sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வ தரிசனம் (8)

/

தெய்வ தரிசனம் (8)

தெய்வ தரிசனம் (8)

தெய்வ தரிசனம் (8)


ADDED : டிச 02, 2016 10:48 AM

Google News

ADDED : டிச 02, 2016 10:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவல் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிற பெரும்பாலான கிராமத்து ஆலயங்களில், ஒரு திருச்சந்நிதியில் வரிசையாக ஏழு பெண்களின் திருவுருவத்தைப் பலரும் தரிசித்திருப்பீர்கள். இவர்களைத்தான் சப்தமாதர், சப்தகன்னியர் என்று அழைக்கிறோம். இந்த வழிபாடு பன்னெடுங்காலம் தொட்டு இருந்து வருகிறது.

'சப்த' என்றால் ஏழு. 'மாதர்' என்றால் பெண்கள். ஏழு பெண்கள் தான் சப்தமாதர்.

மனதில் தைரியம், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறன், மனக் குழப்பத்தை அகற்றுதல் போன்றவற்றை சப்தமாதர் நமக்கு அருள்வர்.

யார் இந்த சப்தமாதர்?

பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரே சப்தமாதர்.

யோகேஸ்வரி என்கிற தெய்வத்தையும் சேர்த்து 'அஷ்டமாதர்' என்றும் சொல்வண்டு. அதாவது, எட்டுப் பெண் தெய்வங்கள்.

சப்தமாதர்களின் அவதாரத்துக்குக் காரணம் அந்தகாசுரன் என்ற அசுரன்! எவர் ஒருவர் தன்னைக் கொல்லும் நோக்கத்துடன் போர் புரிகிறாரோ, அப்போது வெளியாகும் தன் ரத்தத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அந்தகாசுரன்கள் தோன்றி எதிரிகளை அழித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அவன் பெற்ற வரம். எனவே, அந்தகாசுரனை சம்ஹாரம் செய்ய பலரும் பயந்தனர். அவனது அட்டகாசம் அதிகரித்தது. தேவர்களைத் துன்புறுத்துவதைத் தன் வழக்கமாகக்

கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் இதைப் பொறுக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று புகார் செய்தனர். 'உரிய சந்தர்ப்பத்தில் அந்தகாசுரன் சம்ஹாரம் செய்யப்படுவான்' என்று அவர்களை அனுப்பி வைத்தார் சர்வேஸ்வரன்.

அவனது அக்கிரமங்களின் உச்ச கட்டமாக பார்வதிதேவியையே கவர்ந்து செல்ல, ஒரு முறை கயிலைக்கு வந்தான் அந்தகாசுரன். ஈசனுக்கும் அவனுக்கும் பெரும் போர் நடந்தது. அந்தகாசுரன் உடலில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியது. அவன் பெற்ற வரத்தின்படி, அதில் இருந்து ஆயிரக்கணக்கான அந்தகாசுரர்கள் தோன்றிக் கொண்டே இருந்தனர். ஈசனின் உதவிக்கு மைத்துனரான திருமாலும் வந்தார். ரத்தத்தில் இருந்து தோன்றிய அந்தகாசுரர்களைத் தன் படை கொண்டு அழித்தார்.

பிறகு அந்தகாசுரனைத் தன் சூலத்தால் கொத்தி எடுத்த கோலத்தில் நடனமாடத் தொடங்கினார் சிவன். தவிர, குத்தப்பட்டதால் அந்தகாசுரன் உடலில் இருந்து மேலும் வடியும் ரத்தத்தைத் தடுக்க 'யோகேஸ்வரி' எனும் சக்தியைத் தோற்றுவித்தார் சிவன். அசுரனின் உடலில் இருந்து மேலும் ரத்தம் சிந்தாமல் பார்த்துக்கொண்டாள் யோகேஸ்வரி. அப்போது தானே இவனது சம்ஹாரம் எளிதாகும்!

ஈசனுக்கு உதவும் நல்லெண்ணத்துடன் பிரம்மன், மகேஸ்வரன், திருமால், வராகமூர்த்தி, முருகன், இந்திரன், எமன் ஆகிய ஏழு பேரும் தங்கள் சக்திகளை ஏவி விட்டனர். இந்த சக்திகள் முறையே பிராம்ஹி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி என அழைக்கப்பட்டனர். அனைவரின் ஒத்துழைப்போடும் இறுதியில் அந்தகாசுரன் ஒழிக்கப்பட்டான்.

அந்தகாசுரனை ஈசன் அழித்தது, அட்ட வீரட்டானச் செயல்களுள் (சிவன் நிகழ்த்திய எட்டு வீரச்செயல்கள்) ஒன்றாகும். இந்த நிகழ்ச்சி நடந்த திருத்தலம் திருக்கோவிலூர்.

திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கி.பி. 600 முதல் கி.பி.700ம் ஆண்டு வரையிலான பல்லவர் மற்றும் பாண்டியர் பாணி கோவில்களில் சப்தகன்னியர் உருவங்கள் எங்கும் இடம் பெறவில்லை. முதன் முதலில் பல்லவ மன்னன் ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் கட்டி இன்றும் புராதனச் சின்னமாக விளங்கி வரும்

கைலாசநாதர் கோவிலில் தான் சப்தமாதர் இடம் பெற்றனர். இதற்கு அடுத்து எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்தரையர்களின் குடவரைக் கோவில்களிலும் சப்தமாதர்கள் இடம் பெற்றனர்.

அடுத்து இரண்டாம் ராஜேந்திர சோழன் காலம் வரை கட்டப்பட்ட கோவில்களில் சப்தமாதர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து சந்நிதி எழுப்பப்பட்டது. புதுக்கோட்டையை அடுத்த திருக்கட்டளை என்ற ஊரில் முதலாம் ஆதித்தன் காலத்திய சிவன் கோவில் ஒன்றில், கருவறையைச் சுற்றி ஏழு கோவில்கள்

அமைந்துள்ளன. அவற்றுள் ஒரு கோவிலில் சப்தமாதர்கள் பிரதிஷ்டை ஆகி உள்ளனர்.

ஆக, ஊர்மக்களைக் காக்கும் பொருட்டும், அவர்களை நிம்மதியாக வாழ்விக்கும் பொருட்டும் எட்டாம் நூற்றாண்டு முதல் 11ம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் சப்தகன்னியர் வழிபாடு சிறப்பாக இருந்திருக்கிறது.

தொல்லியல் துறை ஆய்வாளர்களின் கருத்துப்படி சப்தமாதர்களுக்குத் தனியாக சிறு கோவில்கள் அமைந்திருந்தன என்றும், காலப்போக்கில் அவை சிதைந்து விட்டபடியால், அங்கிருந்த விக்ரகங்கள் எடுத்து வரப்பட்டு, அதே ஊரில் உள்ள சிவன் கோவிலிலோ, கிராமப்புற தெய்வங்களுக்கான கோவிலிலோ வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

சப்தமாதர்களுக்கு இருந்து வந்த முக்கியத்துவத்தை இடைக்கால தமிழ் இலக்கியமான 'கலிங்கத்துப் பரணி' குறிப்பிடுகிறது. முதலாம் குலோத்துங்கனுக்குத் தளபதியாக இருந்தவன் கருணாகரத் தொண்டைமான். வரலாறு சிறப்பித்துக் கூறும் கலிங்கத்தை வெற்றி கொண்டான் இந்தத் தளபதி.

இந்த வெற்றியைச் சிறப்பித்து 'கலிங்கத்துப் பரணி' பாடினார் செயங்கொண்டார். இந்த நூலில் உள்ள கடவுள் வாழ்த்தில் சிவன், திருமால், பிரம்மன், சூரியன், விநாயகர், ஆறுமுகன், சரஸ்வதி, கொற்றவை ஆகிய தெய்வங்களைப் போற்றிய பின் சப்தகன்னியர்களுக்கும் தன் போற்றிகளைத் தெரிவிக்கிறார். இதிலிருந்து சப்தகன்னியர் வழிபாடு எத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது என்பதை உணர முடியும்.

எந்த விதமான துஷ்ட சக்திகளும் ஊருக்குள் நுழையாமல் காக்கின்ற சப்தமாதர்களுக்கு, பொங்கல் வைத்து இன்றைக்கும் வழிபட்டு வருகின்றனர் கிராம மக்கள்.

தமிழகத்தில் சப்தகன்னியர்களுக்கென்று அமைந்துள்ள கோவில்களில் பெரும்பாலானவை திருச்சியை ஒட்டியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி அருகில் உள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் சப்தமாதர் விசேஷமான கோலத்தில் எழுந்தருளி உள்ளனர். இந்தக் கோவிலில் முதலில் எழுந்தருளியவர்கள் சப்தமாதர்கள்தான். அவர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து அம்பாளும், பின்னாளில் சிவபெருமானும் இங்கே எழுந்தருளியதாக தல புராணம் சொல்கிறது.

லால்குடி அருகில் மயில்ரங்கம் என்கிற கிராமத்தில் சப்தமாதர்களுக்கு விசேஷமான திருக்கோவில் அமைந்துள்ளது. பிராம்மி, கவுமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி தெய்வங்கள் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவர்களின் மத்தியில் உள்ள வைஷ்ணவி 'கொங்கி அம்மன்' என்ற திருநாமத்துடன் வணங்கப்பட்டு வருகிறாள்.

லால்குடி அருகிலுள்ள வாளாடி, மணக்கால், குளித்தலை அருகே உள்ள கடம்பர் கோவில் போன்ற இடங்களிலும் சப்தமாதருக்கு பிரதான சந்நிதி உண்டு.

பிராம்மி மகப்பேற்றையும், மகேஸ்வரி மங்கலத்தையும், கவுமாரி இளமையையும், வைஷ்ணவி வளமான வாழ்வையும், வாராஹி அமைதியையும், இந்திராணி சொத்து சுகத்தையும், சாமுண்டி வெற்றியையும் தருபவளாக விளங்குகிறார்கள்.

இன்னும் தரிசிப்போம்...

பி. சுவாமிநாதன்






      Dinamalar
      Follow us