ADDED : பிப் 19, 2023 01:10 PM

மகாராஷ்டிரா மாநிலம் பண்டரிபுரம் அருகிலுள்ள லம்போட்டி என்னும் கிராமத்தில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். அங்கு குடிநீர் பஞ்சம் நிலவியதால் ஊர்மக்கள் நீண்ட துாரம் நடந்தே போய் குளம் ஒன்றில் தண்ணீர் எடுத்து வந்தனர்.
ஒருநாள் அந்த குளக்கரையில் அமர்ந்திருந்தார் மஹாபெரியவர். சென்னையைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் அப்போது அங்கு வந்தனர். அதில் மூதாட்டி ஒருவர் கங்கை தீர்த்தக் குடம் ஒன்றை கொண்டு வந்து மஹாபெரியவரின் முன்பு வைத்து விட்டு தரையில் விழுந்து வணங்கினார். அவரிடம், '' மகிஷ தீர்த்தம் பார்த்ததுண்டா?'' எனக் கேட்டார்.
''புனிதமான கங்கை, காவிரி, ராமேஸ்வரம் கோடி தீர்த்தங்களில் நீராடியிருக்கிறேன். ஆனால் மகிஷ தீர்த்தத்தை பார்த்ததில்லையே?'' என வியந்தார் மூதாட்டி.
''அப்படியா... கொஞ்ச நேரத்தில் இங்கேயே மகிஷ தீர்த்தத்தை நாம் பார்க்கலாம்'' என்றார் மஹாபெரியவர். பக்தர்களுக்கோ புரியவில்லை.
அச்சமயம் எருமை மாடுகளை ஓட்டியபடி சிலர் அங்கு வந்தனர். அவர்களிடம் தோல் பைகள் நிறைய இருந்தன. லம்போட்டி ஊராரின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் நிரப்பி விட்டு புறப்பட்டனர். அப்போது மூதாட்டியிடம், ''அதோ பாருங்கள். மகிஷ தீர்த்தம். மகிஷம்னா எருமை மாடு தானே'' என்றார் மஹாபெரியவர். மகிஷ தீர்த்தம் என்பது புனித தீர்த்தமோ எனக் கருதிய மூதாட்டியைக் கண்டு புன்னகைத்தார் மஹாபெரியவர்.
இதைப் போல மற்றொரு சமயம் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் அருகிலுள்ள தர்மாபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் மஹாபெரியவர் தங்கியிருந்தார். அங்கு ஒருநாள் மதியம் சீடர்கள் அனைவரும் ஓய்வெடுத்தபடி இருந்தனர். கோயிலின் முன்புள்ள புளிய மரத்தில் குரங்குகள் சில விளையாடிக் கொண்டிருந்தன.
அதில் ஒரு குரங்கு கீழே கிடந்த காவித்துண்டைத் தன் தலைமீது சுற்றிக் கொண்டது. அதைக் கண்டதும் சீடர் ஒருவரை அழைத்து,
'' சாமியார் ஒருவர் புதிதாக இங்கு வந்திருக்கிறார். அவருக்கு உணவிடு'' என்றார். அங்குமிங்கும் பார்த்து விட்டு, 'யாரையும் காணவில்லையே'' எனக் குழம்பினார் சீடர். ''புளிய மரத்திற்கு அருகில் போய் பார்'' என மஹாபெரியவர் கைகாட்ட, தலையில் காவித்துணியுடன் குரங்கு ஒன்று நின்றிருந்தது. 'யாரோ சாமியார் தான் வந்துவிட்டார் என நினைக்க இப்படி குரங்கைக் காட்டுகிறாரே' என்பதை அறிந்த சீடருக்கு சிரிப்பு வந்தது. மஹாபெரியவரும் அதைக் கண்டு மகிழ்ந்தார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
எஸ்.கணேச சர்மா
ganesasarma57@gmail.com

