sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வ தரிசனம்! (6)

/

தெய்வ தரிசனம்! (6)

தெய்வ தரிசனம்! (6)

தெய்வ தரிசனம்! (6)


ADDED : நவ 18, 2016 12:08 PM

Google News

ADDED : நவ 18, 2016 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்துக்களின் வாழ்க்கையில் புனித நீராடுதலின் அவசியம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. புனிதம் நிரம்பிய தீர்த்தங்களில் நீராடும்போது நமது பாவங்கள் அகல்கின்றன.

அந்த வகையில் பாரத தேசத்தில் பாய்கின்ற அனைத்து நதிகளையும் நோக்கி எல்லா நாட்களிலும் பக்தர்கள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவிரி என்று பிரபலமான நதிகளை வரிசைப்படுத்தும் போது, காவிரி 'நம்மூர் நதி' என்று நாம் அனைவரும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

காவிரியின் பிறப்பு பற்றி அதிகம் சொல்லப்படக் கூடிய புராண நிகழ்வு இதுதான்.

வட திசையில் இருந்து தெற்கு நோக்கிப் பயணித்து வருகிறார் அகத்தியர். குடகு மலைப் பகுதியை அடைந்ததும், தன் கையில் இருந்த கமண்டலத்தைக் கீழே வைத்து விட்டு தியானம் செய்யத் துவங்குகிறார்.

அப்போது அங்கு பறந்து வந்த ஒரு காகம், தன் அலகால், கமண்டலத்தைத் தரையில் சாய்க்க... அதற்குள் இருந்த நீர் ஓட ஆரம்பித்தது. காகம் தட்டிய நீர் விரிந்து பாய்ந்து சென்றதால் காவிரி நதி ஆனது. (அகத்தியரின் மனைவி லோபாமுத்திரையே காவிரி ஆனதாகவும் செய்தி உண்டு).

இதைக் கண்டு கோபமான அகத்தியர், காகத்தைப் பார்த்து சாபம் கொடுக்க முற்பட... காகம் விநாயகராக மாறி நின்றது. உடனே, நெற்றியில் குட்டிக் கொண்டு விநாயகரை அகத்தியர் வணங்கினார். சரி.. காகமாக வந்த விநாயகர் ஏன் இந்த கமண்டலத்தை தரையில் சாய்க்க வேண்டும்?

சீர்காழியில் நித்தமும் சிவ பூஜை செய்து கொண்டிருந்தான் இந்திரன். ஆனால், ஈசனை வணங்க போதிய மலர்கள் கிடைக்கவில்லை. காரணம், அவன் பராமரித்து வந்த நந்தவனம் உரிய நீர் இன்றி பூக்காமல் இருந்தது. 'சிவ பூஜைக்குப் பூக்கள் வேண்டுமே' என்று நாரதரிடம் தன் கவலையை வெளிப்படுத்தினான் இந்திரன்.

'அகத்தியர் தன் வசம் வைத்திருக்கிற கமண்டலம் கீழே சாய்க்கப்பட்டால் உன் நந்தவனம் பொலிவு பெறும். சிவ பூஜையும் சிறக்கும்' என்று நாரதர் சொன்னார். அதன்படி விநாயகரிடம் வேண்டுகோள் வைத்தான் இந்திரன்.

பிறகு தான், காகம் வடிவில் குடகுக்கு சென்று கவிழ்த்து விட்டு வந்தார் விநாயகர்.

காவிரி உருவாகிற குடகு மலை தலைக்காவிரியில் அன்னை காவிரிக்கு விக்ரகம் உண்டு. இங்கிருந்து புறப்படும் காவிரியை ஆராதிக்க தினமும் திரளான

பக்தர்கள் வருகின்றனர்.

மடிகரே கோட்டை அருகே ஒரு கட்டுமானப் பணிக்காக பூமியைத் தோண்டும்போது காவிரித்தாயின் பழங்கால விக்ரகம் ஒன்று ஒரு சில வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது. தமிழகத்தில் காவிரிக்கரை ஓரம் எண்ணற்ற கோவில்கள் அமைந்துள்ளன.

தமிழகப் பகுதியில் காவிரி அன்னைக்கான முதல் கோவில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அமைந்துள்ளது. அருவி போல் காவிரி பெருக்கெடுத்து ஓடும் ஒகேனக்கல்லில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் மூன்றரை அடி உயரத்தில் காவிரியம்மன் தரிசனம் தருகிறாள். இங்குள்ள இறைவன் தேசநாதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். காசியில் இருக்கிற விஸ்வநாதரே இங்கு 'தேசநாதீஸ்வரர்' என்ற திருநாமம் கொண்டிருக்கிறார் என்பர்.

கங்கைக்கு இணையாகக் கருதப்படுகிறது இங்கு பாய்கிற காவிரி.

காவிரியம்மனைக் குலதெய்வமாகக் கொண்டாடுபவர்கள் ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகம்.

