sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வ தரிசனம் (4)

/

தெய்வ தரிசனம் (4)

தெய்வ தரிசனம் (4)

தெய்வ தரிசனம் (4)


ADDED : நவ 04, 2016 11:58 AM

Google News

ADDED : நவ 04, 2016 11:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படைக்கும் கடவுளாக பிரம்மனும், காக்கும் கடவுளாக மகாவிஷ்ணுவும், அழிக்கும் கடவுளாக ருத்திரனும் விளங்குகின்றனர். பிரம்மன், மகாவிஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளை வழிபடுவதால் உண்டாகும் பெரும்பேறு, முருகப்பெருமானை வழிபட்டாலே நமக்குக் கிடைத்து விடும்.

பாரம்பரியமான இந்து மதத்தில் இந்த மூன்று கடவுளர்களே பிரதான தெய்வங்களாகப் போற்றப்படுகின்றனர்.

அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களின் தொகுப்பே 'ஓம்' என்ற சொல் ஆகும். இதில் முதலில் இருக்கும் 'அ'காரம் விஷ்ணுவையும், 'உ'காரம் ருத்திரனையும், 'ம'காரம் பிரம்மனையும் குறிக்கிறது. இந்த மூன்று எழுத்துக்களும் ஒன்று சேர்ந்து அகார, உகார, மகார வடிவுடைய ஒன்றாக 'ஓம்' என்னும் எழுத்தாகத் திகழ்கிறது. 'ஓம்' என்பது முருகப் பெருமானின் வடிவம். எனவே, 'ஓம்' என்பதற்குள் மும்மூர்த்திகள் அடங்குவதால் முருகனை வழிபட்டாலே அனைத்து பலன்களையும் பெற்றவர்கள் ஆகி விடுவோம்.

'சைவம், வைணவம், கவுமாரம், கணாபத்யம், சாக்தம், சவுரம் என்னும் ஆறு சமயங்களுக்கும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்னும் ஆறு ஆதாரங்களுக்கும், வன்மை, பதம், மந்திரம், புவனம், தத்துவம், கலை ஆகிய ஆறு வழிகளுக்கும் முதல்வன் ஆறுமுகனே' என்று முருகப் பெருமானைப் போற்றுவார் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள். எத்தனையோ தெய்வங்களை நாம் வழிபடுகிறோம். குலதெய்வம் என்கிறோம். இஷ்ட தெய்வம் என்கிறோம். ஆனால் எந்த ஒரு தெய்வத்துக்கும் இல்லாத அருமை பெருமை நம் முருகப் பெருமானுக்கு இலக்கியத்தில் உண்டு. அதுதான் 'தமிழ்க் கடவுள்' என்கிற அடைமொழி. முருகன் வழிபாடு பன்னெடுங் காலமாகத் தமிழர்கள் போற்றி வருவது! தொன்றுதொட்டு இருந்து வரும் வழிபாடு! 'தமிழ்க் கடவுள்' என்கிற பதத்தை எவர் ஒருவர் சொன்னாலும், அது முருகப்பெருமானை மட்டுமே குறிக்கும். ஆனாலும் இந்தத் தமிழ்க் கடவுளுக்குத் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும், ஏன் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தோனேஷியா, ஐரோப்பா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, அமெரிக்கா என்று உலகம் முழுவதும் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன.

இருந்தாலும் அவற்றுள் சிறப்பித்துச் சொல்லப்படுவது அறுபடை வீடுகள் எனப்படும் ஆறு திருத்தலங்கள். நக்கீரர் வரிசைப்படுத்திச் சொன்ன இந்த ஆறு

ஆலயங்களும் தமிழகத்தில் உள்ளன.

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்துக்கும் உரிய தலைவனாக அதாவது கடவுளாகப் போற்றப்படுகிறான் முருகப் பெருமான். என்றாலும், மலைகள் மட்டும் அல்லாமல், நிலப் பகுதிகளிலும் அவன் எண்ணற்ற கோவில்கள் கொண்டு அருள்பாலித்து வருகிறான். கந்தன், சரவணன், காங்கேயன், சிலம்பன், சிவகுமாரன், சேனாதிபதி, ஆறுமுகன், கார்த்திகேயன், வேலன், குமாரன், சுவாமிநாதன், குருநாதன் இப்படி முருகப்பெருமானுக்கு ஏராளமான திருநாமங்கள் உண்டு. தன்னை வணங்கும் பக்தர்கள் வாழ்வில் நலம் பெறுவதற்கு எண்ணற்ற அருள் நிகழ்வுகளைப் புரிபவர்.

