இருந்தது. அவரிடம் பல சீடர்கள் இருந்தார்கள். அந்த முனிவருக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள். மனைவி இறந்துவிட்டாள்.
அந்த முனிவரின் பிரதான சீடர் பெயர் மான்யர். அவர் குருவின் ஆசியுடன் இமயமலை சென்று தவம் செய்து கொண்டிருந்தார்.
இதற்கிடையில் முனிவர் மகாசமாதியடைய வேண்டிய நேரம் வந்தது. தன் குழந்தைகளுக்கும் சீடர்களுக்கும் ஆசி வழங்கிவிட்டு உலக
வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அப்போது முனிவரின் மகனுக்கு வயது 14. மகளுக்கு 8.
ஆசிரமத்தில் நிறைய எருமை மாடுகள் இருந்தன. அதுபோக ஊர் மக்கள் வழங்கிய தானியங்கள் வேறு இருந்தன. ஆசிரமத்தைச் சுற்றிலும் காய்கறித் தோட்டம். எனவே, எந்தக் கவலையும் இல்லாமல் முனிவரின் குழந்தைகள் விளையாட்டிலேயே காலத்தைக் கழித்து வந்தார்கள்.
ஒரு நாள் மிகவும் கோபக்காரரான ஒரு முனிவர் அந்த ஆசிரமத்திற்கு வந்தார். சீடர்கள் தானியம் சேகரிக்கவும் சுள்ளி பொறுக்கவும் வெளியே சென்றிருந்தார்கள். தோட்டத்தில் முனிவரின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வந்த முனிவர் அழைத்தது அவர்கள் காதில் விழவில்லை. அவரோ மிகுந்த பசியோடு இருந்தார். ஆசிரமத்தில் தனக்குக் காய் கனி கிழங்கு கொடுத்து உபசரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்போடு வந்திருந்தார். குழந்தைகள் விளையாட்டு மும்முரத்தில் வந்த விருந்தாளியைக் கவனிக்கவில்லை.
செழிப்பான வாழ்க்கை தந்த அகங்காரத்தினால்தான் குழந்தைகள் தன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று தப்புக் கணக்கு போட்டார் முனிவர். கோபத்தில் அவர் கண்கள் சிவந்தன.
அவர் வாயிலிருந்து கடுமையான சாபம் வந்தது.
''இனிமேல் எந்தக் காலத்திலும் உங்களுக்கு ஒரு எருமை மாடு, ஒரு மூட்டை தானியத்திற்கு மேல் செல்வம் இருக்காது..''
அதற்குள் வெளியே போயிருந்த சீடர்கள் வந்துவிட்டார்கள். பதறிப்போய் குழந்தைகளிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்து வந்தனர்.
குழந்தைகள் முனிவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். சாப விமோசனம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
முனிவர் மனம் இளகினார்.
''சாபம் கொடுத்தது கொடுத்ததுதான். உங்கள் செல்வம் அந்த அளவுக்குக் கீழே குறையவும் குறையாது என்று சாபத்தை தளர்த்துகிறேன். அதற்கு மேல் ஆண்டவன் விட்ட வழி.''
முனிவர் ஒன்றும் சாப்பிடாமல் சென்றுவிட்டார். அடுத்த நாளே முனிவரின் சாபம் பலித்துவிட்டது. ஒரு எருமை மாட்டைத் தவிர மற்ற எல்லா மாடுகளும் நோய் வந்து இறந்துவிட்டன. ஒரு மூட்டை தானியம் தவிர மற்ற எல்லா தானியங்களிலும் பூச்சி வந்துவிட்டது.. எப்படியோ ஆசிரமவாசிகள் மூன்று நான்கு நாட்கள் பசியும் பட்டினியுமாக சமாளித்தார்கள்.
சீடர்கள் ஒவ்வொருவராகக் கழன்று கொண்டார்கள். எங்கே அந்த சாபம் தங்களையும் ஒட்டிக் கொள்ளுமோ என்ற பயத்தில் அனைவரும் முனிவரின் குழந்தைகளை விட்டு அகன்றார்கள்.
இதற்கிடையில் பிரதான சீடர் மான்யர் குருவின் ஆசிரமத்திற்கு வந்தார். நடந்ததைத் தெரிந்து கொண்டார்.
''இந்த சாபம் எங்களோடு போகட்டும். நீங்கள் எங்காவது சென்று வளமாக வாழுங்கள்.'' என்று முனிவரின் மகனும் மகளும் மான்யரிடம் சொன்னார்கள்.
மான்யர் யோசித்தார். தனக்கு ஞானத்தை வாரி வழங்கிய குருநாதரின் குழந்தைகளை வறுமையில் வாடவிட்டுப் போக மனமில்லை.
மறுநாள் பொழுது விடிந்தது. முனிவரின் மகனும் மகளும் தங்களிடம் இருந்த எருமை மாட்டைக் கவனமாகக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் இருந்த ஒரே சொத்து ஆயிற்றே!
அப்போது மான்யர்''வாருங்கள் குழந்தைகளே. நாம் கிராமத்திற்குச் செல்வோம்,'' என்று அழைத்தார்
''எதற்காக?''
''இந்த மாட்டையும் கையில் இருக்கும் ஒரு மூடை தானியத்தையும் யாராவது ஏழைக்குத் தானம் செய்துவிடலாம்.''
''என்ன ஆயிற்று ஐயா உங்களுக்கு? இன்றைய தேதியில் எங்களிடம் இருப்பதெல்லாம் இந்த மாடும் தானியமும்தான். அதையும் தானம் கொடுத்துவிட்டால் நாங்கள் எப்படி வாழ்வது?''
