sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மலரட்டும் மகிழ்ச்சி (2)

/

மலரட்டும் மகிழ்ச்சி (2)

மலரட்டும் மகிழ்ச்சி (2)

மலரட்டும் மகிழ்ச்சி (2)


ADDED : ஜன 27, 2015 12:25 PM

Google News

ADDED : ஜன 27, 2015 12:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா! இதோ படியுங்கள்! எல்லாருக்கும் புரியும்.

இது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நடந்தது. உலகம் முழுவதும் ஒரு மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்தக் காலத்தில் இந்த உலகில் வசிக்கும் மனிதர்களுக்கும் வானுலகில் வசிக்கும் தேவர்களுக்கும் நெருங்கிய உறவு இருந்தது.

மனிதர்கள் நல்ல நெறியோடு வாழ்ந்து, வானுலகத்து தேவர்களுக்கு உரிய வழிபாடுகளைச் செய்தார்கள். அந்த வழிபாடுகளால் தேவர்கள் வலிமை பெற்றார்கள். மனிதர்களுக்கு எல்லா நலன்களையும் வாரி வழங்கினார்கள். இப்படியாக, பகவான் கீதையில் சொன்னது போல் மனிதர்களும் தேவர்களும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த இன்னிசையில், சுருதி பேதமாக அந்த நிகழ்வு அமைந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் வருண பகவானுக்கு என்று சிறப்பான வழிபாடுகள் நடக்கும். மழையினால்தான் பயிர்கள் வளர்கின்றன. உரிய காலத்தில் உரிய அளவு மழை பெய்தால்தான் மனிதர்கள் வாழ முடியும் என்பதை உணர்ந்த அவர்கள் வருடா வருடம் வருண பகவானுக்கு என்று சிறப்பாக வழிபாடு

செய்வார்கள். அந்த வருடம் அவர்கள் வருண தேவனுக்கான வழிபாட்டைத் தொடங்கும் சமயத்தில் உலகை ஆண்டு கொண்டிருந்த மன்னனின் மகன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டான்.

மன்னன் மனதில் செயல்படுத்த முடியாத கோபம்... வாழ வேண்டிய வயதில் இப்படி அநியாயமாக இறந்துவிட்டானே என்ற சோகம்... ஆத்திரம்... அந்த வருடம் வருணபகவானுக்கு நடக்க வேண்டிய வழிபாட்டை ரத்து செய்தான் மன்னன். மக்கள் அதிர்ந்தார்கள். வருண

பகவானுக்கு ஏமாற்றம்.

சோகத்தில் இருந்த மன்னனுக்கு அறிவுரை கூற அமைச்சர்களே பயந்தார்கள். ஒரு நாள் வருணபகவான் ஒரு அந்தணராக உருமாறி மன்னனின் அவையில் தோன்றினார்.

அவரது முகத்தில் இருந்த ஒளியில் மயங்கிய மன்னன் அவருக்கு நிறைய பரிசுப் பொருட்கள் வழங்க உத்தரவிட்டான்.

''எனக்குப் பரிசு வேண்டாம் மன்னா.''

''பின் வேறு என்ன வேண்டும் சொல்லுங்கள்.''

''இந்த நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் ஒரு மரபை நீங்கள் மீறிவிட்டீர்கள். புரியவில்லையா மன்னா...

வருடம் தவறாமல் ஆவணி மாதம் நடக்கும் வருண வழிபாட்டைத்தான் சொல்கிறேன்.. இந்த வருடம் அந்த வழிபாட்டை ரத்து செய்துவிட்டீர்கள்.''

''நானாக அதைச் செய்யவில்லை. என் மகன் இறந்துவிட்டான். அதனால். . ''

''பிறப்பும் இறப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒவ்வொரு வருடமும் பலர் இறக்கிறார்கள். ஏன் போன வருடம் கூட உலக மக்களில் பலர் தங்கள் மகனையோ மகளையோ மரணத்திற்குப் பறி கொடுத்திருந்தார்கள்.

அப்போதெல்லாம் வழிபாட்டை நிறுத்தாத நீங்கள், இப்போது உங்கள் மகன் இறந்துவிட்டான் என்றவுடன் வழிபாட்டை ரத்து செய்வது அதர்மம் அல்லவா? உங்கள் சோகத்தை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், மற்றவர்கள் வழிபாடு செய்வதை ஏன் தடுக்கிறீர்கள்?

''நான் இந்த உலகத்திற்கே மன்னன். என்னிடமே இப்படிப் பேசுகிறாயா? உன்னை என்ன செய்கிறேன் பார்.'' வாளை உருவிக் கொண்டு அந்தணர் மேல் பாய்ந்தான் மன்னன்.

அதற்குள் அந்தணர் வருண பகவானாக மாறினார்.

''மழைக்கடவுளான என்னிடமே விளையாடுகிறாயா? கேட்டுக்கொள்! இன்றிலிருந்து இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த உலகில் ஒரு சொட்டு மழை கூட இருக்காது. கடுமையான உணவுப்பஞ்சம் நிலவும். அப்போது வருண பகவானின் வல்லமையைத் தெரிந்து கொள்வாய்.'' நாடே சோகத்தில் மூழ்கியது. ஏரிகளும் ஆறுகளும் வறண்டு போயின. நாட்டின் களஞ்சியங்களில் இருந்த தானியங்கள் இன்னும் சில மாதங்களுக்குத்தான் வரும் என்ற நிலைமை. விலை ஏறியது. ஏழைகள் பசியால் மடிந்தார்கள்.

