ADDED : செப் 27, 2019 10:10 AM

தன்னை அழைக்க பிரம்மா ஏன் வரவில்லை? என வாணி கேட்டதும் சற்றே தடுமாறினான் வசிஷ்டன். இருப்பினும், ''அம்மா என்ன இது? அவர் தான் வர வேண்டுமா? நான் வரக் கூடாதா? தங்களை அழைக்கும் தகுதி எனக்கு இல்லையா?'' என பதில் கேள்விகள் கேட்டான்.
வாணியும் அசரவில்லை.
''வசிஷ்டா! நீ பிரம்ம ஞானி! உனக்கு தெரியாதது ஏதுமில்லை. அப்படியிருக்க ஏன் இப்படி கேட்கிறாய்? உன் அழைப்பை ஏற்று நான் வரும் போது, 'இப்போது மட்டும் ஏன் வந்தாய்?' என பிரம்மா கேட்டால் என்ன செய்வேன்?'' என பதில் கேள்வி கேட்டாள்.
''அம்மா... அப்படி தந்தை கேட்க மாட்டார். அவர் அழைக்கச் சொன்னதால் தானே வந்திருக்கிறேன்..''
''இருக்கலாம்... அதே வேளை நான் சொல்வதையும் கேட்டுக் கொள். இந்த மாபெரும் வேள்வியே சிருஷ்டி தண்டத்திற்காகத் தானே?''
''ஆமாம் தாயே... அதில் என்ன சந்தேகம்?''
''அதற்காக எதற்கு இத்தனை பெரிய வேள்வி? என்னிடம் கேட்டால் தந்து விடப் போகிறேன்.''
'' எடுத்துச் சென்ற நீங்களே கூட திரும்ப வந்து இந்தாருங்கள்; நான் அறியாமல் பிழை செய்து விட்டேன் எனக் கூறலாம் அல்லவா?''
''வசிஷ்டா.. நான் எங்கே அறியாமல் செய்தேன்? அறிந்து தான் செய்தேன்.''
எதிர்பார்க்காத பதிலை அளித்தாள் வாணி. வசிஷ்டன் திகைத்தான்.
''என்ன வசிஷ்டா திகைக்கிறாய்? அந்த பராசக்திக்கு உடம்பில் பாதியை அளித்தார் சிவன். மகாலட்சுமிக்கு மார்பையே கொடுத்தார் விஷ்ணு. இந்த சிருஷ்டி தண்டத்தைக் கூட பிரம்மா எனக்கு கொடுக்கவில்லையே? அதனால் நானாக உரிமையோடு எடுத்துக் கொண்டேன். இது எப்படி அறியாமல் செய்த பிழையாகும்? அறிந்து செய்த என் உரிமைக்கான செயல் இது.''
''தாயே... முடிவாய் என்ன சொல்கிறீர்கள்?''
''கல்விச் செல்வமே பெரியது என்றும், எனக்கான உரிமையை தந்ததாகவும் பிரம்மா ஏற்றுக் கொண்டால் அடுத்த நொடியே இந்த தண்டத்தை தருவேன். இதற்கு இத்தனை பெரிய வேள்வி எதற்கு?''
வாணி அப்படி கூறவும் 'இது சுலபத்தில் முடியும் விஷயம் அல்ல' என்ற உண்மை வசிஷ்டனுக்கு புரிந்தது.
திரும்பி வந்த வசிஷ்டன் நடந்ததை பிரம்மாவிடம் தெரிவித்தான்.
பிரம்மாவுக்கு கோபம் வந்தது.
''ஞானம் மிக்க வாணி ஏன் இப்படி அஞ்ஞானியாகி விட்டாள்? நான் என்னும் செருக்கால் தடுமாறுகிறாள். அதுவே இப்படி பேச வைக்கிறது. தகுந்த பாடம் கற்பித்தால் தான் திருந்துவாள்.'' என்றான் பிரம்மன்.
''தந்தையே... தாயான வாணியிடம் செருக்கும், பிடிவாதமும் இருப்பது போல நியாயமும் அவர் பக்கம் அல்லவா உள்ளது? அழியாச் செல்வம் கல்வி தானே? அதே போல் உங்களில் பாதியும் அவர்கள் தானே?''
வசிஷ்டன் கோபத்தை தணிக்க முயன்றான்.
''மைந்தா... நான் கல்விச் செல்வத்தை குறைத்து மதிப்பிடவில்லையே.. என்னில் பாதி வாணி என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லையே..?''
''அப்படியானால் தாயை சமாதானம் செய்வதில் என்ன தயக்கம்?''
''தொடக்கத்திலேயே செய்தேனே? ஆனால் அதை உணராத அவள் சிருஷ்டி தண்டத்தை துாக்கிச் சென்றது இப்போது இவ்வளவு துாரம் வந்துள்ளது?''
