
'விநாயகப் பெருமானை வணங்காமல் எந்த ஒரு செயலைச் செய்ய துவங்கினாலும் அது முழுமை பெறாது. வெற்றியும் கிடைக்காது' என்று சொன்னவர் யார் தெரியுமா?
சாட்சாத் சிவபெருமான்!
விநாயகப் பெருமானின் தந்தையான ஈசனே இதை அருளி இருக்கிறார். எங்கு சென்றாலும், எதைத் துவங்கினாலும் அவற்றுக்கு முன்னால் விநாயகரை நாம் வணங்கிட வேண்டும். அவ்வாறு செய்தால் எல்லாமே வெற்றிதான்!
இப்பேர்ப்பட்ட விநாயகரின் அவதாரமே சுவாரஸ்யமானது.
அகில உலகையும் காத்து ரட்சிக்கும் உமையம்மைக்குத் திடீரென ஓர் ஆசை வந்தது. தான் கொஞ்சி விளையாடுவதற்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும். இதுதான் ஆசை. அதுவும் இந்தக் குழந்தையைத் தானே உருவாக்க வேண்டும் என்று விரும்பி, மண்ணை உருண்டையாகப் பிடித்தாள். அதற்கு உயிரும் வடிவமும் கொடுத்தாள்.
அற்புதமான இந்தக் குழந்தையைக் காண தேவர்கள் அனைவரும் கயிலாசம் வந்தனர். சனி பகவானும் வந்தார். படக்கூடாதவரின் பார்வை குழந்தை மேல் பட்டு விட்டது. ஆம்! சனி பகவானின் பார்வை குழந்தை மேல் பட்டதும், தலை துண்டானது.
கிரகங்களின் போக்கில் தலையிட முடியுமா? உமை கதறினாள். உடனே ஈசன் தன் சிவகணங்களை எட்டுத்திக்கும் அனுப்பினார். “நீங்கள் செல்கிற இடத்தில் வடக்குத் திசை நோக்கித் தலை வைத்துப் படுத்திருக்கும் ஒரு உயிரினத்தின் தலையைக் கொண்டு வாருங்கள்,” என்று உத்தரவிட்டார். அதன்படி, ஒரு யானையின் தலை அடுத்த சில
விநாடிகளில் கொண்டு வரப்பட்டது. யானையின் தலை குழந்தையின் உடலில் பொருத்தப்பட... சிரித்துக் கொண்டே ஆனைமுகத்தோனான விநாயகன் எழுந்து விளையாட ஆரம்பித்தான்.
இது நிகழ்ந்தது ஆவணி மாதத்து சதுர்த்தி தினம். எனவே தான், அந்த நாளை விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம்.
'வி' என்றால் பெரிய, ஒப்புமை இல்லாத என்று உயர்வான பல பொருள் உண்டு. 'நாயகர்' என்றால் தலைவர், மேன்மையானவர் என்று பொருள்படும். ஆக, 'விநாயகர்' என்றால் ஒப்புமை இல்லாத தலைவர் என்று அர்த்தம்.
ஆதிசங்கரர் உருவாக்கிய ஆறு வழிபாட்டுப் பிரிவுகளில் 'காணாபத்யம்' என்கிற விநாயகர் வழிபாடும் ஒன்று.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியே குலதெய்வம் இருந்தாலும், பலரும் தங்களின் இஷ்ட தெய்வமாக விநாயகரை வணங்கி வருகின்றனர்.
விக்னங்கள்... அதாவது நம் பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்கும் கடவுளாக புராணங்கள் விநாயகரைச் சித்தரிப்பதால் இவர் 'மூல முதல்வன்' என்று போற்றப்படுகிறார்.
விநாயகரைத் துதிக்காமல் எந்த ஒரு காரியத்தைத் துவங்கினாலும், அது வெற்றியைத் தருவதில்லை. அதனால் தான் ஆலயங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் போன்ற எந்த ஒரு இடத்திலும் விசேஷமோ, திருவிழாவோ நடந்தால், அங்கே கணபதி பூஜைக்குத்தான் முதலிடம். விநாயகரைக் கூப்பிட்டால், அழைத்த மாத்திரத்தில் அடுத்த கணமே வந்து அமர்ந்து விடுவார். மஞ்சளைப் பிடித்து வைத்தாலும், பசுஞ்சாணியை உருட்டி வைத்தாலும், களிமண்ணைப் பிடித்து வைத்தாலும், வெல்லத்தைத் திரட்டி வைத்தாலும் மந்திரங்கள் உச்சரித்த மறுகணம் விநாயகர் அங்கே ஆஜர்!