குலதெய்வக்காரர்கள் பெரும் திரளாக இங்கே கூடி வழிபடுவது ஆடிப் பெருக்கன்று (ஆடி18). அன்றைய தினம் காவிரியம்மனுக்குப் புடவை சார்த்தி, வளையல் அணிவித்து மகிழ்வார்கள். தவிர, வருடம் முழுக்கத் தங்களைக் காத்து வாழ வைக்கும் காவிரியம்மனுக்கு அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றைத் தாய் வீட்டுச் சீதனமாக வழங்குகின்றனர்.

பவானி, கொடுமுடி (கொடுமுடி காவிரி தீர்த்தம் பழநி முருகப் பெருமானுக்கு காவடியில் சுமந்து செல்லப்பட்டு அபிஷேகம் நடக்கிறது), ஸ்ரீரங்கம், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற ஊர்களில் ஆடி பெருக்கன்று அன்னை காவிரியை வழிபட்டுத் தங்கள் நன்றியைத் தெரிவிக்க கிராம மக்கள் பலரும் கூடுவர். இந்தக் காலத்தில் காவிரி அன்னை மசக்கையாக (கர்ப்பிணியாக) இருப்பதாகக் கருதி, கலந்த சாதங்களை (சித்ரான்னம்) படைத்து உறவினர்களுடன் உண்டு மகிழ்வர்.

ஆடிப் பெருக்கின்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலய உற்ஸவரான நம்பெருமாள் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருள்வார். பிறகு, காவிரித் தாய்க்குச் சிறப்பு வழிபாடு நடக்கும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கரையில் கூடி நின்று, பெருமாளையும் காவிரியையும் தரிசிப்பார்கள்.

துலா மாதம் என்று சொல்லப்படும் ஐப்பசி மாதம் முழுக்க தினமும் காவிரி நீரில்தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்குத் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். இது காவிரிக்குப் பெருமாள் தரும் அங்கீகாரம். ஐப்பசி தவிர, ஏனைய பதினோரு மாதங்களில் கொள்ளிட நீரைக் கொண்டு பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும். கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் வழித்தடத்தில் 14 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருச்சேறை. இங்கே மூலவரான சாரநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்கிற ஐந்து தேவியர்களுடன் கருவறையில் காட்சி தருகிறார். பெருமாளுக்கு இடப்புறம் காவிரித் தாயும் திருக்காட்சி தருகிறாள்.

கங்கைக்கு இணையான பெருமையும் புகழும் தனக்கு வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன் காவிரி அன்னை, இங்குள்ள சார புஷ்கரணியின் மேற்குக் கரை அரசமரத்தடியில் அமர்ந்து சாரநாத பெருமாளை நோக்கி தவம் இருந்தாள். (இன்றைக்கும் புஷ்கரணியின் மேற்குக் கரையில் காவிரிக்குத் தனி சந்நிதி உண்டு).

காவிரி அன்னையின் தவத்துக்கு இரங்கிய பெருமாள் ஒரு குழந்தை வடிவில் காட்சி தந்து, காவிரியின் மடியில் தவழ்ந்தார். காவிரி கேட்ட வரத்தையும் அருளினார். பின் கருட வாகனத்தில் தனது ஐந்து தேவிகளுடன் திருக்காட்சி தர... 'இதே திருக்கோலத்தில் தாங்கள் எப்போதும் இங்கே தரிசனம் தர வேண்டும்' என்று காவிரி கேட்டுக் கொண்டாள். காவிரிக்குக் கிடைத்த தரிசனத்தைத் தான் இன்று திருச்சேறை கருவறையில் தரிசிக்கிறோம்.

காவிரி அன்னைக்கு ஐந்து தேவிகளுடன் பெருமாள் திருக்காட்சி கொடுத்தது ஒரு தைப்பூச தினம். வைணவக் கோவில்களில் தைப்பூசத் திருவிழா அபூர்வம். ஆனால், திருச்சேறையில் காவிரிக்குக் காட்சி கொடுத்த இந்த நிகழ்வு தைப்பூசத்தை ஒட்டி இங்கு பத்து நாள் கொண்டாட்டமாக திமிலோகப்படும். சாரநாதப் பெருமாளை வணங்கினால், காவிரியில் நூறு முறை நீராடிய பலன் கிடைக்கும்.

இது தவிர, காவிரிக்குப் பெருமாள் செய்த இன்னொரு அனுக்ரஹம் ஆச்சரியமானது. 'கங்கை என் திருவடிகளில் இருந்து பிறந்தாள். ஆனால், காவிரியோ எனக்கு மாலையாகி, என் இதயம் அருகே வசிப்பதால் கங்கையை விட புனிதமாகிறாள்' என்று அருளினார்.

அதென்ன மாலை?

பெருமாளுக்கு மூன்று புனித தலங்கள் காவிரிக்கரையில் சிறப்பு. அவை ஸ்ரீரங்கபட்டினம் (ஆதி ரங்கா), சிவசமுத்திரம் (மத்திய ரங்கா), ஸ்ரீரங்கம் (அந்திய ரங்கா). இந்த மூன்று ஊர்களிலும் காவிரி நதி பெருமாளைச் சுற்றி ஒரு மலர்மாலை போல் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் தரிசிப்போம்...

பி. சுவாமிநாதன்






      Dinamalar
      Follow us