முருகப்பெருமானைப் பாடிப்பரவசப் பட்டோர் பட்டியல் மிக நீண்டது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக அகத்தியர், அவ்வையார், நக்கீரர், அருணகிரிநாதர்,பாம்பன் சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், சமீப காலத்தில் வாழ்ந்த வாரியார் சுவாமிகள் என்று குறிப்பிடலாம். ஆதிசங்கரர் தனது சுப்ரமண்ய புஜங்கத்தைப் பாடும்போது, 'முருகப் பெருமானே...எனக்குச் சொல்லும் தெரியாது; பொருளும் புரியாது. ஓசையும் தெரியாது; உரைநடையும் தெரியாது. ஆனாலும், உன் ஆறுமுகங்களையும் எனது உள்ளத்தில் நினைத்து வழிபடத் தொடங்கினால், அருமையான வாக்குகளெல்லாம் தாமாகவே உண்டாகின்றன. என்னே உன் கருணை' என்று மெய்சிலிர்க்கிறார்.

முருகப் பெருமான் வழிபாடு குறித்து காஞ்சி மகா பெரியவர் சொல்வார் 'சுவாமி என்ற சொல்லை நம் நாட்டில் பொதுவாக இறைவனைக் குறிக்க வழங்குகிறோம். குமரக்கடவுளுக்கே அந்தப் பெயர் முதன் முதலாக வழங்கிற்று என்பதை அமரகோசத்தில் வரும் 'தேவஸேநாபதி: சூர: ஸ்வாமீ கஜமுகாநுஜ' என்ற தொடரிலிருந்து அறியலாம்.'

பிரம்மச்சாரியாகவும், குடும்பஸ்தராகவும், சந்நியாசியாகவும் என்று பல்வேறு நிலைகளில் முருகப்பெருமானைத் தரிசிக்க முடியும். வேறு எந்த ஒரு தெய்வத்துக்கும் இல்லாத சிறப்பு இது.

எப்படி முருகன் என்றால் அழகு என்று பொருள் உள்ளதோ, அதுபோல் கந்தன் என்றால் கருணை என்றொரு பொருளும் உண்டு. கலியுகத்தில் மக்களைக் காத்து அருள்புரிகின்ற கருணை தெய்வமாக கந்தக் கடவுள் விளங்குகிறார். எல்லா தெய்வ அவதாரத்துக்கும் ஒரு கதை உண்டு. ராவணனை அழித்து அவனது ஆணவத்தை ஒழித்தவர் ஸ்ரீராமபிரான்.

துரியோதனனை அர்ஜுனன் மூலமாகக் கொன்று, அவனது ஆணவத்தை அழித்தவர் கிருஷ்ண பரமாத்மா. ராவணனுக்கும், துரியோதனனுக்கும் குறைவில்லாமல் ஆணவத்துடன் திரிந்தவன்தான் சூரபத்மன் என்னும் அரக்கன். ஆனால், சூரபத்மனை முருகப் பெருமான் கொல்லவில்லை. அவனது ஆணவத்தை மட்டும் கொன்று, அவனை இரண்டாகப் பிளந்து மயில், சேவல் என்ற இரு உயிர்களாக மாற்றி ஒன்றைத் தனது வாகனமாகவும், மற்றொன்றைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொண்டார்.

முருகனை வணங்குகின்றவர், சூரபத்மனையும் வணங்குவதாகத்தான் அர்த்தம். ஆக, முருகப் பெருமான் தன்னை வணங்காதவர்களையும், தன்னை மறுப்பவர்களையும் அருட் கருணை கொண்டு ஆட்கொள்கின்றான் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

முருகனை வழிபடுவதற்கு எண்ணற்ற துதிகள் இருந்தாலும், ஸ்ரீபாலதேவராய சுவாமிகளின் கந்தசஷ்டி கவசமும், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் ஸ்ரீசண்முக கவசமும், ஸ்ரீசாந்தானந்த சுவாமிகளின் அருள்வாக்கில் வெளிப்பட்ட ஸ்ரீஸ்கந்தகுரு கவசமும் மிகவும் சிறந்தவை. கவசம் என்பது நம்மைக் காக்கக்கூடியது. ஆயுதங்களுடன் நம்மைத் தாக்க வரும் எதிரிகளிடம் இருந்து காத்துக் கொள்வதற்குக் கவசம் பேருதவி புரிகிறது. அதுபோல் பெரும் வல்வினைகள் நம்மை விட்டு அகல்வதற்கு கவச நூல்கள் துணை புரிகின்றன. அந்த வகையில் மேலே குறிப்பிடப்பட்ட கவச நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

முருகப் பெருமானைக் குறித்து விரதம் இருக்க கிழமைகளில் திங்களும்,செவ்வாயும் உகந்தவை. திதிகளில் சஷ்டியும், நட்சத்திரங்களில் விசாகமும் கார்த்திகையும் சிறந்தவை. 'கந்தனிடம் செல்லுங்கள். என்ன வேண்டும் சொல்லுங்கள்....' எல்லாவற்றையும் அருளக் காத்திருக்கிறான் அந்த கருணைக் கடவுள்!

இன்னும் தரிசிப்போம்...

- பி. சுவாமிநாதன்






      Dinamalar
      Follow us