இதற்கிடையில் வருண பகவான் ஒரு வழிப்போக்கனாக மாறி உலகை வலம் வந்தார். தனது செயலால் உண்டான விளைவுகளைப் பார்த்தார். பஞ்சத்தினால் இந்த உலகமே அழிந்து போனாலும் பரவாயில்லை என்று நினைத்தார்.

அப்போது, உலகின் தென் கோடியில் இருந்த ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி வேகாத வெயிலையும் பொருட்படுத்தாமல் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தான். வருணனுக்கு வியப்பு... இவனுக்கு என்ன கிறுக்கா...! உலகமே சும்மா இருக்கும்போது இவன் மட்டும் ஏன் உழுது கொண்டிருக்கிறான்? நிச்சயம் மழை பெய்யாது. பின் உழுவதனால் என்ன பயன்?

வருணன் அந்த விவசாயியிடம் சென்றார். அவன் ஆள் பார்க்க ஒல்லியாக கருப்பாக இருந்தான். வயிறு ஒட்டிப் போயிருந்தது.

'பாவம்.. ஒரு மனிதனின் கங்காரத்தினால் இவனைப் போன்ற பாமர அப்பாவிகள் துன்பப்படுகிறார்களே!' என்று நினைத்தார் வருணன். அடுத்த நிமிடமே அவரது எண்ணம் மாறியது. 'மனிதர்களிடம் அகம்பாவம் புகுந்துவிட்டது. இப்படி ஒரு தண்டனை கொடுத்தால்தான் அவர்கள் மனம் திருந்துவார்கள்' என்று நினைப்புடன் அவனிடம்,''வருணனின் சாபம்தான் உனக்குத் தெரியுமே? பிறகு ஏன்

இப்படி வேகாத வெயிலில் உன்னை நீயே வருத்தி உழுது கொண்டிருக்கிறாய்?''

உழவன் நிமிர்ந்தான்.

''ஐயா! வழிப்போக்கரே! நான் உங்களைப் போல் ஊர் சுற்றுபவன் இல்லை. எனக்குத் தெரிந்த ஒரே தொழில் உழுவது தான். என் தந்தை, அவர் தந்தை அவருடைய முன்னோர் எல்லோருமே உழவுத் தொழில்தான் செய்தார்கள். என் பாட்டனார் அடிக்கடி என்னிடம் சொல்வார். ''பேராண்டி, நீ அழுதுகொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும்.''

''ஏன் தாத்தா?''

''உனக்கு என்று உள்ள தொழிலை நீ தொடர்ந்து செய்யவில்லையென்றால் அது உனக்கு மறந்து போகும். அதில் நீ பெற்ற தேர்ச்சி வீணாகிவிடும். அதனால் எந்த சோகத்திலும் உன் தொழிலை விட்டுவிடாதே''

இந்த அறிவுரையை இவன் உலகாளும் மன்னனுக்குச் சொல்ல வேண்டும் என்று வருண பகவான் நினைத்தார்.

எதையோ நினைத்தபடி உழவன் சிரித்தான். வருண பகவான் காரணம் கேட்டார்.

''மழை பெய்யவில்லையென்றால் துன்பம்தான். காட்டில் விளையும் காய் கிழங்குகளை உண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்றாலும் தினமும் இரண்டு மணி நேரம் உழுகிறேன்.. பயிற்சிக்காக... ஐந்து வருடம் கழித்து மழை பெய்யும் போது உழவுத் தொழில் மறந்து போயிருக்கக் கூடாதே என்றுதான் உழுகிறேன். எனக்கு இந்த வருண பகவானை நினைத்தால்தான் சிரிப்பாக இருக்கிறது.''

வருணன் திடுக்கிட்டார்.

''ஏதோ ஒரு கோபத்தில் ஐந்து வருடங்களுக்கு உலகில் மழை பொழிய மாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஐந்து வருடம் கழித்து அவருக்கு மழையைப் பெய்விக்கும் கலை மறந்து போய்விடலாம். அப்போது என்ன செய்வார்? அப்போதும் மழை பொழியவில்லை என்றால் மும்மூர்த்திகள் சினம் கொண்டு அவரைப் பதவியில் இருந்து நீக்கிவிட மாட்டார்களா? எங்கள் மன்னனுக்குத் தான் அறிவில்லை என்றால் அவருக்கும் அறிவில்லையே!''

வருண பகவானுக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. உடனே அந்த இடத்தை விட்டு மறைந்தார். அன்று இரவே நல்ல மழை பெய்தது. மன்னனும் தன் தவறை உணர்ந்தான். அந்த ஆண்டு வருண பகவானுக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அழுது கொண்டிருப்பவர்கள் உழுது கொண்டு இருப்பதால்தான் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. சோகமும் மரணமும் இல்லாத வாழ்க்கையில்லை. ஆனால் அவை நம் கடமையில் குறுக்கிட நாம் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.

- இன்னும் மலரும்

வரலொட்டி ரெங்கசாமி






      Dinamalar
      Follow us