இவரிடம் இருக்கும் சிறப்பு ஆலயத்தில் தான் குடியிருக்க வேண்டும் என்பதில்லை. தெருமுனையிலும், முச்சந்தியிலும், நாற்சந்தியிலும், அரசமரத்தடியிலும், குளக்கரையிலும், ஆற்றங்கரையிலும் இவரை பிரதிஷ்டை செய்து வழிபடுவது நம் பண்பாடு.
விநாயகரின் வடிவங்கள் 32 என்று ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
யானை முகம். தொப்பை வயிறு.
பார்ப்பதற்கு ஒரு குழந்தைத் தோற்றம், முறம் போன்ற காதுகள். வளைந்த தும்பிக்கை.
விநாயகர் சந்நிதிக்குச் சென்றவுடன் முதலில் அவரை பயபக்தியுடன் பார்த்து நெற்றியில் குட்டிக் கொள்வோம். நம் இரு நெற்றிப் பொட்டுகளிலும் சுறுசுறுப்பைத் தூண்டக்கூடிய நரம்பு மண்டலங்கள் அமைந்துள்ளன. இத்தகைய இடத்தில் இரு கைகளையும் மாற்றி வைத்து, அதாவது வலக்கை விரல்களை இடது நெற்றிப்பொட்டிலும், இடக்கை விரல்களை வலது நெற்றிப்பொட்டிலும் வைத்துக் குட்டிக் கொள்ளும்போது நம் நரம்பு மண்டலங்கள் தூண்டப்படுகின்றன. இதன் மூலம் ரத்த ஓட்டம் அங்கே சீர்படுகிறது. இதன் பலன்தான் நமக்குக் கிடைக்கும் சுறுசுறுப்பு!
நெற்றியில் குட்டிக் கொண்ட பிறகு, 'தோப்புக்கரணம்' என்று எளிமையாகச் சொல்லப்படும் 'தோர்பிகரணம்' போடுவோம். மெய்ஞானத்தையும் மீறிய
விஞ்ஞானத் தத்துவம் இந்த தோர்பிகரணத்தில் அடங்கி இருக்கிறது.
கைகளால் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோர்பி கரணம் போடும்போது, நம் உடலின் மூலாதாரம் எனப்படும் இடுப்பின் பின்பகுதியில் உள்ள
சக்தியானது மேலெழும்பி, தேகம் முழுவதும் ஒரு சுறுசுறுப்பு பரவுகிறது. இதன் மூலம் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். இது யோக முறை சார்ந்தது.
விநாயகரை வழிபடுவதற்குப் பெரிதாக எதுவும் தேவை இல்லை. ஒரு கொத்து அருகம்புல்லே போதும். இதை அவருக்கு சூட்டி மகிழ்ந்தாலே நமக்கு அருளி விடுவார். நம் பாவங்களைக் களைய வல்லது அருகம்புல். என்றாலும், விநாயகரை வணங்க மந்தாரை, பாதிரி, தும்பை, அரளி, முல்லை, எருக்கு, செவ்வரளி, பவளமல்லி போன்றவையும் விசேஷம் என்பார் அருணகிரிநாதர்.
ஆனைமுகத்தோன் ஆயிற்றே! யானைக்கு உண்டான தீனியைச் சொல்லி மாளுமோ?! எனவே, விநாயகருக்கான நைவேத்தியப் பட்டியலில் எண்ணற்ற அயிட்டங்கள் உண்டு.
விநாயகப் பெருமானுக்கு உகந்த நிவேதனம் என்று அருணகிரிநாதர் 21 பொருட்களைப் பட்டியலிடுவார். அவையாவன: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன் (இனிப்பு சீயம்), பிட்டு, தேன், தினைமாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயாசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள் உருண்டை, வடை, அதிரசம்.
ஒவ்வொரு ஊரிலும் விநாயகப் பெருமான் கோவில் கொண்டிருப்பதற்கு ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. இந்த வகையில் புராணக் கதைகளைச் சார்ந்த பல கிராமங்களில் பல்வேறு திருநாமங்களுடன் விநாயகப் பெருமான் அருளி வருகிறார்.
நவக்கிரக தோஷங்கள் அகல்வதற்கு விநாயகரை வணங்கினால் பலன் கண்கூடு.
விநாயகருக்கு விரதம் இருந்தால் உடல் ஆரோக்கியம் சிறக்கும். எல்லா நிலையிலும் நம்மை முதன்மையானவராகப் பார்த்துக் கொள்வார் விநாயகர். சகல வளங்களையும் தந்து, சதா சந்தோஷத்தையே வழங்குவார் அவர்.
இன்னும் தரிசிப்போம்...
பி. சுவாமிநாதன்