''சாபம் கொடுத்த முனிவரின் வார்த்தைகளை யோசித்துப் பார்த்தீர்களா? எந்தக் காலத்திலும் உங்கள் செல்வம் ஒரு மாடு ஒரு மூடை தானியம் என்ற அளவிற்குக் கீழே குறையாது என்று சொல்லியிருக்கிறார் அல்லவா?''
''அதனால்.. .''
''அதனால் நாம் மாட்டையும் தானியத்தையும் தானம் கொடுத்துவிட்டால் உடனே நமக்கு அவை ஏதாவது ஒரு வடிவத்தில் திரும்பவும் கிடைத்துவிடும். இதனால் ஒரு ஏழைக்கு உதவி செய்த பேறும் கிடைக்கும்!''
முனிவரின் பிள்ளைகள் இந்த யோசனையை ஏற்றார்கள்.
தானிய மூடையை எருமைமாட்டின் மேல் ஏற்றி கிராமத்திற்குச் சென்றார்கள். அங்கு ஏழையிடம் தானிய மூட்டையை தானம் கொடுத்தார்கள். அவன் அவர்களை மனமார வாழ்த்தினான்.
அடுத்து ஒரு ஏழை விவசாயியிடம் எருமையைத் தானம் செய்தார்கள். அதைப் பெற்ற விவசாயி, தன் களஞ்சியத்தில் இருந்து ஒரு மூட்டை தானியத்தை அவன் அவர்களுக்குக் கொடுத்தான். அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தான்.
மாலை அவர்கள் ஆசிரமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு செல்வந்தன் இறந்து போன தன் தந்தையின் இறுதிச்
சடங்குகளைச் செய்து கொண்டிருந்தான்.
அவனுடைய தந்தை ஆசையாக வளர்த்த ஒரு எருமை மாட்டை யாருக்காவது தானம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து உரியவர்களைத் தேடிக் கொண்டிருந்தான். முனிவரின் குழந்தைகளைப் பார்த்தவுடன் அவர்களுக்கே மாட்டைத் தானமாகக் கொடுத்துவிட்டான்.
மன நிறைவுடன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்கள். விவசாயி கொடுத்த தானியத்திலிருந்து கொஞ்சம் தானியம் எடுத்து சமைத்து உண்டார்கள். எருமைப்பாலையும் அருந்தினார்கள்.
மறுநாளும் அதே போல் செய்தார்கள். பசித்த ஒரு ஏழைக்குத் தானியமும் ஒரு சம்சாரிக்கு எருமை மாட்டையும் தானம்
கொடுத்தார்கள். அவர்களுக்கு எப்படியோ அன்று மாலைக்குள் ஒரு மூடை தானியமும் ஒரு எருமை மாடும் கிடைத்துவிட்டது. இந்தக் கதை தினமும் தொடர்ந்தது. இதே போல் தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு மான்யர் மீண்டும் தவம் செய்யச் சென்றுவிட்டார்.
முனிவரின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவரானார்கள். உரிய வயதில் திருமணம் செய்து கொண்டார்கள். என்றாலும் இந்த தானம் தொடர்ந்து நடந்தது. இவர்களின் செயலால் அந்த நாடே வளம் பெற்றது. நாட்டு மன்னன் அவர்களைப் பாராட்டினான். பல கிராமங்களைப் பரிசாகத் தர முன் வந்தான். அவர்கள் மறுத்து விட்டார்கள். சாபம் இருப்பதால் அந்தப் பரிசினால் தங்களுக்கு எந்தப் பயனும் இருக்காது என்று சொல்லிவிட்டார்கள்.
அவர்கள் காலம் முடிந்தவுடன் அவர்கள் செய்த தானத்திற்காக இறைவன் அவர்களுக்கு சுவர்க்கத்தில் நிரந்தரமான இடம் தந்தான். இதுதான் வாழ்க்கை. சாபத்தை வரமாகப் பார்ப்பது தான் உண்மையான சாப விமோசனம்.
ஒரு முனிவர் பூஜை செய்து கொண்டிருந்த சாளக்கிராம விக்கிரகத்தை இரண்டு வானரங்கள் ஏரியில் தூக்கிப் போட்டுவிட்டன. முனிவர் சாபம் கொடுக்கத் தயாரானார். குரங்குகளை நோகடிக்க அவருக்கு மனம் இல்லை. அதே சமயத்தில் சாபம் கொடுக்காமல் இருந்தால் அந்தக் குரங்குகள் மீண்டும் சாளக்கிராமத்தை எடுத்து ஏரியில் போட்டுவிட்டால் தேடி எடுப்பது கஷ்டமாக இருக்குமே!
''இனிமேல் நீங்கள் தண்ணீரில் எது போட்டாலும் அது மிதக்கட்டும்'' என்று சாபம் கொடுத்தார். அந்த வானரங்களின் பெயர் நளன் மற்றும் நீலன். பிற்காலத்தில் இலங்கைக்குச் செல்ல பாலம் கட்டும் போது. கல்லைக் கடலில் போடும் வேலையை அந்த வானரங்களிடம் தரப்பட்டது. அந்த வானரங்கள் போட்ட கற்கள் தண்ணீரில் மூழ்கவில்லை. அதனால் பாலம் கட்டும் வேலை வேகமாக நடந்தது.
ஒரு நிகழ்வு சாபமா வரமா என்பது நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது.. வறுமை, ஊனம் போன்ற சாபங்களைக் கூடச் சரியான பார்வையினால் வரங்களாக மாற்றிப் பார்ப்பது தான் உண்மையான மகிழ்ச்சி.
- இன்னும் மலரும்
வரலொட்டி ரெங்கசாமி

