
புலவர் கம்பர், பகவான் கிருஷ்ணர் மீது பக்தி கொண்டிருந்தார். ஒருமுறை அவர் வித்தியாசமான காணிக்கையாக ஏதாவது கொடுக்க வேண்டும் என நண்பரிடம் ஆலோசித்தார்.
'' 40 படி பசும்பால் வாங்கிக் கொடுக்கலாம். அதனால் கிருஷ்ணரின் மனம் குளிரும்'' என்றார் அவர்.
''நண்பரே! பாற்கடல் நிறைய பால் இருப்பவருக்கு நாற்பது படி பால் பெரியதா? 5000 பசுக்கள் இருப்பவனிடம், கால் படி பால் வேண்டுமா எனக் கேட்பது போல் இருக்கிறது” என்றார்.
சற்று நேரம் யோசித்து, “கிருஷ்ணருக்கு பட்டு வேட்டி அணிவித்து அழகு பார்க்கலாமா?''என்றார் நண்பர்.
''அலங்காரப் பிரியரான அவரிடம் பட்டு ஆடைக்கா பஞ்சம்? தினமும் நுாறு பட்டுப்புடவை நெய்யும் நெசவாளியிடம் ஒரு நுால் கண்டை கொடுப்பது சரியா?'' எனச் சிரித்தார் கம்பர்.
“சரியப்பா! பதினைந்து பவுனில் மாலை செய்யலாமா?'' என்ற நண்பரிடம்,“அடேய்! படியளக்கும் மகாலட்சுமியை மனைவியாகக் கொண்டவர். அவரது இருப்பிடமான வைகுண்டம் முழுக்க லட்சுமி கடாட்சம் தான். அவரது மார்பில் மகாலட்சுமி நித்யவாசம் செய்கிறாள். அவருக்கு மாலை எதற்கு'' என்றார் கம்பர்.
நண்பர் குழப்பத்தில் ஆழ்ந்தார்.
“நாற்பது ஏக்கர் நிலத்தில் நந்தவனம் அமைத்து கைங்கர்யம் செய்யலாமா!”
“அடப்பாவி! அவர் இரண்டு பெண்டாட்டிகாரர். ஒருத்தி ருக்மணியாகிய லட்சுமி... அவள் செல்வத்துக்கு அதிபதி. மற்றொருத்தி சத்தியபாமா... அவள் தான் பூமிக்கே சொந்தக்காரியான பூமாதேவி. அதனால் நந்தவனம் தேவையில்லை''
“இனியும் யோசிக்க முடியாது. நீயே முடிவு செய்'' என்றார் நண்பர்.
“கண்டுபிடித்து விட்டேன்” எனச் சொல்லிய கம்பர், “என்னிடம் மலை போல் குவிந்து கிடக்கும் முட்டாள்தனத்தை ஒப்படைக்கப் போகிறேன். இதன்பின் கிருஷ்ணர் என்னை ஞானியாக வாழ வைப்பார் அல்லவா'' என்றார்.
அதைக் கேட்ட நண்பர் வியப்பில் ஆழ்ந்தார்.