ADDED : ஜூன் 21, 2018 04:08 PM

சங்கரமடத்திற்கு ஏழைப்பெண் ஒருத்தி வந்தாள். மகாபெரியவரிடம் தெரிவித்தால் தான் பிரச்னை தீரும் என்ற எதிர்பார்ப்பு அவளது கண்களில் தெரிந்தது.
''சுவாமி...என் கணவர் வியாதியால் சிரமப்படுகிறார். வேலைக்கு போக முடியவில்லை. மகனுக்கோ சரியான வேலை இல்லை. கல்யாண வயதில் பெண்ணும் இருக்கிறாள். அவளை எப்படி கரை சேர்ப்பதென்று புரியவில்லை. நிம்மதியாக துாங்க முடியவில்லை. திசாகாலம் சரியில்லையோ என்று என் கணவரின் ஜாதகத்தை ஜோசியரிடம் காண்பித்தேன். அவரும் பரிகாரம் சொன்னார். அதைச் செய்ய பணம் நிறைய தேவை. என்ன செய்வதென்றே தெரியவில்லை''
சுவாமிகள் கனிந்த பார்வையுடன், ''ஏனம்மா.... வாழ்க்கை இப்படியே இருக்கும் என நினைக்கிறாய்? சக்கரம் சுழல்வது போல மாறிக் கொண்டே தானிருக்கும். இப்போது உன் வாழ்வில் காலச்சக்கரம் அதிக பட்சம் கீழே இருக்கிறது. இனி அது மேல் நோக்கி தானே சுழலும்? அப்போது எல்லா பிரச்னையும் கடவுள் அருளால் சரியாகும். உன் கணவரின் உடல்நலனில் கவனம் செலுத்து. மகன் நல்ல வேலைக்காக முயற்சி செய்யட்டும். உன் மகளைத் தேடி நல்ல வரன் வரும். கவலைப்பட வேண்டாம். உன் கணவரை தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கச் சொல். அதனால் உடல்நலம், செல்வம் சேரும்'' என்றார்.
மேலும் பெரியவர், ''அது சரி.... ஜோசியர் என்ன பரிகாரம் சொன்னாருன்னு சொல்லவில்லையே...'' என கேட்டார்.
''சகஸ்ர போஜனம் செய்து வைப்பது தான் நல்ல பரிகாரம் என்றார். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய பணம் வேண்டாமா?'' என்றாள் அவள்.
சுவாமிகள், ''சகஸ்ர போஜனம் என்றதுமே ஆயிரம் பேருக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதில்லை. ஆயிரம் உயிர்களின் பசியைத் தீர்த்தாலும் பிரச்னை தீரும். வீட்டில் அரிசிக்குருணை இருக்குமே? அதில் ஒரு கைப்பிடி எடுத்து எறும்புப் புற்றுக்கு அருகில் போடு. ஆயிரம் எறும்புகள் அதைச் சாப்பிடும். அதுவும் சிறந்த பரிகாரம் தான். காமாட்சி அருளால் நல்லதே நடக்கும். உனக்காக நானும் பிரார்த்திக்கிறேன்.'' என்றார்.