ADDED : ஆக 22, 2014 02:30 PM

இசை அன்பர்களிடம் மிகவும் அன்பு கொண்டவர் காஞ்சி மகாபெரியவர்.
மகாபெரியவர் காலத்தில் காஞ்சி மடத்திற்கு வரும் பெண் சங்கீத வித்வான்கள், கச்சேரி செய்ய விரும்பினால், பெரும்பாலும் ஸ்ரீசந்திரமவுலீஸ்வரர் பூஜை நடக்கும் போது தான் பாடுவது வழக்கமாக இருந்து வந்தது.
வீணை தனம் அம்மாள், பெங்களூரு நாகரத்னம் அம்மாள் போன்ற சங்கீத விதூஷிகள் மடத்தில் பாடியுள்ளார்கள்.
சுமார் 25 ஆண்டு காலமாக, எம்.எஸ்.சுப்புலட்சுமி தனக்கு அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் மடத்திற்கு வந்து இன்னிசை விருந்து வழங்கியுள்ளார். குறிப்பாக, ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியன்று, இரவு பூஜை வேளையில் கானமழை பொழிந்து விடுவார். குறிப்பாக, 'சம்போ மஹாதேவ சம்போ' என பாடும்போது, சிவனே நேரில் வந்து காட்சி தருவது போன்ற பிரமை பக்தர்களுக்கு ஏற்படும்.
உலக அமைதிக்காக, மகாபெரியவர் ஸந்தேச வடிவில் இயற்றிய 'மைத்ரீம் பஜத' (நட்பை வளர்க்க) என்று தொடங்கும் பாடலை. உலகின் பல நாடுகளுக்கும் சென்று பாடியுள்ளார் எம்.எஸ். சுப்புலட்சுமி. ஐக்கிய நாடுகள் சபை விசேஷக் கூட்டம் ஒன்றிலும், அவர் இதைப்பாடி, சபை உறுப்பினர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டார்.
கர்நாடக சங்கீதத்தில் மிகவும் திறமை வாய்ந்த வித்வான் மதுரை மணி அய்யர் பாடும், பாபநாசம் சிவன் பாடல்கள், பாரதியார் பாடல்களை பெரியவர் ரசித்துக் கேட்பார்.
ஒரு சமயம் பெரியவர் சென்னையில் முகாமிட்டிருந்தார். ஒருநாள் காலை 5.30 மணி அளவில், மயிலாப்பூர் மாடவீதியில் பிரதட்சிணம் (வலம்) சென்று கொண்டிருந்த போது, மணி அய்யர் வீட்டு வாசலில் உறவினர்கள் அனைவரும், அவரைத் தரிசிக்க நின்று கொண்டிருந்தார்கள். பெரியவரோ, வாசலில் நிற்காமல் வீட்டுக்குள்ளேயே சென்று விட்டார். உறவினர்களும் அவரைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள் சென்றனர்.
அந்த நேரத்தில் மணி அய்யர் குளிக்கவில்லை. குளிக்காமல், எப்படி பெரியவர் முன் வருவது என்று சங்கோஜப்பட்டு, அவர் முன் வராமல் தள்ளி நின்றார். ஆனால், பெரியவர் அவரை அழைத்தார்.
''நீ எப்போதும் சுத்தமானவன் தான். சுத்தமான இதயம் உள்ளவன். இந்தா! இந்த மாலை உனக்கு...'' என்று ஒரு சீர்மாலையை எடுத்து அவருக்குக் கொடுத்து ஆசி வழங்கினார்.
உடலால் குளிக்க வேண்டும் என்பதை விட மனதால் குளித்திருக்க வேண்டும் என்பதை, பெரியவரின் இந்த நிகழ்ச்சி நமக்கு எடுத்துரைக்கிறது.
சி.வெங்கடேஸ்வரன்