''இன்னொரு முறையும் சமாதானம் செய்யுங்களேன். அந்த வேள்வியே தேவையில்லையே..''
''இல்லை... எல்லா ஏற்பாடுகளையும் செய்த பின் வேள்வியை செய்யாமல் விட முடியாது. நாளை அது தவறான உதாரணமாகி விடும்''
''பிரம்மமும், கல்வியும் மோதுவது மட்டும் உதாரணம் ஆகாதா?''
''நான் மோதவில்லையே... வாணி தானே தொடங்கினாள்? அவள் தான் முடித்தும் வைக்க வேண்டும்''
''அப்படியானால்?''
''இந்த வேள்வி கட்டாயம் நிகழ்ந்தாக வேண்டும். அப்படி நிகழ்வது சிருஷ்டி தண்டத்திற்காக மட்டுமல்ல. இதன் விளைவாக கால காலத்துக்கும் பல நன்மைகள் நிகழப் போகின்றன. அதனாலேயே எம்பெருமானாகிய மகாவிஷ்ணு இந்த அத்திகிரியில் இதை நடத்த கட்டளையிட்டார். இதை விட்டு நான் வாணியின் விருப்பப்படி நடப்பதால் அவளுக்கு வேண்டுமானால் சமாதானம் ஏற்படலாம். அதனால் உலகத்திற்கு நன்மை கிடைக்காது.''
''எல்லாம் சரி.... அன்னை இல்லாமல் எப்படி வேள்வி நடக்கும்? தம்பதி சமேதராக சங்கல்பம் செய்வது தானே விதி?''
''ஆம்...அதனால் என்ன? என் பத்தினிகளில் ஒருத்தியான சாவித்ரி மூலம் வேள்வியை முடிப்பேன்''
''நீங்கள் இப்படி சொல்வீர்கள் என எதிர்பார்க்கவில்லை தந்தையே...''
''எதிர்பாராத பல விஷயங்கள் நிகழும் போது நீயும் இப்படி சொல்வதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை மகனே..''
''நீங்கள் இப்படி பேசுவதே நல்லதில்லையே?''
''அனைத்து நலம் கெட்டவைகளும் கூட இந்த வேள்வியால் நலமாகி விடும்! அதை தேவலோகமும், பூலோகமும் வரும் நாட்களில் காணப் போகிறது. இது மகாவிஷ்ணுவின் திருவிளையாடல். நம் கடமையை சரியாக செய்தால் போதும். மற்றவை தானாக நிகழும். சாவித்ரியை நான் அழைத்ததாகச் சொல்லி அழைத்து வா..''
பிரம்மா கட்டளையிட சாவித்ரியும் பிரம்மபத்னியாக அங்கு நின்றாள்!
வேள்வி தொடங்கியது.. வேத மந்திரம் முழங்கின. யாக குண்டத்தில் அக்னி ஆள் உயரத்திற்கு கொழுந்து விட்டெரிந்தது. ஒட்டு மொத்த உலகின் கவனமும் அந்த வேள்வியில் மையம் கொண்டது. ஆனால் வாணியாகிய சரஸ்வதி இதை எதிர்பார்க்கவில்லை.
பிரம்மா தன் மதிப்பை உணராமல் பெரிய தவறை செய்ய தொடங்கியதாக கருதி கோபித்தாள். பிரம்மனை விட்டு விலகியதால் அவளது சக்தியில் தயை, பரிவு, கருணை முதலிய உணர்ச்சிகள் ஒடுங்கி, ஆத்திரம், கோபம், கொந்தளிப்பு போன்ற எதிர் உணர்வுகள் கொப்பளித்தன.
தன்னை விடுத்து வேள்வி நடக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தாள். அதை தடுத்து நிறுத்தி தக்க பாடத்தை கற்பிக்க நினைத்தாள்.
அதற்காக தன் யோக சக்தியில் ஒரு பகுதியை நெருப்பாக்கி அதை யாகசாலை நோக்கி ஏவினாள். இதை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த பிரம்மன், ''எம்பெருமானே மகாவிஷ்ணு! வேள்விக்கு வாணி இடையூறு செய்யப் பார்க்கிறாள். தாங்கள் தான் என்னை காக்க வேண்டும்'' என பிரார்த்தித்தான். யாகசாலை நோக்கி வந்த அக்னியை கையில் பிடித்தான் விஷ்ணு. அதனால் 'தீபப்பிரகாசன்' எனப் பெயர் பெற்றான். அக்னி பயன் தராமல் போனதை அறிந்த சரஸ்வதி 'கபால அஸ்திரம்' என்ற ஒன்றை ஏவினாள். மகாவிஷ்ணுவின் நரசிம்ம சொரூபம் இதை விழுங்கி கர்ஜனை புரிந்தது.
தொடரும்
இந்திரா சௌந்தர்ராஜன்